செய்திகள்

சார்ஜர் போட்டு தூங்கியதால் செல்போன் வெடித்தது: 4 குழந்தைகள் தீயில் கருகி பலி

லக்னோ, மார்ச் 26–

சார்ஜ் போட்டு தூங்கியதால், செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி பலியான நிலையில், பெற்றோர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் மோடிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜானி. இவருக்கு மனைவியும் 4 குழந்தைகளும் இருந்துள்ளனர். இரவில் குழந்தைகள் தங்களது அறையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது, செல்போனில் சார்ஜ் குறைய ஆரம்பித்துள்ளது. அருகில் போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளனர்.

நள்ளிரவில், செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக செல்போன் வெடித்து அருகில் இருந்த பொருட்களில் தீ மளமளவென பரவியுள்ளது. இதில் குழந்தைகள் அனைவரும் அத்தீயில் சிக்கிக் கொண்டனர். இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது அவர்களும் தீயில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

4 குழந்தைகள் பலி

உடனடியாக அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்து அவர்களை காப்பாற்றியுள்ளனர். பின்னர், அருகில் உள்ள எல்எல்ஆர்எம் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 வயதான கல்லு, ஆறு வயதான கோலு, எட்டு வயதான நிஹாரிகா மற்றும் 12 வயதான சரிகா ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். பெற்றோர்களான ஜானியும், பபிதாவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போன் உபயோகப்படுத்த கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டாலும் மோதுமான விழிப்புணர்வு, குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் இல்லாதிருப்பதே இத்தகைய சம்பவத்திற்கு காரணம்.

இரவு நேரங்களில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு பலரும் தூங்கிவிடுகிறார்கள். முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் சுவிட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருப்பதால் பேட்டரி சூடேறி வெடித்து விடுகிறது. இதனால், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க சார்ஜர் போட்டால் அது முழுவதுமாக ஏறியவுடன் கழட்டிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *