சிறுகதை

சார் – ராஜா செல்லமுத்து

வானத்திற்கு மேலே, பால்வழி எல்லாம் கடந்து நட்சத்திரங்களின் ஊடே மேகங்களில் குளித்து மேகங்களில் தலை துவட்டி விட்டு பூமிக்கு வரும் பூ பாேல தான் அவள் பேசாதவரை நான் இருந்தேன்.

அவள் பேசிய பிறகு இந்தப் பிரபஞ்சம் என் பிள்ளைத் தமிழானது. அவள் கொஞ்சும்மொழி கேட்கும்போதெல்லாம் பஞ்சு கொண்டு தடவுவது போல் ஒரு லயிப்பு.

அவள் எப்போது எனக்கு போன் செய்வாள். அவள் எப்போது என்னுடன் உரையாடுவாள் என்று என் பொழுதுகள் எல்லாம் வளர்ந்து கிடந்தன.

நித்யா என் உலகில் அவள் தான் தலைவி. அவள் இதழ் திறந்து பேசும் பேச்சுக்கு என் இதயம் வாசற் கதவைத் திறந்து கொண்டு வழி பார்க்கும்.

அவள் விழிகள் காதல் பிழிந்து, காதல் பிழிந்து காதல் செய்த ஒரு காதல் கதை இது.

அன்பின் அரவணைப்பில் வந்து விழும் வார்த்தைகள். வார்த்தைக்கு வார்த்தை சார் சேர்த்துக் கூப்பிட்டாள்.

உற்சாகமாகப் பூத்துக்குலுங்கும் அப்படி ஒரு அழகிய வார்த்தைகளை அவள் உதடுகள் உச்சரிக்கும்.

அவள் பேசும் போது இதயக்கமலம் விரியும்.

நித்யா இந்த ஒற்றை வார்த்தைக்குள் ஓராயிரம் மின்னல்கள் புதைந்து கிடந்தன. லட்சோப லட்சம் நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன.

ஆனால் அந்தத் தேவதை வாய் திறக்கும் போதெல்லாம் சார் என்று என்னை அழைப்பது காதலின் சாரம் சற்று வழிந்து நின்றது.

அந்நியோன்யம் அறுந்து விழுந்தது. நெருக்கம் நெருப்பிட்டு கொண்டது. புளகாங்கிதம் புறம் தள்ளி சென்றது. காதல் கவிதை கிடைத்தது.

‘ஏன் என்ன சார் னு கூப்பிடுறே?’ என்று கேட்டால்,

மரியாதை நிமித்தம் என்று மரியாதையாகப் பதில் சொல்வாள்.

அன்பின் வாசலுக்கு இது தரவுகள் இல்லையே? என்று நான் அடிக்கடி சொன்னாலும் அவள் சார் என்ற வார்த்தையை சற்றும் அவள் உதடுகள் விலக்குவதில்லை.

ஒரு மணி நேரம் பேசி இருந்தால் அதில் ஆயிரம் சார் வந்து விழுந்திருக்கும்.

இந்தக் காதல் என்ற பாவனையில் அன்பு சேராமல் இருந்தது.

அன்பின் பசை அப்பிய அந்த நெருக்கம். சாரம் சாரால் சற்று தள்ளியே இருந்தது.

சார்…. சார் என்று அழைத்தாளே ஒழிய ஒரு போதும் அவள் என்ன நினைத்திருப்பாள் என்பது எனக்குத் தெரியாது.

கோடி வேர்கள் ஊன்றிய காெலு மண்டபத்தில் அவளின் காதல் ஆலமரம் விழுது விட்டு விளைந்து இருந்தது.

ஆனால் சார் என்ற வார்த்தை தான் என்னை சாகடித்தது.

இவள் எனக்கானவளே இல்லை ஒப்புக்குப் பேசிவிட்டு தள்ளி நிற்கிறாள். தவிர இவள் என்னை சார் என்று கூப்பிட வேண்டும்.

இரவுகள் எல்லாம் சார் என்ற வார்த்தைக்குள் சங்கமித்து கிடந்தன. அவள் இவ்வளவு சொல்லியும் சார் என்ற வார்த்தையை தான் பயன்படுத்தினாள்.

உங்கள் படிப்பு, அழுத்து இதெல்லாம் தான் நான் சார் னு கூப்பிடுகிறேன் .இது மரியாதை நிமிர்த்தம் என்று சாென்னாள்.

எனக்குள் தேவதையாகவே தெரிந்தாள்.

தேவதை சார் என்றாள் வார்த்தைக்குள் சறுக்கி விழுந்து கிடந்தது.

இன்று என்னை சார் என்று சொன்னவள் என் அருகில் இல்லை.

நான் தான் சார் சார் ஆகவே இருக்கிறேன். அவள் யார் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது.

ஆனால் ஒன்று நிச்சயமாக சொல்லமுடியும். அன்பிற்கு அந்நியோன்னியம் தேவை. மரியாதை தேவையில்லை. மரியாதை தரும் அன்பு கடைசி வரைக்கும் நிற்பதில்லை.

அதற்கு நான் ஓர் உண்மையான உதாரணம்.

Leave a Reply

Your email address will not be published.