சிறுகதை

சாக்குப்போக்கு – ராஜா செல்லமுத்து

நாம் பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ விடுமுறை எடுத்து விட்டால்… இல்லை விடுமுறை எடுக்க வேண்டும் என்றால்…. ஐ ஆம் ஸஃப்ரிங் பிரம் ஃபீவர் என்று ஒரு லெட்டர் எழுதி கொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் இருப்போம் .

அப்படி இரண்டு மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்குச் சென்றால் கூட காய்ச்சல் முடிந்துவிட்டதா? என்று கேட்டுவிட்டு பள்ளிக்கு உள்ளே அனுமதிப்பார்கள். அது உண்மையான காய்ச்சலா? அல்லது விடுமுறைக்காக நாம் ஜோடித்த பொய்யா? என்பது விடுமுறை எடுத்தவருக்கே வெளிச்சம் .

இந்த விஷயம் இப்படி இருக்க

பரபரப்பான ஒரு அலுவலகத்தில் சாந்தகுமார் ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வரவில்லை. அவருக்கு ஏதோ முக்கியமான அலுவல்கள் இருந்திருக்கலாம் அலுவல் முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான் சாந்தகுமார்.

அலுவலகம் கிளம்பிய சாந்தகுமாரை இடைமறித்தாள் மனைவி.

என்னங்க ஒரு வாரமா நீங்க ஆபீஸ் போலயே .என்ன சொல்ல போறீங்க? என்று சாந்தகுமாரின் மனைவி கேட்க

இதெல்லாம் பெரிய விஷயமா? நாங்க எல்லாம் பெரிய பெரிய விஷயத்துக்க சின்னதா பொய் சொல்லி தப்பிச்சிருக்கம். இதெல்லாம் சாதாரண விஷயம் எப்படி சமாளிக்கிறேன் பாரு என்று சாந்தகுமார் சொன்னான்.

நீங்க லீவு போட்டது கூட மேனேஜர்ட்ட சொல்லலையே. அவர் என்ன நினைப்பார் என்று மனைவி கேட்டாள்.

அப்படியே சமாளிக்க வேண்டியதுதான். எதையாவது சொல்லி என்றான் சாந்தகுமார்.

நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தா. ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்துருவீங்க எப்பவும் உண்மையை சொல்லி பாருங்க. அதுதான் நல்லது. இப்ப நீங்க வேலைக்கு போனா மேனேஜர் என்ன ஏதுன்னு கேப்பாரு. ஒருவேளை உங்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிட்டா என்ன பண்ணுவீங்க? கொஞ்சம் யோசிங்க. இந்த வேலைய வைத்துதான் நமக்கு வாழ்க்க நடந்துக்கிட்டு இருக்கு .அதை விட்டுட்டு , நீங்க பேசாம ஊர் சுத்திட்டு உங்க பிரண்டு கூட போயிட்டு, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி லீவ் சொல்லலாம்னு மேனேஜர் நினைச்சா .அவருக்கு அது தெரிஞ்சா உங்களுக்கு இருக்கிற வேலையும் போயிருங்க.

குடிக்கிற கஞ்சிக்கு உல வச்சீராதீங்க என்று மனைவி ரொம்பவே கோபமாக பேசினாள்.

அடியே பொண்டாட்டி . ஏன் இப்படி நுனி மூக்கு மேல உனக்கு கோவம் வருது? மாமா எப்படி சமாளிக்கிறான் பாரு .

என்ன ஆபீஸ் உள்ள போனதும் நான் சொல்ற விஷயத்தை கேட்டு மேனேஜர் அப்படியே ஆடிப்போய் உடனே என்னை வேலைக்கு சேர்த்துக்கிருவார். நான் வேலை செய்ய ஆரம்பித்துருவேன் என்று ரொம்பவே தன்னம்பிக்கையோடு சொன்னான் சாந்தகுமார்.

டிப்டாப்பாக உடையணிந்து அலுவலகத்தில் நுழைந்த சாந்தகுமாரை இடமறித்தார் மேலாளர்

என்ன சாந்தகுமார் ஒரு வாரமா ஆளையே காணோம். எங்க போனீங்க? என்று கேட்டார்.

சார் உங்களுக்கு விஷயம் தெரியாதா ?எனக்கு ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் சார் .அது தான் உங்களுக்கு லீவு லெட்டர் எழுத முடியல .போன் பண்ணிக் கூட சொல்ல முடியல. இப்ப உடம்பு தேவலையாஆயிடுச்சு. அதான் டூட்டிக்கு வந்துட்டேன். என்று 32 பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே சொன்னான் சாந்தகுமார்.

இதைக் கேட்ட மேலாளருக்கு தூக்கி வாரிப் போட்டது

என்னது ஒரு வாரமாக காய்ச்சலா?அப்படியே கீழ நில்லுங்க. வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு ரெண்டு மாசம் கழிச்சு ஆபீஸ் வாங்க என்று சொன்னார்

சார் எதுக்கு சார். ரெண்டு மாசம் கழிச்சு வரணும். அதான் எனக்கு உடம்பு சரி ஆயிடுச்சே என்று சாந்தகுமார் சொல்ல

இப்ப எல்லாம் காய்ச்சல்ங்கிறது சாதாரண விஷயமல்ல. பெரிய பெரிய நோயக் கொண்டு வந்துரும். உங்களுக்கு இருக்கிற காய்ச்சல் உங்க பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறவங்களுக்கு வந்திரும். அது அவருக்கு பரவும் .அப்புறம் அடுத்தவங்களுக்கு பரவும். இப்படியே ஒவ்வொருத்தரா பரவி மொத்த ஆபீசுக்கும் நோய் வந்திரும் .அதனால நீங்க வீட்டுக்கு போயி ரெண்டு மாசம் கழிச்சு வாங்க என்று ஒரேடியாக விரட்டினார் மேலாளர்

சாந்தகுமார் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் மேலாளர் அசையவே இல்லை

நீங்க போகலாம் சாந்தகுமார் .நீங்க நிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நோயைப் பரப்பி கிட்டு இருக்கீங்க .அதனால போய் ரெண்டு மாசம் கழிச்சு வாங்க.

ஐயையோ நல்லா இருந்த உடம்ப காய்ச்சல் ன்னு சொன்னதுதப்பா போச்சே . ஒரு சாக்குப் போக்குக்கு சொன்ன அந்த சாக்குப்போக்கு நம்ம வாழ்க்கைக்கு சங்கு ஊதிருச்சே. தப்பு பண்ணிட்டேன் போல .பொய் சொல்ல கூடாதுன்னு பொண்டாட்டி சொன்னது சரி ஆயிடுச்சு. வீட்டு வேலையா இருந்ததுனால தான் ஆபிசுக்கு நான் வர முடியல அப்படின்னு உண்மையை சொல்லி இருந்தா. கண்டிப்பா நம்மள வேலைக்கு சேர்த்திருப்பார் காய்ச்சல்னு பொய் சொன்னது நம்மள கெடுத்த புடிச்சே என்ற சாந்தகுமார் புலம்பித் தீர்த்தான்

மனைவியிடம் என்ன சொல்வது? என்று குழம்பியபடியே வீட்டுக்கு வந்தான் சாந்தகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *