செய்திகள்

சான்பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு

Makkal Kural Official

நோக்கியா, மைக்ரோசிப் டெக்னாலஜி உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

ரூ. 900 கோடி முதலீடு : சென்னை, கோவை, மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

சென்னை, ஆக 30–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29–ந் தேதி) அமெரிக்கா நாட்டின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4 ஆயிரத்து 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030–ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக 27.8.2024 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோ நகரிற்கு 28.8.2024 அன்று சென்றடைந்தார்.

சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் முன்னிலையில் கீழ்க்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள் வருமாறு:–

1. நோக்கியா நிறுவனத்துடன் …

நோக்கியா நிறுவனமானது ஃபின்னிஷ் பன்னாட்டு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு நிறுவனம் ஆகும். இது ஒரு பார்ச்சூன்–500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் முன்னிலையில் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 450 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த நிகழ்வில், நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் நிஷாந்த் பத்ரா, நிலையான நெட்வொர்க் வணிகக் குழு தலைவர் சாண்டி மோட்லி ஆகியோர் பங்கேற்றனர்.

2. பேபால் நிறுவனத்துடன் …

பெபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும், இது ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு உதவுகிறது. காசோலைகள் மற்றும் பண ஆணைகள் போன்ற பாரம்பரிய காகித முறைகளுக்கு மின்னணு மாற்றாக இது செயல்படுகிறது.

பேபால் நிறுவனம் சென்னையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் முன்னிலையில் பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், பேபால் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீனி வெங்கடேசன், சர்வதேச அரசாங்க உறவுகள் தலைவர் ஜி – யாங் டேவிட் ஃபேன் ஆகியோர் பங்கேற்றனர்.

3. ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்

நிறுவனத்துடன் …

ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். மேம்பட்ட பேக்கேஜிங், ஐஓடி, லைஃப் சயின்ஸ், ஏஆர்.விஆர், எம்இஎம்எஸ், பவர் உள்ளிட்ட பலதரப்பட்ட சந்தைகளில் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு புதுமைகளை வழங்கும் மேற்பரப்பு மற்றும் பொருட்களை மேம்படுத்தும் அமைப்புகள் (அதாவது வெப்ப செயலாக்கம், ஈரச் செயலாக்கம், பிளாஸ்மா சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு) போன்றவற்றை வழங்குகின்றன.

அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் முன்னிலையில் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த நிகழ்வில், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரமாகாந்த் அலபதி, முதன்மை நிதி அலுவலர் பிரபாத் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

4. மைக்ரோசிப் நிறுவனத்துடன் …

மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனமானது ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான உட்பொதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர் ஆகும். இது பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு (5G, EVகள், IOT, தரவு மையங்கள் போன்றவை) ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாட்டான தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர் ஆகும்.

அரிசோனாவின் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசிப் நிறுவனம், உலகளவில் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகளில் பல உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

மைக்ரோசிப் நிறுவனம் 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் IC வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு (CAD), பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் சுமார் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

முதலமைச்சர் முன்னிலையில் மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த நிகழ்வில், மைக்ரோசிப் நிறுவனத்தின் மூத்த கார்ப்பரேட் துணைத்தலைவர் பேட்ரிக் ஜான்சன், கார்ப்பரேட் துணைத் தலைவர் புரூஸ் வேயர் ஆகியோர் பங்கேற்றனர்.

5. இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன்…

இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஒரு முன்னோடி சுகாதார தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் நோயாளிகளுக்கு விரைந்து உதவக்கூடியவை, உரிமைகோரலின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகின்றன, தடைகளை அகற்றுகின்றன.

இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்கிட கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது.

முதலமைச்சர் முன்னிலையில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 50 கோடி ரூபாய் முதலீட்டில் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் ராதிகா டாண்டன் அவர்கள் பங்கேற்றார்.

6. அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்துடன் …

அப்ளைடு மெட்டீரியல்ஸ் உலகின் நம்பர் 1 குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் நிறுவனம். அவர்கள் சில்லுகள் மற்றும் மேம்பட்ட காட்சிகளை தயாரிக்கப் பயன்படும் பொருள் பொறியியல் தீர்வுகளில் முன்னணியில் உள்ளனர்.

அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனமானது கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரை கார்ப்பரேட் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளவில் 24 நாடுகளில் 150 நகரங்களில் செயல்பட்டு வரும் பார்ச்சூன்–500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது.

டிஆர்பி ராஜா

முதலமைச்சர் முன்னிலையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த நிகழ்வில், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் செமிகண்டக்டர் தயாரிப்புகள் குழுமத்தின் தலைவர் பிரபு ராஜா, துணைத்தலைவர் சதீஷ் குப்புராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை செயலாளர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *