சிறுகதை

சலேத்தின் மரணம் | ராஜா செல்லமுத்து

‘‘என்னது சலேத்து எறந்திட்டாரா..? ஆச்சர்யமாகக் கேட்டான் விஜய்

‘‘ஆமாங்க.. இப்ப தான் செய்தி வந்ததுன்னு..’’ விஜயிடம் சொன்னான் ரகுநாதன்.

‘‘ஆமா எப்பிடி இறந்தாரு..?’’

‘‘ரெண்டு மூணு நாளா.. உடம்புக்கு முடியாம இருந்திருக்காரு..ஆஸ்பத்திரியில வச்சிருந்திருக்காங்க.. இன்னைக்கு திடீர்ன்னு இறந்திட்டாருன்னு போன் வந்தது..’’ என்றான் ரகுநாதன் .

‘‘அது சரி.. ரகு இப்ப ஊரடங்கு வேற.. கார் வண்டி அப்பிடி இப்படின்னு எதுவும் போகக்கூடாதே.. பிறகு எப்பிடி இறப்புக்கு போறது..?’’ என்று விஜய் சொல்ல

‘‘ஆமா.. நீ.. சொல்றது உண்மை தான் சொந்த பந்தம்னு நிறைய பேரு நிறைய ஊர்கள்ல இருக்காங்க.. அவங்கெல்லாம் எப்பிடி வந்து சேரப்போறாங்கன்னு தெரியலையே..!’’

‘‘ம்ம்.. இப்ப பாடி எங்க இருக்காம்..’’

‘‘திண்டுக்கல் ஆஸ்பத்திரியில..’’

‘‘அடடா.. திண்டுக்கல்லுக்கும் சலேத்து ஊருக்கும் ரொம்ப தூரம் இருக்குமே..!’’

‘‘ஆமா இப்பிடியொரு இறப்பு மனுசனுக்கு வரக்கூடாது.. ஆளு அம்பு பேரன் பேத்திகன்னு யாரும் போகாம எப்பிடி அடக்கம் பண்ணப்போறாங்களாம்..?’’

‘‘தெரியலையே..’’ என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் சலேத்தின் உறவினர் ஏசு வந்து நின்றார்.

‘‘சலேத்து..’’ என்று விஜய் வாய் திறப்பதற்குள்

‘‘ஆமா.. எல்லாம் முடிஞ்சு போச்சு..’’ என்று ஏசு சொன்னார்.

‘‘தனிமனுச வாழ்க்கை சரியா இல்லன்னா.. கடைசியல இப்பிடித்தாங்க.. சலேத்து தான் போன போக்குல வாழ்க்கயை நடத்திட்டாரு.. இப்படித்தான் வாழணும்ற.. ஒரு வரைமுறை இருக்குங்க.. அதவிட்டுட்டு எப்பிடி எப்படியோ வாழ்ந்து போயிட்டாரே..’’ என்று இன்னொருவர் வருத்தப்பட்டார்.

‘‘நீங்க.. சொல்றது ரொம்ப கரைக்ட்டுங்க.. சலேத்து தன்னோட வாழ்க்கைய ஒரு கட்டுக்கோப்பா வச்சுக்கல.. இப்பிடி தனியா போய் ஆசுபத்திரியில செத்துக்கெடக்கணும்னு விதி..’’ என்று நொந்து கொண்டனர் உறவினர்கள்.

‘‘சரி.. ஆனது ஆகிப்போச்சு.. இப்ப என்ன பண்ணப் போறீங்க..’’ என்று விஜய் கேட்டான்.

‘‘இப்ப ஊரடங்கு உத்தரவு போட்டுருக்காங்க.. ஒரு கார்ல மூனு பேருக்கு மேல போக முடியாது.. அப்பிடி போனா.. போலீஸ் கெடுபிடி ரொம்ப அதிகமா இருக்கும்.. அதுனால சலேத்தோட பொண்ணு மருமகள் இன்னும் ரெண்டு பேரும் போகலாம்னுட்டு இருக்கோம்..’’ என்றார் ஏசு.

