செய்திகள்

சானியா மிர்சா – சோயிப் மாலிக் கருத்து வேறுபாட்டால் விவாகரத்தா?

துபாய், நவ. 10–

நட்சத்திர தம்பதியான சானியா மிர்சா – சோயிப் மாலிக் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கரம் பிடித்தார். இந்தியரான இவர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததற்கு அப்போது ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சானியா – சோயப்பின் திருமணம் அந்த சமயத்தில் பேசுபொருளானது.

திருமணத்திற்கு பிறகு துபாயில் குடியேறிய சானியா மிர்சா, இந்தியா சார்பில் தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது அவருக்கு 4 வயதில் இஷான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சானியாவுக்கும், சோயிப்பிற்கும் இடையே அண்மைக் காலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து பெற வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பலரும், பல யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஊகங்களா–உண்மையா?

தற்போது, இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன, சானியாவின் அண்மை கால இன்ஸ்டாகிராம் பதிவுகள். ‘உடைந்த மனங்கள் எங்கே செல்கின்றன? – அல்லாவை காண’. இதுதான், சானியா மிர்சா பதிவிட்ட அண்மைகால பதிவு. சோயிப் மாலிக் உடனான மனக்கசப்பு காரணமாகவே இதனை அவர் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அண்மையில் தனது மகன் இஷானின் பிறந்த நாளின்போதும், ‘எனது வாழ்க்கையின் மிக மோசமான நேரங்களில் என்னுடைய மகன்தான் எனக்கான ஒரே ஆறுதல்’ என அவர் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

கடந்த மாத இறுதியில் சானியாவும் சோயிப்பும் தங்கள் மகனின் பிறந்தநாளை ஒன்றாக இணைந்து கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை, சோயிப் மாலிக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சானியா மிர்சாவின் படம் இடம் பெற்றுள்ளது. ஆனால், தனது கணவர் உடனான எந்த புகைப்படத்தையும் சானியா மிர்சா அண்மைக்காலமாக பொதுவெளியில் பகிரவில்லை.

இத்தகைய காரணங்களை சுட்டிக்காட்டி, சானியாவும் சோயிப்பும் விவாகரத்து செய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இருந்தபோதும், விவாகரத்து முடிவு குறித்து சானியாவிடம் இருந்தோ, சோயிப் மாலிக்கிடம் இருந்தோ, எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *