“தள்ளி போப்பா..இங்க நிற்கக்கூடாது”!
“இந்தாப்பா 307… எல்லாத்துக்கும் நான் வரனுமா..இந்த கிழவனை நீயே போகச் சொல்லக்கூடாதா” இன்ஸ்பெக்டர் கோபத்தில் கத்தினார்.
“நான் பல தடவை விரட்டிவிட்டேன் ஐயா. போவது போல போக்கு காட்டிவிட்டு மறுபடியும் வந்துவிடுகிறார் ” உதவியாளர் பரிதாபமாக சொன்னார்.
“நீ டூட்டி பார்க்கிற லட்ச்சனம் இதான் ” ஏதோ நினைத்துக்கொண்டவராக அந்த கிழவரை அழைத்தார்.
” பெரியவரே! எதற்கு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிக்கறீங்க. எதாவது புகார் செய்யனுமா. அப்படி இருந்தாலும் நாளைக்கு வாங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.
” நானே பலமுறை கேட்டுவிட்டேன்..ஐயா. பதில் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். டீக் குடிக்க இருபது ரூபாய் கூட கொடுத்துப் பார்த்தேன். அதையும் வாங்கவில்லை ” இது உதவியாளர்.
” இவரை அப்புறம் பார்க்கலாம். உள்ளே சுத்தமாக இருக்கா. அந்த ரைட்டர் நேரம் காலம் தெரியாமல் காது குடைந்து கொண்டு எதாவது யோசனையில் இருப்பார் ” அலுப்புடன் உள்ளே போனார் இன்ஸ்பெக்டர்.
அதற்குள் பெரிய மாலையை ஒருவர் எடுத்து வந்தார்.
” இன்னும் கொஞ்ச நேரத்தில் புது டிஎஸ்பி வரப்போகிறார். எல்லாம் சரியாக இருக்கனும். சொதப்பிடாதீங்க” இன்ஸ்பெக்டர் அவசரத்தில் பேசினார்.
பெரியவர் அங்கே இருந்த மரத்தின் பின்னால் போனதை யாரும் கவனிக்கவில்லை.
ஜீப் சத்தம் கேட்டது.
” ஐயா வந்துவிட்டார்..” காவல் நிலையமே பரபரப்பானது.
இன்ஸ்பெக்டர் மாலையை டிஎஸ்பி கழுத்தில் போட்டு ஒரு சல்யூட் வைத்தார்.
அந்தப் பெரியவர் மரத்தின் பின்னால் நின்று கொண்டு கண்களில் நீர் வழிய இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
இவங்களுக்கு தெரியுமா புது டிஎஸ்பி இவருடைய ஒரே மகன் என்பது.
பெரியவர் தலை நிமிர்ந்து கம்பீரமாக நடந்து வெளியே போனார்.
#சிறுகதை