விருதுநகர், ஜன. 4–
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் (பெசோ) பெற்ற இந்த ஆலையில் உள்ள 35 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் ,இங்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பட்டாசுகள் வெடி சிதறியதில் ஆலையில் இருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாக வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவலை கொடுத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் தீயில் கருகிய நிலையில் நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சி சுந்தரம் உள்பட 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 2 பேர் பயங்கர தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேறு யாரும் சிக்கி உயிரிழந்துள்ளார்களா? எனவும் தொடர்ச்சியாக தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவத்தை தொடர்ந்து வேலைக்கு வருகை தந்தரவர்கள் யார் என்பதற்கான வருகை பதிவேடுவை சேகரிக்கும் பணியையும், விபத்து ஏற்பட்ட காரணம் பற்றியும் விசாரணையை காவல்துறை தொடங்கியுள்ளது.
விபத் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில், ‘‘விபத்து நடந்த பட்டாசு ஆலையில் 6 பேர் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலை உரிமம் பெற்று தான் இயங்கி வந்தது. முதற்கட்ட தகவலின் படி, வேதிப்பொருளில் கெமிக்கல் கலக்கும்போது தான் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இன்னும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு விசாரணை முடிந்த பிறகு முழு விவரம் தெரிவிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சிசபாலன் மற்றம் மேலாளர் தாஸ், போன்மென் பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டும் நடைபெற்ற 19 பட்டாசு ஆலை விபத்தில் ஆண்கள், பெண்கள் உள்பட 45 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
![]()





