செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Makkal Kural Official

சாத்தூர், ஜூலை 5–

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி -அருகே சின்னகாமன்பட்டியில், கமல்குமார் என்பவருக்கு சொந்தமான, ‘கோகுலேஷ்’ பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 1–ந் தேதி காலை 8.30 மணி அளவில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்யும் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில், அருகிலிருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

அந்த நேரத்தில் ஆலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். விபத்து ஏற்பட்டதும், சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி, உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அழகுராஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

#trending news #trending news tamil #makkalkural #மக்கள்குரல் #சென்னை #தமிழ்நாடு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *