சிறுகதை

சாக்லேட் மழை பொழிந்தது! | சின்னஞ்சிறுகோபு

தேனப்பன் பள்ளிக்கூடத்தில் கவிதைப் போட்டியில் வெற்றிப் பெற்று பாராட்டும் பரிசும் பெற்றபிறகு அவனது கிராமத்தில் அவனை மிக உயர்வாக மதித்தார்கள்.

தேனப்பன் வீட்டுக்கு பக்கத்திலிருந்த காலேஜில் படிக்கும் பார்வதி அக்கா அவனைக் கூப்பிட்டு பாராட்டியதுடன், “கவிதை எழுதியிருக்கிறாயே, கதைகளும் எழுதுவாயா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள். அவ்வளவுதான், “எழுதுவேன் அக்கா!” என்று சொல்லியபடி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து ஓடிவந்தான் நம்ம தேனப்பன்.

உடனடியாக ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு ஓடிச்சென்று உட்கார்ந்துகொண்டு யோசித்தான். தனது வீட்டு வாழை மரத்தைப் பார்த்தான். அதில் வாழைத்தார் இன்னும் வெட்டாமல் பழங்கள் பழுத்து இருப்பதைப் பார்த்தான். தனது தெருவிலிருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு, கோபாலன் என்ற கோபு என்ற சிறுவர்களைப் பற்றியும் நினைத்துக் கொண்டான். அப்போது தூரத்தில் கொல்லையில் சில குரங்குகள் போவதையும் பார்த்தான். அவன் பார்த்ததையும் தனக்குத் தோன்றியதையும் வைத்து ஒரு கதைப்போல எழுதினான்.

உடனே பக்கத்து வீட்டுக்கு ஓடோடி சென்று, “அக்கா…அக்கா…நான் ஒரு கதை எழுதி எடுத்து வந்திருக்கிறேன்!” என்று பார்வதியிடம் தான் எழுதி எடுத்து வந்ததைக் காட்டினான்.

அதை வாங்கிப் பார்த்த அந்த பார்வதி திடுக்கிட்டு, “ஏய்…என்னடா இப்படி வார்த்தைக்கு வார்த்தை இவ்வளவு எழுத்துப் பிழைகள்! முதலில் தமிழில் பிழைகள் இல்லாமல் எழுத கற்றுக்கொள்! இனிக் கதையெல்லாம் எழுதாதே! பாடப் புத்தகத்தை கவனமாக படித்து முன்னேறப் பார்!” என்று சொல்லியபடி, ஒரு பேனாவையெடுத்து பிழைகளையெல்லாம் திருத்தினாள். தேனப்பனுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது.

வீட்டுக்கு வந்த தேனப்பன் வேறொரு பேப்பரையெடுத்து தனது கதையை இப்படி தவறில்லாமல் எழுதினான்.

அவன் எழுதின அந்தக் கதையை படிக்க வேண்டும் என்று உங்களுக்கும் ஆசையாக இருக்கிறதா? அந்த கதை இதோ இப்படித்தான் இருந்தது :’

கிட்டு வீட்டு வாழை மரமும் கோபுவும்!

கிட்டு வீட்டுக்கொல்லையில் ஒரு வாழை மரத்தில் பழங்கள் பழுத்து தொங்கின. அதை எப்படியாவது திருடித் தின்ன வேண்டும் என்று ஆசைப்பட்டான் கோபு.

ஒருநாள் யாரும் பார்க்காத சமயத்தில் கிட்டு வீட்டுக் கொல்லைக்குள் புகுந்தான் கோபு.

வாழை மரத்தில் ஏறி ஏறி பலதடவை வழுக்கி விழுந்தான். பல தடவை முயன்று கடைசியாக வாழைமரத்தின் உச்சியை அடைந்தான்.