‘‘சரி.. சரி.. ஆக வேண்டியதப்பாருங்க..’’ என்று சொல்லிய நட்புக் கூட்டம் நழுவியது.

‘‘கார் புடிச்சிருக்ககோம்.. ஆசுபத்திரிக்கு போயி பாடிய வாங்கி டிஸ்போஸ் பண்ணிட்டு வரணும்..’’ என்று ஏசு உட்பட உறிவினர்கள் காரில் ஏறினர்.

‘‘அப்பா..’’ என்று மகள் கீதா உள் நெஞ்சில் அழுதது அங்கிருந்த அத்தனை பேரின் உயிரையும் பிடுங்கியது.

ஏற்கனவே கொரோனா நோயாளிகள் அந்த மருத்துவமனையில் இருப்பதால் கூட்டம் ரொம்பவே குறைவாக இருந்தது.

உலாவிக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

‘‘அப்பா.. எங்க இருக்காரு..?’’ என்று மகள் கேட்டார்.

‘‘தெரியல கேக்கணும்..’’ என்று ஆஸ்பத்திரியின் உள்ளே சென்று வரவேற்பறையில் விசாரித்தனர்.

‘‘சலேத்து..’’ என்று ஏசு வாய் திறப்பதற்குள்

‘‘ஓ.. அவரா.. இப்படியே லெப்ட்ல போயி ரைட்ல திரும்புங்க.. 302 ம் நம்பர் ரூம் வரும் ; அங்க தான் அவரோட பாடி இருக்கு ..’’என்று வரவேற்பறையில் இருந்தவர் சொல்ல

‘அடடா.. மனுச வசுரு எவ்வளவு மலிவா போச்சுன்னு பாருங்க.. ஏதோ பொருள் இருக்கிற எடத்த சொல்ற மாதிரி சொல்றாங்களே..’ என்று நொந்துகொண்டு உறவினர்கள் 302 ரூமுக்கு விரைந்தனர். அங்கே உயிரற்றுக்கிடந்தார் சலேத்து

‘‘அப்பா..’’ என்று மகள் அழுதாள்.

‘‘இனி அழுது எதுவும் ஆகப்போறதில்லம்மா.. அடுத்து நடக்க வேண்டிய வேலைய பாருங்க..’’ என்று அங்கிருந்த ஊழியர் சொன்னார்.

‘‘பாடிய ஊருக்கு கொண்டு போக முடியாது.. சொந்த பந்தமுன்னு யாரும் வந்து பாக்கவும் முடியாது.. ரொம்ப இக்கட்டான சூழுல்ல சலேத்து இறந்திட்டாரு. இங்க பக்கத்தில மின்சார மயானம் இருக்கு. அதில எரிச்சிட்டு போங்க..’’ என்று அந்த ஊழியர் சொல்ல

‘‘அப்பிடியே செய்யலாம்..’’ என்று பாடியை வாங்கிக்கொண்டு மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

ஊர் முழுசும் வேட்டு வெடி, வச்சு தண்ணியடிச்சு சண்ட சத்தம் போடல. நீர்மாலை எடுக்கல; கொள்ளி ஒடைக்கல; ஊர் உறவுகள் கூடி ஒப்பாரி வச்சு அழுகல; கோடித்துணி போட்டு ஊர் சுத்தி மொய்போட்டு அடக்கம் பண்ணல; சாதி சம்பிரதாயங்களின் வழக்கத்துக்கு மாறாக சலேத்து மண்ணில் புதைக்கப்படாமல் எரிக்கப்பட்டார் .

ஊரடங்கு சில உண்மைகளை உலகுக்குப் புரியவைத்துக்கொண்டிருக்கிறது. அதில் சலேத்தின் மரணமும் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *