செய்திகள்

சாதிப் பெயரை இழிவுபடுத்தவோ, நகைச்சுவைக்கோ, அரசியலுக்கோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை

Makkal Kural Official

தமிழக அரசுக்கு பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை

சென்னை, ஜூலை 16-–

சாதிப் பெயரை இழிவுபடுத்தவோ, நகைச்சுவைக்கோ, அரசியலுக்கோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சூட்டுவதாக இருக்கின்றன. தங்களுடைய சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதுகின்ற சாதிகள், அப்பெயரை மாற்றிக்கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன. குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளிலும், திரைப்படப் பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.

இது, சட்டப்படி தண்டணைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொது சமூகத்தில் இல்லை. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன்படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.

தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் ‘சண்டாளர்’ என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48-ம் இடத்தில் உள்ளது என்பதையும் ஆணையம் சுட்டிக்காட்டுகிறது. சமீபகாலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாகப் பேசப்படுவதை காணமுடிகிறது. எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ ‘சண்டாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது.

மேலும், அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *