4 பேர் படுகாயம்
விருதுநகர், ஜூலை 6–
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் ஆலையில் பணியாற்றிய ஒருவர் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறியதாகவும், ஆலையில் இருந்த 50 அறைகளில் 20 அறைகள் வரையில் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அருகிலிருக்கும் மற்றொரு பட்டாசு ஆலைக்கும் தீ பரவியதால், அங்கும் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த வெடிவிபத்தால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விதிகளை மீறி பட்டாசு தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதா? பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()