வாழைப் பழத்தையெல்லாம் பறித்துப் பறித்து தின்றான். தோலையெல்லாம் கீழேப் போட்டான். பிறகு வாழைமரத்திலிருந்து இறங்கினான். அதன் பின்னர் வந்தவழியாகவே வீட்டுக்குச் சென்றான் கோபு.

சிறிது நேரம் கழித்து கிட்டு வீட்டுக் கொல்லைக்கு இரண்டு குரங்குகள் வந்தன.

அந்த சமயத்தில் கிட்டுவும் கொல்லைக்கு வந்தான். வாழைமரத்தில் பழத்தைக் காணவில்லை. கீழே தோல் மட்டுமே கிடந்ததைப் பார்த்த கிட்டு, குரங்குகள் வாழைப்பழங்களை தின்றுவிட்டன என்று நினைத்துக் கொண்டு, குரங்குகளை சத்தம் போட்டு விரட்டினான்!

திருத்தி தவறில்லாமல் எழுதிய இந்த கதையை தனது வீட்டு மரப் பீரோவில் போட்டுவிட்டு, இனி பாடப்புத்தகங்களை படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அதோடு அந்த கதையை மறந்து விட்டான்.

ஆனாலும் காலம் எப்போதும் போலதான் ஓடிக்கொண்டிருந்தது. அவனும் எப்போதும்போல மக்காகதான் இருந்தான்!

***

பள்ளிக்கூடத்தில் பொன்விழா கொண்டாட்டமெல்லாம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் கூட தேனப்பன் முன்பு எழுதிய கவிதைக்கு கிடைத்த பரிசையும் பாராட்டையும் அவன் வகுப்புத் தோழன் ராமநாதனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

ஒரு மக்குப் பயலுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று மனம் நொந்துப்போனான் ராமநாதன். நிறைய கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கும் ராமநாதனுக்கு தேனப்பன் எழுதியது கவிதையே இல்லை என்பது புரிந்தது. ‘என்ன செய்வது எல்லாம் காலத்தின் கொடுமையென்று நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டான்.

தானும் ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று, முதல் பரிசு வாங்கினால்தான் தேனப்பனுக்கு பக்கத்தில் மனம் கூசாமல் உட்கார்ந்திருக்க முடியும் என்று நினைத்தான். அதற்குத் தகுந்தாற்போல் அவனுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தது!

அவன் வாங்கிப் படிக்கும் ‘முயல்’ என்ற சிறுவர் பத்திரிகையில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருந்தார்கள்!

‘ஸ்வீட் ஹார்ட்’ என்ற சாக்லேட் நிறுவனமும் அந்த முயல் பத்திரிகையும் சேர்ந்து அந்த சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தனர்.

‘சாக்லேட் மழை பொழிகிறது! நீங்களும் சாப்பிடுங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் கொடுங்கள்!!’ என்று பெரிய தலைப்பு.

அதற்கு கீழே, ‘ஆறிலிருந்து எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவிகள் மட்டுமே இந்த போட்டியில் கலந்துக்கொள்ள முடியும். கதை எழுதுபவர்கள் பள்ளிக்கூட முகவரி மட்டுமே கொடுக்க வேண்டும். கதை பெற்றோர்கள் மற்றும் யாருடைய உதவிகளும் இல்லாமல் சுயமாக எழுதியிருக்க வேண்டும். கதை பன்னிரண்டு வரிகளுக்குள் இருக்க வேண்டும். கதை யதார்த்தமாக சுயமாக இருந்தால் போதுமானது. நீதியெல்லாம் போதிக்க வேண்டியது அவசியமில்லை. இந்தப்போட்டி இளம் தளிர்களை புதிதாக எழுதத் தூண்டும் ஒரு முயற்சி’ என்றெல்லாம் விரிவாக விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

சிறுகதைகளை இன்னும் பத்து நாட்களுக்குள் ‘இனிக்கும் சிறுகதைப் போட்டி’ என்று குறிப்பிட்டு, முயல் மாதமிருமுறை, 1.பிள்ளையார் கோவில் தெரு சென்னை-2′ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று விபரம் இருந்தது!

