சினிமா

சாதி வெறி – ஆணவக் கொலை திரைக்கதை; படவுலகைப் பேச வைக்கும் போஸ் வெங்கட்!

நடிகர்கள் இயக்குனர்கள் ஆக மாறி வரும் சூழ்நிலையில் வில்லன் நடிகர் குணச்சித்திர நடிகர் என்று அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் போஸ் வெங்கட் வெள்ளித்திரையில் இயக்குனராக உதயமாகி இருக்கும் படம் கன்னி மாடம்.

அறிமுகமாகும் முதல் படத்தில் ஜனரஞ்சக வெற்றிக்கு கைகொடுக்கும் காதல் கதையையும், நகைச்சுவையையும் கையில் எடுக்காமல், சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கடந்து வந்திருக்கும் பல்லாண்டுகள் அனுபவத்தில் முதிர்ச்சியில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்க்ஷன் ஃபார்முலா கதையில் வலது கால் எடுத்து இருக்கிறார் போஸ் வெங்கட்.

கன்னிமாடத்தில் அவரை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் தயாரிப்பாளர் ஹஷீர், எது மாதிரி கதை சொல்லப் போகிறார், அதை எப்படி சொல்லப் போகிறார் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்காமல் போஸ் வெங்கட்டின் அனுபவத்தை வைத்துக்கொண்டு அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த துணிச்சலுக்கு தயாரிப்பாளரை பாராட்டலாம்.

ஸ்ரீ ராம் கார்த்திக், விஷ்ணு ராமஸ்வாமி, சாயாதேவி, ஆடுகளம் முருகதாஸ் ஆகிய நட்சத்திரங்களை வைத்து கொண்டு கதை சொல்லி இருக்கும் போஸ் வெங்கட், முதல் படத்தை சாதி வன்முறைக்கு எதிராக ஓட விட்டிருக்கிறார்.

எடுத்துக்கொண்டிருக்கும் கதையை நேர்த்தியாக சொல்வதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும். அது போஸ் வெங்கட்டுக்கு இருக்கிறது. இடைவேளை காட்சியும், இறுதிக்காட்சியும் தேர்ந்த இயக்குனராக அடையாளம் காட்டியிருக்கிறது. (கடந்த காலத்தில் எத்தனை இயக்குனர்களிடம் நடித்து, பாடம் படித்து காமிரா முன் நின்றிருக்கிறார், அனுபவம் பேசாதா…?!)

சொந்த ஊரை விட்டு சென்னை பட்டணத்திற்கு வரும் இளம் காதல்ஜோடி விஷ்ணுவும், சாயா தேவியும். ஸ்ரீராம் கார்த்திக் ஆடுகளம் முருகதாஸ் வீட்டின் அருகே குடி இருக்கிறார்கள். அவர்களை சாதிவெறிக் கும்பல் ஆணவக்கொலை செய்ய துரத்துகிறது. சாயா தேவியை கொன்றுவிட்டு விஷ்ணுவை அழைத்துச் செல்வது அவர்கள் திட்டம். அது நிறைவேறியதா…, திருமணமாகாத ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவிக்கு ஒரு கட்டத்தில் கணவராக நடிக்க வேண்டிய சூழல் ஏன் வருகிறது? அதன் பின்னணி என்ன? அதற்குப் பிறகு அவர்களது வாழ்க்கையையே புரட்டிப் போடும் சம்பவங்கள் நடப்பது எப்படி என்பது படத்தின் திரைக் கதை.

இதற்கு நடுவில் தன் மகள் வேறு ஜாதிப் பையனை காதலித்து திருமணம் செய்தார் என்பதற்காக இருவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு சென்னையில் உள்ள ஜெயிலுக்கு செல்லும் கஜாராஜன் கதையும் வருகிறது.

முதல் படத்திலேயே ஜாதி பிரச்சினையை கையிலெடுத்திருக்கும் துணிச்சல் போஸ் வெங்கட்டுக்கு. நகர்ப்புறங்களில் நடுரோட்டில் நடக்கும் படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கும் கொடூரம் சிலிர்க்க வைக்கும்.

நினைவைத் தொடுபவர் சாயாதேவி. முதல் படமா என்று அவர் நடிப்பை பார்த்து ஆச்சரியக் கேள்வி எழுப்ப வைக்கும். வீட்டை விட்டு ஓடி வந்திருக்கும் ஒரு இளம் பெண்ணின் ஒவ்வொரு நிமிட பயத்தையும் கண்களில் காட்டுவது சிறப்பு. நெஞ்சில் நிழல் ஆடுகிறார்.

ஸ்ரீராம் கார்த்திக்: இருதலைக்கொள்ளி எறும்பு. உள்ளுக்குள் சோகம். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நண்பர்களுக்காக சிரித்து வாழும் சுபாவம். உணர்வுப்பூர்வமான நடிப்பு. கன்னி மாடம் காட்சிகளை விறுவிறுவென்று நகர்த்தி இருக்கும் சாமர்த்திய திறமைசாலிகள் ஒன்று சாயாதேவி என்றால் ஸ்ரீராம் கார்த்திக் இன்னொன்று.

நகைச்சுவைக்கு ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணி பிரியங்கா ரோபோ சங்கர். ஆட்டோ பெண் டிரைவர் வலினா, ஜாதிவெறி கஜராஜ்: சரியான தேர்வு.

பின்னணி இசை ஹரி சாய். ஒளிப்பதிவு இனியன். பாடல்கள் ஓகே. அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னச்சின்ன குறைகள்.

சாதி வெறியுடன் போராடும் காதல்: போஸ் வெங்கட்டின் கன்னி முயற்சி. ஏமாற்றமில்லை. நடிப்பு, இயக்கம் இரண்டிலும் இணைந்தே பயணிக்கலாம் போஸ்வெங்கட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *