மும்பை, ஏப். 16–
நடிகர் சல்மான்கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் சல்மான் கான் வீடு உள்ளது. இந்நிலையில், நடிகர் சல்மான்கானின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மும்பை போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேரை குஜராத்தில் கைது செய்தனர்.
நடிகர் சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டு முன்பு துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சல்மான்கானின் வீட்டு முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்த விசாரணையில் இறங்கிய போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
2 பேர் கைது
ஒருவன் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், இன்னொருவன் கைக்குட்டையால் தனது முகத்தை மூடியிருந்ததாகவும் தெரிவித்த போலீசார், மர்ம நபர்களைத் தேடி வந்தனர். 4 ரவுண்டுகள் சுடப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்து தோட்டக்களை மீட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் விசாரணையில் சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாகக் கூறிய முகநூல் பதிவு கண்டறியப்பட்டது. இதன் ஐபி (இன்டர்நெட் புரோட்டோகால்) முகவரி போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அந்த பேஸ்புக் பதிவில், ‘இது முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்திய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மும்பை குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், குற்றவாளிகளான விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இருவரையும் கைது செய்த மும்பை போலீசார், விசாரணைக்கு மும்பை அழைத்து வரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.