ராமநாதன் ஆர்வத்துடன் என்ன பரிசு என்று பார்த்தான். அது சாக்லேட் தயாரிக்கும் நிறுவனம் இணைந்து நடத்தும் போட்டி என்பதால், சிறுகதைப் போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 500 சாக்லேட்கள் அடங்கிய 5 கிலோ பாக்கெட்டும், இரண்டாம் பரிசாக 300 சாக்லேட்கள் அடங்கிய 3 கிலோ பாக்கெட்டும் மூன்றாம் பரிசாக 200 சாக்லேட்கள் 2 கிலோ பாக்கெட்டும் கூரியர் மூலம் அளிக்கப்படும் என்று இருந்தது!

‘அடடா….பணமாக அறிவித்திருக்கலாம். சாக்லேட் கம்பெனி இணைந்து நடத்தும் போட்டி என்பதால் சாக்லேட்களாக தருகிறார்கள் போலிருக்கு! பரவாயில்லை, முதல் பரிசு வாங்கினால் போதும்; ஒரு வருஷத்துக்கு சாக்லேட் சாப்பிடலாம்!’ என்று அப்போதே நாக்கை சப்புக்கொட்டினான் ராமநாதன்!

அப்போதுதான் ராமநாதனுக்கு சட்டென்று தேனப்பன் ஞாபகம் வந்தது. தேனப்பனுக்கு பத்திரிகை, கதைப்புத்தகம் படிக்கும் பழக்கமெல்லாம் இல்லை!

அதனால் இந்த சிறுகதைப் போட்டியை பற்றி அவனுக்குத் தெரியாது. தெரிந்து அவனும் கலந்துக் கொண்டால், அந்த அதிர்ஷ்டக்காரப் பயலுக்கு மறுபடியும் பரிசுக் கிடைத்தால் தன்னால் தாங்க முடியாது என்று உஷாரானான் ராமநாதன். அதனால் இந்த முயல் பத்திரிகையின் சிறுகதைப் போட்டி விஷயம் தேனப்பனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அந்த சிறுகதைப் போட்டிக்கான விதிமுறை பக்கத்தை மட்டும் கிழித்து கால் சட்டை பையில் வைத்துக் கொண்டான்!

அதிலிருந்து ராமநாதன், ‘என்ன கதை எழுதுவது? எப்படி எழுதுவது?’ என்று எப்போதும் அதைப்பற்றியே யோசிக்க ஆரம்பித்தான். எப்படியும் இந்த போட்டியில் தனது முழுத் திறமையையும் காட்டி முதல் பரிசு பெற்றே தீருவது என்று மிகத் தீவிரமாக இருந்தான். ‘ஐந்து கிலோ சாக்லேட் முதல் பரிசாக தன்னுடைய பள்ளிக்கூட முகவரிக்கு வரும்போது தேனப்பனின் முகம் எப்படி மாறும்?’ என்று அடிக்கடி கற்பனை செய்து பார்த்துக் கொண்டான்!

பள்ளிக் கூடத்தில் கூட அடிக்கடி அந்தச் சிறுகதைப்போட்டி அறிவிப்பு வெளிவந்திருந்த அந்த காகிதத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்!

அன்று தமிழாசிரியர் தாமோதரன் மகாகவி பாரதியாரைப் பற்றிய பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். ராமநாதனோ அந்த சாக்லேட் பரிசைப் பற்றிய கற்பனையில் ஆழ்ந்துப் போயிருந்தான். அவனது கற்பனை உலகத்தில் அவன் மீது சாக்லேட் மழை பெய்துகொண்டிருந்தது!

திடீரென்று அந்தத் தமிழாசிரியர் ராமநாதனைப் பார்த்து, “டேய்… ராமநாதா, பாரதியாரின் மனைவி பெயரென்ன?” என்று ஒரு கேள்வியை கேட்டார்.

திடுக்கிட்டு எழுந்து நின்ற ராமநாதன் தனது கற்பனை உலகிலிருந்து விடுப்பட்டு ஒன்றும் புரியாமல், “சாக்லேட்!” என்றான்.

பாரதியாரின் மனைவி பெயர் சாக்லேட்டா? அந்த வகுப்பே ‘கொல்’லென்று சிரித்தது! அந்த ஆசிரியரும் தன்னை மறந்து சிரித்து விட்டார்!

ஒருசமயம் பாரதியாரே, எப்போதாவது தனது மனைவி செல்லம்மாவை ‘சாக்லேட்…சாக்லேட்..’ என்று செல்லமாக கூப்பிட்டிருப்பாரோயென்ற சந்தேகம் கூட அவருக்கு வந்துவிட்டது!

மதிய இடைவேளை மணியடித்தது.

ராமநாதன் பள்ளிக் கூடத்திற்கு எதிரேயிருக்கும் கடைக்குப்போய் தேன்மிட்டாய் வாங்கி சாப்பிடலாமென்று எழுந்தான்.

அப்போது அவனுடைய கால்சட்டை பையின் வெளியே நீட்டிக்கொண்டிருந்த அந்த சிறுகதைப் போட்டி விபரங்கள் இருந்த அந்த காகிதம் நழுவி பெஞ்சுக்கு அடியிலேயே கீழேவிழுந்தது. அது ராமநாதனுக்கு தெரியவில்லை!

ராமநாதன் பள்ளிக்கூடத்துக்கு வெளியே சென்றபோது, அங்கே அரசமரத்தடியில் பெருமாள்கோவில் யானை நிற்பதையும் சில சிறுவர்கள் அதை வேடிக்கைப் பார்ப்பதையும் பார்த்தான். உடனே ராமநாதனும் அங்கே சென்றான்.

அங்கே அருகேயே யானைப்பாகன் நின்றுக்கொண்டிருந்தான். அந்த யானை அதன் அருகே குவியலாக போடப்பட்டிருந்த நாணல்களை தும்பிக்கையினால் எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்தது. அதன் தலை அசையும் போதெல்லாம் அதன் கழுத்திலிருந்த மணி ‘டிங்…டாங்’ கென்று ஒலித்துக் கொண்டேயிருந்தது,

அந்த யானைக்கு கடையிருந்து ஒரு வாழைப்பழத்தை வாங்கி வந்து கொடுக்கலாமாயென்று ராமநாதன் யோசித்தான். உடனே அவனுக்கு யானைக்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்த பாரதியார் நினைவுக்கு வந்தார். உடனே ‘வேண்டாம் விபரீதம்’ என்று முடிவு செய்தான்!

யானையை வேடிக்கை பார்த்தவாறே ஒரு கால்மணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டிருந்த ராமநாதனுக்கு அந்த’ யானையிடம் ஆசீர்வாதமாவது வாங்கிட்டுப் போவோம்’ என்று தோன்றியது.

யானைக்கு அருகே சென்று தனது கால்சட்டை பையில் கையைவிட்டு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பாகனிடம் கொடுத்தான். அந்த யானையும் தும்பிக்கையை ஆசிக்கொடுக்க அவனை நோக்கி தூக்கியது.

அப்போதுதான் அவனுக்கு அந்த சிறுகதைப் போட்டிக்கான காகிதம் தன்னுடைய கால்சட்டை பையில் இல்லையென்ற விஷயம் சட்டென்று உறைத்தது!

‘ஐயயோ… அது எங்கே விழுந்தது? அந்த அதிர்ஷ்டக்கார தேனப்பனின் கண்ணில் பட்டால் காரியமே கெட்டு விடுமே’யென்று பள்ளிக் கூடத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான் ராமநாதன்.

‘இதென்ன யானையிடம் ஆசிவாங்க காசைக் கொடுத்துவிட்டு இந்த பொடியன் யானையிடம் ஆசி வாங்காமலேயே இப்படி பயந்து ஓடுகிறானே’ என்று பாகன் திகைத்தான்.

தும்பிக்கையைத் தூக்கிய யானையோ, இப்ப யாருக்கு ஆசி வழங்குவது என்று தும்பிக்கையை தூக்கியபடியே தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றது!

எங்கு விழுந்திருக்கும்? அவனுக்கு அந்த காகிதம் காணாமல் போனது கூட பெரிதாக தெரியவில்லை. அது தேனப்பனின் கண்ணில் படாமல் இருக்க வேண்டுமேயென்ற கவலைதான் பெரிதாக இருந்தது. அவனும் போட்டியில் கலந்துக்கொண்டால் அவனுக்கு மறுபடியும் குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால் என்ன செய்வது என்று தவித்தான்.

அவசரம் அவசரமாக தனது வகுப்புக்கு ராமநாதன் வந்தபோது, அந்த காகிதம், தான் உட்கார்ந்திருந்த இடத்தின் கீழே கிடப்பதைப் பார்த்தபோதுதான் நிம்மதியாக இருந்தது. பக்கத்தில் அரைத் தூக்கத்தில் தேனப்பன் டெஸ்கில் சாய்ந்து படுத்திருந்தான். ‘நல்லவேளை, இந்த காகிதம் தேனப்பன் கண்ணில் படவில்லை’ என்று ஆறுதல் பட்டுக்கொண்டே, அந்த காகிதத்தை எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டான்!

***

அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் உட்கார்ந்து கதைகள் எழுத ஆரம்பித்தான் ராமநாதன். தான் படித்த பஞ்ச தந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், கேள்விப்பட்டிருந்த பிரபல கதைகள் என்று எல்லாவற்றையும் புதுமை செய்கிறேன் என்று அதன் முடிவுகளையெல்லாம் மாற்றி மாற்றி புதிது புதிதாக இப்படி எழுதினான்.

1)’அது ஒரு நல்ல கோடைக்காலம். எங்கும் தண்ணீரே இல்லை. ஒரு காகத்திற்கு கடும் தண்ணீர் தாகம். அது தண்ணீரைத் தேடி அலைந்தபோது ஒரு இடத்தில் ஒரு பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. அருகே நிறைய கூழாங்கற்களும் கிடந்தன. ஆனாலும் அந்த புத்திசாலிக் காகம், ஒரு கடைவாசலில் கிடந்த ஸ்ட்ரா என்னும் உறிஞ்சு குழலை எடுத்து வந்து தண்ணீரைக் குடித்துவிட்டு, ‘கா…கா..’என்று கத்தியபடி சந்தோஷத்துடன் பறந்தது.’

2) ‘ஒரு கிராமத்தில் ஒரு திராட்சை தோட்டம் இருந்தது. அங்கே வந்த நரி ஒன்று திராட்சைப்பழம் சாப்பிட ஆசைப்பட்டது. ஆனால் திராட்சைப் பழக் கொத்துகளோ மிகவும் உயரத்தில் இருந்தது. அந்த நரி எம்பி எம்பி குதித்து திராட்சைப் பழங்களை பறித்து சாப்பிட முயன்றது. முடியவில்லை. அப்போது அருகே ஒரு ஏணி சாத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தது. அந்த நரி அதை எடுத்து வந்து வாழைமரத்தில் ஏணியைச் சாத்தி வைத்து ஏறி திராட்சைப் பழங்களை பறித்து சாப்பிட்டுவிட்டு, “என்ன தித்திப்பு…என்ன தித்திப்பு…” என்று சொல்லிக்கொண்டே சந்தோஷத்துடன் சென்றது!’

3)’ஒரு முயல் ஒரு சொம்பு நிறைய டீயை வைத்துக்கொண்டு, அவ்வப்போது சுடச்…சுட…குடித்துக் கொண்டேயிருந்தது. அப்போது அங்கே வந்த குரங்கு ஓன்று, “எதற்கு முயலாரே, இவ்வளவு டீயை குடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டது. அதற்கு அந்த முயல், “இன்று மறுபடியும் ஆமையுடன் ஓட்டப் பந்தயம் இருக்கிறது. முன்பு போல நான் தூங்கிவிடாமல் சுறுசுறுப்பாக இருப்பதற்குதான்!” என்றது.’

4)’அந்த வீட்டிலிருந்த எலிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டன. “இந்த வீட்டுப் பூனையின் கழுத்தில் ஒரு மணியை கட்டிவிட்டால் அது வரும்போது சத்தம் கேட்கும். நாமெல்லாம் ஆபத்தில்லாமல் தப்பித்து ஓடிவிடலாம்” என்று முடிவு செய்தன. “பூனையின் கழுத்தில் யார் மணியை கட்டுவது?” என்ற கேள்வி எழுந்தபோது ஒரு குட்டி எலி, “பூனை குடிக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலந்து விடுவோம். அது அந்த பாலைக் குடித்துவிட்டு தூங்கும்போது அதன் கழுத்தில் மணியை கட்டிவிடலாம்!” என்றது.’

5, 6, 7, 8, 9, 10 – இப்படி பத்துக் கதைகளை அந்த முயல் பத்திரிகையின் சிறுகதைப் போட்டிக்கு எழுதி அனுப்பி வைத்தான் ராமநாதன். ஏதாவது ஒரு கதைக்கு நிச்சயம் அந்த முதல் பரிசு 5 கிலோ சாக்லேட் கிடைக்குமென்று நம்பினான். அவன் கனவில் அடிக்கடி சாக்லேட் மழை பெய்து கொண்டேயிருந்தது!

***

ஒரு மாதத்திற்கு பிறகு ஒருநாள் அந்த வகுப்பில் சயின்ஸ் ஆசிரியர் சண்முகம் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கூரியர் டெலிவரிக்காரர் வந்து வகுப்புக்கு வெளியே நின்றார். அவர் கையில் ஒரு பார்சல் இருந்தது!

அதைப் பார்த்ததுமே ராமநாதனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது! பொதுவாக அந்த கிராமத்து பள்ளி மாணவர்களுக்கு அதுவும் ஆறாவது படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை எந்த கூரியர் பார்சலும் வந்ததில்லை. அந்த பார்சலைப் பார்த்ததுமே அது தனக்கான முயல் பத்திரிகையின் சாக்லேட் பரிசாகதான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ராமநாதன்.

தேனப்பனை அலட்சியமாக பார்த்தபடி எழுந்தான் ராமநாதன்.

“சார், க. தேனப்பன் என்ற பையனுக்கு, முயல் என்ற பத்திரிகை ஆபீஸிலிருந்து பார்சல் வந்திருக்கு!” என்றார் அந்த கூரியர் டெலிவரிக்காரர்.

‘ஐயோ, தேனப்பனுக்கா? அவன் எப்ப கதை எழுதினான்? அவனுக்கு எப்படி இந்தப் போட்டியை பற்றி தெரியும்? இந்தப் போட்டியிலும் ஜெயித்து விட்டானா? இதென்ன சோதனை?’ என்று ராமநாதனின் மனம் கிறுகிறுக்க ஆரம்பித்தது. அப்படியே சோர்ந்துப் போய் பெஞ்சில் உட்கார்ந்து விட்டான்!

நடந்தது இதுதான்!

ஒரு மாதத்திற்கு முன்புஒருநாள் பள்ளியில் மதிய இடைவேளையில் தேனப்பன் வகுப்பில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு பத்திரிகை காகிதம் கீழே கிடப்பதைப் பார்த்தான். அருகில் ராமநாதனையும் காணவில்லை. அந்த காகிதத்தை தேனப்பன் எடுத்துப் பார்த்தபோது, அது முயல் என்ற பத்திரிகையின் சிறுகதைப் போட்டிக்கான விளம்பரம் என்பதையும் அதுக்கு முதல்பரிசு 5 கிலோ சாக்லேட் என்பதையும் புரிந்துகொண்டான்.

உடனே அந்த பத்திரிகையின் சிறுகதைப் போட்டிக்கான விதிமுறைகளையும் முகவரியையும் குறித்துக்கொண்டு, அந்த காகிதத்தையும் அது ராமநாதனின் காகிதமாக இருக்கலாம் என்று எண்ணி அதை கிடந்த இடத்திலேயே போட்டுவிட்டான். வீட்டுக்கு சென்றதும் அன்றே ஒரு ஐந்து ரூபாய் தபால் கவரை வாங்கி அந்த முயல் பத்திரிகைக்கு தான் முன்பு எழுதி பீரோவில் போட்டு வைத்திருந்த அந்த சிறுகதையை அனுப்பி விட்டான்!

உடனே தேனப்பன் எழுந்து, “சார்… நான் முயல் என்ற பத்திரிகைக்கு, சிறுகதைப் போட்டிக்கு ஒரு கதை எழுதியிருந்தேன். அதற்கான பரிசுதான் வந்திருக்கு சார்!” என்றான்.

அப்புறமென்ன? அந்த ஆசிரியருக்கும் அந்த வகுப்பிலிருந்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம்! மகிழ்ச்சி! ராமநாதனுக்கு மட்டும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

தேனப்பன் ஆசிரியரிடம், “பார்சலை நீங்களே பிரியுங்கள் சார்!” என்றான் உற்சாகத்துடன்.

அந்த பார்சலின் உள்ளே ஒரு பெரிய பாலீதின் பாக்கெட்டில் உயர்தரமான ஐந்துகிலோ சாக்லேட்டுடன் ஒரு பாராட்டுக் கடிதமும் அந்த மாதத்திற்கான முயல் பத்திரிகையும் இருந்தது.

‘அந்தப் போட்டிக்கு நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் வந்திருந்ததாகவும் ஆனாலும் பெரும்பாலான கதைகள் தெரிந்த கதைகளின் தழுவலாக இருந்ததாகவும் யதார்த்தம், தனித்தன்மை, சுயமாக சிந்தித்து எழுதியது என்ற அடிப்படையில் க.தேனப்பனின் ‘கிட்டுவீட்டு வாழைமரமும் கோபுவும்’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசு வழங்கப்படுவதாக’ அந்த கடிதத்தில் அந்த பத்திரிகை ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது அந்த பக்கம் விசிட் வந்த தலைமையாசிரியருக்கு ஆச்சரியம்! ‘என்ன ஏதுவென்று விசாரித்து’ விட்டு, “அடேயப்பா… இவ்வளவு சாக்லேட்டா? இவ்வளவு சாக்லேட்களையும் என்னடா செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.

“சார், என் முதல் சிறுகதை பத்திரிகையில் வெளிவந்திருப்பதற்காக கிடைத்த இவ்வளவு சாக்லேட்களையும் நம்ம பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் கொடுக்கவிரும்புகிறேன்!” என்றான்.

தேனப்பனின் பதில் அந்த தலைமையாசிரியரை பரவசப்படுத்தியது. அவனது பெருந்தன்மையான மனதை நினைத்து அவர் பெருமைப்பட்டார். உடனே தனது பையிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து, “இதை என் அன்பளிப்பாக வைத்துக்கொள். கதை, கவிதைகள் எழுதுவதுடன் நன்றாக படிக்கவும் வேண்டும்!” என்றார்.

என்ன நீங்க திகைத்துப் போய் பாக்கிறிங்க? ” இந்தாங்க, உங்களுக்கு ஒரு சாக்லேட்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *