சிறுகதை

சாரதா சந்தேகிக்கிறாள் – ஆவடி ரமேஷ்குமார்

கதிரவன் ஆபீஸுக்கு போனதும் எதிர் வீட்டில் குடியிருக்கும் கலா, சாரதாவை பார்க்க வீட்டிற்குள் நுழைந்தாள்.

மதிய உணவிற்காக காய்கறி நறுக்க ஹாலில் அமர்ந்திருந்தாள் சாரதா.

” சாரதா உனக்கு விசயம் தெரியுமா? உன் வீட்ல வேலை செய்திட்டிருந்த பத்மா போன வாரம் இரண்டாயிரம் ரூபா திருடினதால நீ அவளை வேலையை விட்டு துரத்தியிருந்தே. இப்ப அவளுக்கு உன் வீட்டுக்காரரே அவர் வேலை பார்க்கிற ஆபீஸ்ல கூட்டிப் பெருக்கிற வேலையை வாங்கிக் கொடுத்திருக்கார்!”

அதிர்ந்தாள் சாரதா.

“இது எனக்கு தெரியாதே அக்கா. என் வீட்டுக்காரர் எதுக்கு பத்மாவுக்கு போய் அவர் ஆபீஸ்ல வேலை வாங்கித்தரனும்? அவள் ஒரு திருடினு அவருக்கு தெரியாதா? உங்களுக்கு இதை யார் சொன்னாங்க?”

” என் வீட்டுக்காரர்தான். உன் வீட்டுக்காரர் வேலை பார்க்கிற ஆபீஸ்க்கு பக்கத்துல தானே இவரும் வேலை பாரக்கிறார்”

” ஓ… அப்ப இந்த செய்தி உண்மையானதா?”

” பின்ன… பத்மாவை தன் ஆபீஸ்க்குள்ள கூட்டிட்டுப் போறதை எங்க வீட்டுக்காரர் தன்னோட ரெண்டு கண்களாலயும் பார்த்தாராம்!”

” ச்சே!” என்று அலுத்துக் கொண்டாள் சாரதா.

” சரிக்கா. இன்னிக்கு மதியம் இது பத்தி அவர்கிட்ட விசாரிக்கிறேன்”

“சரி சாரதா.ஒரு திருடிக்கு போய் ஏன் தன்னோட ஆபீஸ்ல வேலை வாங்கித் தரனும்? சம்திங் ராங். இது தான் என் கேள்வி. உனக்கு புரிஞ்சா சரி. நான் வரேன்”

போய்விட்டாள் கலா.

மதியம் சாப்பிட வந்த கதிரவன் திருப்தியாக சாப்பிடும் வரை ‘ பத்மா’ குறித்து வாயை திறக்கவில்லை சாரதா.

கைகழுவி விட்டு வந்து ஹால் சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்த கதிரவனிடம் மெல்ல பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.

“ஏங்க…அந்த பத்மாவை

மறுபடியும் வேலைக்கு நம்ம வீட்டுக்கு திரும்ப கூப்பிட்டுக்களாமா?”

” என்னது…பத்மாவை மறுபடியுமா? வேண்டாம் வேண்டாம்”

” ஏங்க ஒரு வருஷமா நம்ம வீட்ல வேலை பார்த்தவள். மாசம் நாலாயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டிருந்தாள். இப்ப வேலையில்லாம பணத்துக்கு சிரம்மப்படுவாளே…அதான்”

” நீ தான் அவள் திருடினதை சிஐடி மாதிரி துப்பறிஞ்சு கண்டுபிடிச்சு விசாரிச்சு உண்மையை வரவழைச்சு தண்டனையா வீட்டைவிட்டு துரத்திட்டியே… இனி எதுக்கு அவள் இந்த வீட்ல?”

சிறிது நேரம் யோசித்தாள் சாரதா.

இப்படி கேட்டால் கதிரவன் வாயிலிருந்து பதில் வராது என்ற முடிவுக்கு வந்தாள்.

நேராகவே கேட்க ஆரம்பித்தாள்.

” ஏங்க பத்மா இப்ப உங்க ஆபீஸ்ல கூட்டிப் பெருக்கற வேலையை செய்திட்டிருக்காளாம். உண்மையாங்க?”

பதில் சொல்ல தயங்குவது தெரிந்தது கதிரவனிடம்.

“உங்களைத்தாங்க”

“ஆமாம் சாரதா”

“நீங்கதான் அவளை கூட்டிட்டுப் போய் சேர்த்து விட்டீங்களாம். உண்மையா?”

டிவியை ஆப் செய்துவிட்டு, “இப்ப உனக்கு யாரோ பத்மாவைப்பத்தின தகவல்களை சொல்லியிருக்காங்க. அதைப் பத்தி நேரா கேட்க வேண்டியது தானே…. ஏன் சுத்தி வளைச்சு கேட்கிறே?”

“சரி நேராவே கேட்கிறேன். பத்மா மேல அப்படி என்ன கரிசனம் உங்களுக்கு? இருபது வயசு பொண்ணு தள தளனு இருக்கிறதாலயா?”

“ச்சீ வாயை கழுவு. ஒரு வருஷமா நம்ம வீட்ல வேலை செஞ்சவ. நல்லா பழகிட்டா. அங்கிள் அங்கிள்னு பாசமா கூப்பிடுவா. உன் அண்ணன் தம்பி பொண்ணுக மாதிரி அவளையும் நேசிச்சேன். அவளோட கெட்ட நேரம் திடீர்னு ஒரு இரண்டாயிரம் ரூபா நம்ம கட்டிலுக்கு கீழ இருந்ததைப் பார்த்திட்டு கணக்கில் வராத பணம்னு நெனச்சு ஆசைப்பட்டு திருடிட்டா. பார்க்க பாவமாயிருந்தது.’சரி இனிமேல் இப்படி செய்யாதே’னு சொல்லி எங்க ஆபீஸ்ல ஒரு வேலை வாங்கிக் கொடுத்தேன். இது ஒரு தப்பா?”

” தப்புதாங்க. என்கிட்ட ஒரு வார்த்தையும் சொல்லாம அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது தப்புதாங்க.”

” உன்கிட்ட சொன்னா ‘ அவ எக்கேடோ கெட்டுப் போகட்டும்’ னு கத்துவே. அதான் சொல்லல.” அவளுக்கும் எனக்கும் ஒன்னுமில்லே. நம்ம குழந்தைகள் மேல சத்தியம்” என்று சொல்லி சத்தியம் செய்தான்.

சந்தோஷமடைந்தாள் சாரதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *