சிறுகதை

சாம்பார் …! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஐந்தாறு குடித்தனங்கள் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் வெண்ணிலவனும் ஒருத்தன். எப்போதாவது சமைப்பது. எப்போதும் கடையில் சாப்பிடுவது என்பது தான் அவன் வழக்கம்.

ஞாயிறுகளில் அவன் வீட்டில் அசைவம் மணக்கும். நண்பர்கள் புடை சூழச் சாப்பிட்டு வருவது தான் வெண்ணிலவனுக்கு வழக்கமாக இருந்தது. அந்த ஞாயிறு அவனால் சமைக்க முடியவில்லை. காலையில் வெளியே சாப்பிட்டு விட்டு இரவு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

அன்று நண்பர்கள் யாரும் இல்லை வெண்ணிலவன் மட்டும்தான்.

” என்ன சாப்பிடலாம்? எதைச் சாப்பிடலாம்?” என்று யோசித்துக் கொண்டிருந்தான், வெண்ணிலவன். அப்போது எதிர் வீட்டில் இருந்த ஒரு நபர் வெண்ணிலவன் வீட்டுக் கதவு வேகமாக தட்டப்பட்டது.

” யார் இந்த நேரம் ? வேகமா கதவ தட்டுறது? என்று நினைத்த வெண்ணிலவன் கதவைத் திறந்து பார்த்த போது , எதிர் வீட்டுக்காரர் கையில் ஒரு டப்பாவுடன் நின்று கொண்டிருந்தார்.

” சாம்பார் . சரவணபவன் சாம்பார் இந்தாங்க .வச்சுக்கோங்க” என்று கொடுக்க, அதை வாங்கிய வெண்ணிலவனுக்கு விழி பிதுங்கி நின்றது.

” சாம்பார வச்ச நாம என்ன பண்ணப் போறோம் ? இது எதுக்கு? என்று யோசித்துக் கொண்டே இருந்தான். கொடுத்தவர் விறுவிறுவென நடந்து தன் வீட்டை அடைத்துக் கொண்டார் .

“இந்த சாம்பார வச்சு நாம என்ன பண்றது? வீட்டில எதுவும் சாப்பிடுறக்கு இல்ல. வெறும் சாம்பாரக் குடிச்சிட்டு படுக்க முடியுமா ?” என்று யோசித்த வெண்ணிலவன் அந்தச் சாம்பாரை உற்று உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான்.

” என்ன செய்யலாம்? வீட்டில சமைக்கலாம்ன்னு நெனைச்சா மணி ஒன்பது ஆச்சு. இனிமே சமைச்சு சாப்பிடுறதுக்கு டைம் இல்ல. ஆனா, சாம்பார் மட்டும் தான் இருக்குது. சாப்பாடு இட்லி தோசை எதுவும் இல்லை. என்ன பண்ணலாம் ?

என்று யோசித்துக் கொண்டே இருந்தான். சிறிது நேரத்திற்கு எல்லாம் சாம்பார் கொடுத்த வீட்டின் கதவை தட்டினான்

“யாரது? என்று கதவைத் திறந்தவர் வெளியே வந்தார் .

iஎன்ன சார்? ” என்று கேள்வியாய் கேட்க

” ஒன்னும் இல்ல சார். நீங்க சாம்பார குடுத்துட்டு போயிட்டீங்க. வீட்டுல இட்லி இல்ல. தோசை இல்ல. சாப்பாடு இல்ல. சாம்பார மட்டும் கொடுத்தீங்கன்னா நான் எப்பிடி சாப்பிடுவேன் ? இந்த வெறும் சாம்பார வச்சு நான் என்ன பண்றது? இப்ப சாம்பார் என்னிடம் இருக்குது. இதுக்கு இட்லியோ தோசையோ சாம்பாரோ கொடுத்தா நான் சாப்பிடுவேன்” என்று தடாலடியாகக் கேட்ட வெண்ணிலவனை அவர் வெறிக்கப் பார்த்தார்

“எனக்கு சாம்பார் மிச்சமாச்சு அதான் கொடுத்தேன். நீங்க சாப்பாடு, இட்லி, தோசை எல்லாம் இங்கே கிடையாது ” என்றவர்

” அப்படின்னா இந்த சாம்பார் எனக்கு வேண்டாம்” என்று திருப்பி கொடுத்தான் வெண்ணிலவன்.

“தானமா கொடுத்தத திருப்பி வாங்குறது தப்பு. அது பாவம். திருப்பி வாங்குற தீமை நம்மள தான் வந்து சேரும். அந்த ஆளுக்கு ரெண்டு இட்லி, ஒரு தோசை கொடுத்து விடுங்க . பாேனா போகட்டும் என்றாள் சாம்பார் கொடுத்தவனின் மனைவி

“என்ன சொல்ற?’’

“ஆமாங்க .நீங்க குடுத்து விடுங்க. அதான் நமக்கு நல்லது ” என்று மனைவி சொல்ல,திரும்பி வீட்டிற்குள் நுழைந்தவர் வெண்ணிலவனை இடை மறித்து

” இந்தாங்க. இட்லி ,தோசை சாப்பிடுங்க” என்று சொல்லும்போது அதைச் சிரிப்போடு வாங்கிக் கொண்ட வெண்ணிலவன்

“சார் நாளைக்கும் சாம்பார் குடுப்பீங்களா? என்று கேட்ட போது

“டமால் ” என்று கதவைச் சாத்தினார் எதிர் வீட்டுக்காரர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *