செய்திகள்

சாலை விதி மீறல்கள்: உறுதியுடன் செயல்படுமா போக்குவரத்து காவல்துறை?


ஆர். முத்துக்குமார்


தமிழகத்தில் சாலை விதிகளை மீறினால் அபராதம் மிக அதிகமாக கட்டும் முறை அமுலுக்கு வந்து விட்டது. தமிழக அரசின் புதிய அரசாணையின்படி விதிக்கப்படும் அபராதம் குறித்த விவரங்கள் வருமாறு:

பதிவுச் சான்றிதழைப் புதுப்பிக்கத் தவறுவோர், சிக்னலை மீறுவோர், ஆபத்தான நிலையில் வாகனங்களை நிறுத்துவோர், குறிப்பிட்ட காலத்துக்குள் வாகன ஆவணங்களை பெயர் மாற்றாமல் இருப்போர், வாகன ஆவணங்களைக் கேட்கும்போது வழங்காதோர், ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணிப்போர், பாதுகாவலர் இல்லாத தண்டவாளத்தை விதிகளை மீறிக் கடப்பவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து முதல் முறை ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.

இதேபோல பயணச்சீட்டு இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்தாலோ, ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை சரிவர பணிபுரிய விடாமல் தடுத்தாலோ ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். பேருந்துகளில் பயணிகளை ஏற்ற மறுத்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

சொந்த வாகனத்தை வாடகைக்கு அனுமதித்தாலோ அல்லது ஓட்டுநர் உரிமம் வாங்காமல் வாகனத்தை இயக்கினாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முறைகேடு செய்தாலோ, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது குற்றச்சாட்டுகளை மறைத்தாலோ ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

மேலும் வாகனத்தை விதிகளை மீறி மாற்றியமைத்தால், ஒவ்வொரு மாற்றத்துக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்படும். ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கினால் முதல் முறை ரூ.1,000, அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும்.

இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேற்பட்டோர் பயணித்தால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். தடை செய்யப்பட்ட இடத்தில் தேவையில்லாமல் ஒலி எழுப்பினால் முதல் முறை ரூ.1,000 அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும்.

இதேபோல பொது இடங்களில் காற்று, ஒலி மாசு ஏற்படும் வகையிலும் சாலைப் பாதுகாப்பை மீறியும் வாகனத்தை இயக்குவோருக்கு முதல் முறை ரூ.10 ஆயிரம், அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும்.

கூடுதல் பாரத்துடன் கனரக வாகனங்களை இயக்கினால் ரூ.20,000 மற்றும் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் சாலை விதி மீறல்கள் குறையுமா? பல பகுதிகளில் விதி மீறல்கள் சிறு அளவு கூட குறையவில்லை என்பது தான் உண்மை.

அபராதம் மிக அதிகம் என்ற அச்சத்தை ஏற்படுத்தினாலும் போக்குவரத்து போலீசாரை டிமிக்கி கொடுத்து விட்டு தப்பித்து போவோர் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் வரை குற்றங்கள் குறையாது.

போக்குவரத்து போலீசார் அருகேயே ஹெல்மெட் அணியாமல், கார் ஓட்டுனர் சீட் பெல்ட் போடாமல் சாலையில் தவறான எதிர் திசையில் செல்வோரை விட்டு விடுவது போன்ற செயல்களை போக்குவரத்து போலீசார் செய்வதைப் பற்றி நிபுணர்கள் ஆலோசிக்க வேண்டும்.

வீடியோ கேமராக்களில் அப்படிப்பட்ட குற்றங்களை கண்டு கொள்ளாமல் மெய் மறந்து இருக்கும் காவல் துறையினரையும் அல்லவா குற்றம் செய்வதாக அறிவித்து அபராதம் செலுத்த வைத்தால் ஒரு கட்டத்தில் தவறு நடக்காத நிலை தமிழகத்தில் ஏற்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *