இந்தியா 76! செய்திகள் முழு தகவல்

சாதி, மத, இன பாகுபாடின்றி இலவச கல்விக்கும் உயர்கல்விக்கும் வித்திட்ட அபுல் கலாம் ஆசாத்!

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில், 1888 நவம்பர் 11ம் தேதி இந்திய குடும்பத்தில் பிறந்தவர் மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது. இவர் பிறந்து சில ஆண்டுகள் கழித்து இவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது. 1912ல் ‘அல் ஹிலால்’ எனும் பத்திரிகையை தொடங்கிய அவர் இந்திய விடுதலை குறித்து தொடர்ந்து எழுதினார். தேசத் தந்தை காந்தியை சந்தித்து ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு 1920 இல் அபுல் கலாம் ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு பல நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

1923 இல் தனது 35 வது வயதிலேயே காங்கிரஸ் தலைவராக அபுல் கலாம் ஆசாத் தேர்வு செய்யப்பட்டார். ஆசாத் என்றால் விடுதலை) என்பது பொருள். இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயர் அது. ‘பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை அபுல் கலாம் ஆசாத்’ என்று காந்தியடிகள் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். அதனால்தான் இந்தியா விடுதலை அடைந்ததும் முதல் கல்வி அமைச்சர் பொறுப்பை அபுல் கலாமுக்கு ஜவஹர்லால் நேரு வழங்கினார்.

அனைவருக்கும் உரிமை உண்டு

1923ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்து முஸ்லிம் எனும் இரு பெரும் சமூக மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டினார். 1940 களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி ஆசாத்தை தேடி வந்தது. தேசப் பிரிவினை என்ற பேச்சுக்கு இடமில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஆசாத். இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் மெளலானா அபுல் கலாம் ஆசாத் நிகழ்த்திய உரையின் சிறு துளியில் இப்படி கூறினார்.

“இந்திய மண்ணை சொந்தம் கொண்டாட, இந்து மதத்தைப் போன்றே இஸ்லாத்திற்கும் உரிமை உண்டு. இந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளாக இங்குள்ள மக்களின் மதமாக இருந்து வருவதைப் போன்று, இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக அவர்களின் மதமாக இந்தியாவில் இருந்து வருகிறது. ஒரு இந்து தான் ஓர் இந்தியன் என்றும், இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன் எனவும் பெருமையுடன் கூறுவது போல, ஒரு முஸ்லிமும் தான் ஒரு இந்தியன், நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறோம் என்று பெருமையுடன் கூறலாம். இதேபோல கிறிஸ்தவர்களும் தான் ஓர் கிறிஸ்தவன் என்பதை இந்த நாட்டில் பெருமையுடன் கூறலாம்” என்றார்.

தொலைநோக்குப் பார்வை

பண்டித ஜவஹர்லால் நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத் இவ்விரு தலைவர்களிடையே அநேக ஒற்றுமை இருக்கின்றது. இவர்கள் இருவரும் ஒத்த வயதுடையவர்கள்; ஒரே கோணத்தில் பிரச்சனைகளை கையாளுபவர்கள்; இரண்டு தலைவர்களும் சமூக தொலை நோக்கு பார்வையுடையவர்கள். நாட்டின் விடுதலைக்காக நேரு, அபுல்கலாம் ஆசாத் ஆகிய இரு தலைவர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலையில் கழித்திருக்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார். மார்க்க கல்வியில் மட்டுமல்லாது உலக கல்வியிலும் தெளிந்த பார்வையும் தொலைநோக்கு சிந்தனையும் மக்களை எளிதில் வசீகரிக்கக் கூடிய பேச்சு மற்றும் எழுத்தும் ஒருங்கேபெற்ற நபராக திகழ்ந்து விளங்கியவர். கூர்மையான நினைவாற்றலையும், எதையும் பகுத்தறியும் திறனையும் சிறு வயதிலேயே ஆசாத் கைவரப்பெற்றிருந்தார்.

கல்விக்கான தொலைநோக்கு

1947 காலகட்டத்தில் இந்திய மக்களில் கல்வி கற்போர் சதவீதம் மிக குறைவாக இருந்தது. இதனை அதிகரிக்க அரும்பாடுபட்டார். அபுல்கலாம் ஆசாத் கல்வி அமைச்சராக இருக்கும் பொழுது எல்லா மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அனைத்து கல்வி திட்டங்களும் மத சார்பற்று, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 14 வயது வரை நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி அளிக்கப்பட வேண்டும். தொழில்கல்வி, வேளாண்கல்வி மேலும் உயர்கல்வி (வெளிநாட்டு) கூடங்கள் நிறுவ வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்க அபுல் காலாம் உருவாக்கியது தான் ‘லலித் கலா அகடமி’. இதன் நோக்கம் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை ஓவியமாக பாதுகாக்கப்பட்டன. வரலாற்றை எழுதக் கூடியவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கும் அகடமி விருதினை ஏற்படுத்தி கொடுத்தார். கலை, பண்பாடு, இலக்கியம் என நின்று விடாமல் வருங்கால மாணவர்களை அறிவியல் துறை, ஆராய்ச்சி துறை மாணவர்களாக உருவாக்க வேண்டும் என நினைத்து அறிவியல் தொழில்நுட்ப சோதனை கூடங்களை நிறுவினார்.

சமமான வாய்ப்பு

உலகத் தரமான, ஐரோப்பிய மாணவர்களுக்கு இணையாக உயர் கல்வி கூடங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணினார். அதன் அடிப்படையில், உலகளவில் இன்று வரை பல பெருமைகளுக்கு வித்திட்டு வரும் நாட்டின் சிறந்த உயர்கல்விக் கூடங்களான இந்திய அறிவியல் கழகத்தை (ஐ.ஐ.டி) உருவாக்கிய பெருமை அபுல் கலாம் ஆசாத்தையே சாரும். இவரது தலைமையின் கீழ் 1951-ல் காரக்பூரில் முதலாவது ஐஐடி கல்வி நிறுவனமும், 1953-ல் பல்கலைக்கழக மானியக் குழுவும் (யுஜிசி) தொடங்கப்பட்டது. பெருநகரங்களான சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் ஐஐடி உருவாக்கப்பட்டன.

மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்காக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ள வில்லை. அவரது சிந்தனையும் செயல்பாடும் பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பெரிதும் பங்காற்றி இருக்கிறது. அம்பேத்கரை போன்று எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாகவும் இருந்தது. 11 ஆண்டுகளாக இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆசாத்தின் சேவைகள் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பல வகையில் அடித்தளமிட்டன. அதனால் இவருடைய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.


மா. இளஞ்செழியன்


Leave a Reply

Your email address will not be published.