புதுடெல்லி, அக். 16–
சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சாட்டிலைட் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏல நடைமுறையின் கீழ் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஜியோ கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சர்வதேச டெலிகாம் மற்றும் சாட்டிலைட் நிறுவனங்கள் ஏல நடைமுறையை இதில் பின்பற்றக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. செல்லுலார் (தொலைபேசி) அலைக்கற்றை போல் இல்லாமல், சாட்டிலைட் சேவைக்கான அலைக்கற்றை அனைத்து ஆபரேட்டர்களுக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளன. ஏலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்பேஸ்எக்ஸ் தரப்பில் எலான் மஸ்க் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஏர்டெல், சாட்டிலைட் அலைக்கற்றை ஏலத்துக்கு ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. முன்னதாக, இதில் ஏர்டெல் நிறுவனம் முரண்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாட்டிலைட் அலைக்கற்றை ஒதுக்கீடு நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்படும் என மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அதற்கான கட்டணம் உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, சாட்டிலைட் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முரண்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 71 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்எக்ஸ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். தற்போது ஸ்பேஸ்எக்ஸின் துணை நிறுவனமாக ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனம் தனது சேவையை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறது.