சிறுகதை

சவாலைச் சந்தித்து வெற்றி பெறுவேன் | கரூர். அ. செல்வராஜ்

தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் தொழிலை புதிதாய் தொடங்கியிருந்தான் தங்கராஜ்.

வீட்டிலிருந்து 2 கி. மீ. தொலைவிற்குள் அமைந்திருந்த தெருக்களில் மட்டும் தனது தொழிலைச் செய்து வந்தான்.

காலம் தவறாமை, கனிவான பேச்சு, அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் வயது வித்தியாசம் பார்க்காமல் மிகுந்த மரியாதையுடன் நடத்துதல் போன்ற நல்ல பண்புகளோடு காய்கறி விற்பனையில் நியாயமான விலை என்பதும் சேர்ந்து கொண்டதால் குறுகிய காலத்தில் நல்ல பெயர் வாங்கியிருந்தான் தங்கராஜ்.

வழக்கம் போலக் காலை நேரத்தில் காய்கறி விற்பனையை முடித்து விட்டு தனது வீட்டை நோக்கித் தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு நடந்து கொண்டிருந்தான். செல்வ விநாயகர் கோவில் தெருவை கடந்து சென்ற போது அவனுக்குப் பின்னால் இருந்து பெயர் சொல்லி அழைக்கும் குரல் கேட்டது. அந்த குரலை கேட்டதும் தள்ளு வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு தானும் நின்றான் தங்கராஜ். அப்போது அவனது பள்ளி கால நண்பன் பாலமுருகன் வந்து நின்று பேசினாள்.

” தங்கராஜ்! எங்க ஏரியாவுல புதுசா காய்கறி விற்கிறது நீ தானா? ஏம்பா, என்னை யார் என்று உனக்குத் தெரியுதா ?”

” பாலா! உன்னை எனக்கு தெரியாமல் போகுமா? நீ நல்லா படிச்சு, நல்ல வேலையிலும் இருப்பே. நான் நல்லா படிக்கல. இப்ப காய்கறி வித்து கஷ்டப்படுகிறேன். சரிப்பா, என் சோக கதை உனக்கு வேண்டாம். நீ என்ன வேலையில் இருக்கிறே? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? குழந்தைகள் எத்தனை? அதைப் பற்றியெல்லாம் சொல்லுப்பா ” என்றான் தங்கராஜ்.

தங்கராஜ் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லத் தொடங்கினான் பாலமுருகன்.

” தங்கம்! நான் பி.காம் படிச்சிட்டு பேங்க் வேலைக்கு பரீட்சை எழுதி பாஸ் ஆனேன். இப்போ பேங்க்ல கிளார்க்கா வேலை செய்கிறேன். வேலையிலே முதன் முதலா வடநாட்டில் 3 வருஷம் வேலை பார்த்தேன். அப்புறம் அங்கே இருந்து மாறுதல் வாங்கிட்டு நம்ம ஊர் மதுரைக்கு வந்தேன். இங்க வந்து 6 மாசம் ஆச்சு. சொந்த ஊருக்கு வந்ததில ஒரு பக்கம் சந்தோஷம். ஆனா, இன்னொரு பக்கம் வருத்தம். இப்ப சொந்த ஊருக்கு ஏன் தான் வந்தோம்னு இருக்குது ” என்று சலிப்புடன் சொன்னான் பாலமுருகன்.

பாலமுருகனின் மனம் நிம்மதி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பேசத் தொடங்கினான் தங்கராஜ்.

” பாலா! நீ வட நாட்டிலேயே வேலையில் இருந்தபோது பல பிரச்சினைகளில் இருந்திருக்கலாம். சொந்த ஊருக்கு வந்த பிறகு அதையெல்லாம் தீர்ந்திருக்குமே. மனிதனுக்கு நிம்மதியைத் தருவது நல்ல சம்பவங்கள். சந்தோஷமான மனநிலை. இதெல்லாம் உனக்கு கிடைக்கலையா? அவரவர் மன நிம்மதி அவரவரின் நடவடிக்கையில் தானே அடங்கியிருக்குது. இதை நான் சொல்லியா உனக்கு புரிய வைக்கணும்?” என்றான் தங்கராஜ்.

தங்கராஜ் என் அன்பான, ஆதரவான வார்த்தைகளை கேட்டு கொஞ்சம் மனமாற்றம் நீங்கிய பாலமுருகன் பேசினான்.

” தங்கம்! நான் வடநாட்டில் இருந்த முதல் வருஷத்திலே எனக்கு கல்யாணம் ஆகலே, 2 வது வருஷம் கழிச்சுக் கல்யாணம் ஆச்சு. ஆனால் மனைவியை வடநாட்டுக்கு அழைச்சிட்டு போகல. நிம்மதியா இருந்தேன். 3 வது வருஷம் ஆனபிறகு பெண் குழந்தை பிறந்தது. அதிலிருந்து செலவுகள் அதிகம் ஆச்சு. வடநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்ததும் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமானது. அதனாலே பேங்க்ல நிம்மதியா வேலை பாக்க முடியல. பேங்க் மேனேஜர்கிட்ட திட்டு வாங்க ஆரம்பிச்சேன். சில சமயம் தண்டனையும் வாங்க ஆரம்பிச்சேன். என் மனைவி வீட்டு சொந்தங்கள் பேங்கிலே கடன்களை வாங்கிட்டு தவணைகளை சரி வர கட்டலே. கடனுக்கு சிபாரிசு செஞ்ச எனக்கு கெட்ட பேரு கிடைத்தது. என் மனைவி பானுமதி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழ ஆரம்பிச்சா. அதனாலேயே எனக்கு கடன் சுமை அதிகமாகிட்டே வந்தது.

எனக்கு இப்ப மன நிம்மதியே இல்லை. இந்த நேரத்தில் தான் உன்னை சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைச்சது. படிச்சிட்டு வேலை பார்க்கிறது இத்தனை சங்கடங்களா? அப்படின்னும் நினைக்கத் தோணுது ” என்றான் பாலமுருகன்.

நண்பன் பாலமுருகன் அவனின் மன வேதனையை போக்கும் விதமாக தனது பேச்சை தொடர்ந்தான் தங்கராஜ்.

” பாலா! நடந்தது எல்லாம் நன்மைக்கே. இதுவும் கடந்து போகும் . இதுவும் பழகிப் போகும். இப்படியெல்லாம் நாம் நினைக்கிறோம். பேசுவதும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். புயலுக்குப் பின்னே அமைதி வரும். இது மாதிரி உன் வாழ்க்கையில் நீ சந்திக்கும் எல்லாத் துன்பங்களையும் கொஞ்சம் கொஞ்சமா இன்பமா மாத்துகிற மனஉறுதி – சக்தி உன்கிட்ட இருக்கிறது .. ஒவ்வொரு பிரச்சனை வரும்போதெல்லாம் அதற்கு தீர்வு ஒன்று கட்டாயம் இருக்கும். அதை அறிந்து நடந்துகோப்பா. குடும்ப வாழ்க்கையில் ஏன் சவால் வந்தால் அதைச் சமாளித்து ஆகணும். அதிகமான படிப்பறிவில்லாத எனக்கு அந்தச் சவால்களை எல்லாம் பட்டறிவால் சமாளித்து வருகிறேன். நானே சமாளிச்சுக்கறேன். நீ படிச்ச புத்திசாலி. புலம்புவதை விட்டு விட்டு புது தீர்வுகளைக் கண்டு இனிமேல் உன் வாழ்க்கையில் புதிய வசந்த காலம் வரும். சரி பாலா, ரொம்ப நேரம் பேசியும் உன்னை போரடித்து விட்டேன், நான் வரட்டுமா? அடிக்கடி சந்திப்போம். மனம் விட்டுப் பேசுவோம் ” என்று சொல்லிக் கொண்டே தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வீடு சென்று சேர்ந்தான் தங்கராஜ்.

சவாலைச் சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு போனான் பாலமுருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *