செய்திகள்

சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க விரைவில் செயலி அறிமுகம்

அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை, செப்.23-–

சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க செயலி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் தரமான சாலைகள் அமைப்பது குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

சாலைகள் பராமரிப்பிற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். தரமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முதலமைச்சரின் ‘விபத்தில்லா தமிழகம்’ என்ற இலக்கை அடைய, சாலைகள் அனைத்தும் பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்கப்பட வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகளாக இருந்தாலும், அவற்றில் குழிகள் இருந்தால் அதை சீர் செய்ய திட்ட இயக்குனர் மற்றும் மண்டல அலுவலர் ஆகியோரிடம் அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், சென்னை-கன்னியாகுமரி சாலை மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களில், தார்சாலை போடும்வரை போக்கு வரத்துக்கு ஏற்றவாறு சாலைகளை பராமரிக்க வேண்டும்.

மேம்பாட்டு பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களிடம் சாலைகளை ஒப்படைத்த பின், அச்சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை அவ்வப்போது சீர்செய்து, பணியை முடிக்கும் வரை பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு அந்த ஒப்பந்ததாரரிடமே உள்ளது. அதை உறுதி செய்ய வேண்டியது, பொறியாளரின் கடமை. ஆனால், அந்த ஒப்பந்ததாரர், தார் பணி செய்யும் வரை பள்ளங்களுடனே சாலைகள் வைத்துக் கொண்டிருப்பதால் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

மழைக் காலத்திற்குள்….

அனைத்து சாலை பணிகளையும் வரும் அக்டோபரில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்க வேண்டும். பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள், வடிகால்களில் உள்ள செடிகள், முட்புதர்கள் போன்ற தடைகள் நீக்கப்பட வேண்டும். மழை பெய்தவுடன் கள ஆய்வு செய்து, எங்கு மழைநீர் தேங்குகிறது? எங்கு சாலையை மழை நீர் கடக்கிறது? போன்றவற்றை ஆய்வு செய்து, அவற்றை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசர கால பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மழைக்காலத்தில் வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் பாதசாரிகளின் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான நீரேற்று பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜவகர்லால் நேரு சாலை, கத்திப்பாரா முதல் கோயம்பேடு வரை, ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, ராமபுரம் சாலை, கொளத்தூர் சாலை, சென்னை ‘தினத்தந்தி’ அலுவலகம் முன்பு, ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

இந்த ஆண்டு நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக 46 பணிகளுக்கு ரூ.105 கோடி மதிப்பில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துப் பணிகளும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க ஒரு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *