…
இரவு உணவு உண்பதற்காக பெரியசாமியும் பால்பாண்டியும் நகர வீதியில் வந்து கொண்டிருந்தார்கள் .
எவ்வளவு அகலமான தார் சாலையாக இருந்தாலும் ஆட்களை நடக்க விடாமல் அடைத்துக்கொண்டு போகும் வாகனங்கள்; குறுகிய பாதையிலும் குறுக்கே மறித்து நிற்கும் வண்டிகள் என்று நகரச் சாலைகள் மனிதர்களை நடக்க விடாமல் செய்திருந்தன.
கிராமத்திலிருந்து வந்த பால்பாண்டிக்கும் பெரியசாமிக்கும் இந்த நகர வாழ்க்கை கசந்தது. வெட்ட வெளி, பொட்டல்காடு, கை வீசி நடக்கும் அகன்ற வீதி ,மேற்கு தொடர்ச்சி மலை, சில்லென்று வீசும் குளிர் காற்று, கண்களைத் தடவும் மேகம் .கிணற்றுத் தண்ணீர் ஆற்றுத் தண்ணீர், ஊற்றுத் தண்ணீர் என்று அத்தனையிலும் குளித்து, குடித்து வளர்ந்து வந்த நபர்கள் நகரச் சாலையும் நகர வாழ்க்கையும் பார்த்தபோது அவர்களுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
இது என்ன வாழ்க்கை? அரைசாண் வயிற்றுக்கு பாடுபடும் மனிதர்களைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. நிமிஷங்களைக் கூட விஷமாக கரைத்துக் கொண்டிருக்கும் இந்த நகரத்தில் மனிதர்கள் எப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ? என்று வெறுத்துப் போய் சாலையின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்கள் இருவரும்.
நல்ல உணவகம் இருந்தால் அங்கு சப்ளை செய்வதற்கு நல்ல ஆட்கள் இருக்க மாட்டார்கள். சப்ளை செய்வதற்கு நல்ல ஆட்கள் இருந்தால் அந்த உணவகத்தில் உணவுகள் நன்றாக இருக்காது. இந்த சாபக்கேட்டில் தான் நகரத்து உணவகங்கள். குவான்டிட்டியும் குவாலிட்டியும் ஒரு சேர இருக்கும் கடையைத் தேடிப் பிடிப்பது கடினம். அதுவும் இரவு மணி 10 ஐ தொடப் போகும் நேரம் என்பதால் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்று பால்பாண்டியும் பெரியசாமியும் அந்தக் குறுகிய வீதியில் உணவகம் தேடி அலைந்தார்கள். அடைத்து வைக்கப்பட்ட பொருட்கள் நிறைந்த ஒரு உணவகத்தை தேர்ந்தெடுத்தான் பெரியசாமி. இங்கே சாப்பிடலாம் என்று இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
அது உணவகம் மாதிரித தெரியவில்லை .கோழிக் கறி பொரிக்கும் இடமாக வெப்பம் கட்டி நின்றது.
இங்க போயா சாப்பிடுறது? என்று முதலில் அவர்களுக்கு வெறுப்பு வந்தாலும் நெடுந்தூரம் சென்றால்தான் வேறு ஒரு உணவகத்தைச் சென்றடைய முடியும் என்ற எண்ணத்தில் நடந்தார்கள்.
அதுதான் சொர்க்கம் என்று அங்கு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள் .
அமர்ந்து அரை மணி நேரம் ஆன பிறகு கூட அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்பதற்கு யாரும் வரவில்லை. கோபப்பட்ட பெரியசாமி ஹலோ, இங்க என்ன வேணும்னு கேட்க மாட்டீங்களா? என்று கொஞ்சம் அதட்டலாகக் கேட்டபோது கல்லாவில் அமர்ந்த பெண்மணி மெல்ல வந்தாள்.
சார் என்ன சாப்பிடுறீங்க ? என்று கேட்டாள்.
இட்லி, ஆம்லெட் இரண்டு பிளேட் என்று சொல்லவும் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலானது.
அந்த இட்லியையும் சாம்பாரையும் கொண்டு வந்து கொடுத்த நபர் ஒரு விதத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்; அவர் உணவை கொடுத்த போதே அவர் கைகளில் நடுக்கம் இருந்தது. பெரியசாமியையும் பால்பாண்டியனயும் பார்த்து பயந்து கொண்டே வேறே… ஏதாவது வேணுமா? என்று கேட்டார்.
ஆம்லெட் குடுங்க என்ற போது அதைத் தயார் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு மேலானது. அதே மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்த நபர் தான் ஆம்லேட்டையும் கொண்டு வந்தார். அவர் கொடுக்கும் தோரணை அவர் நடக்கும் விதம் எல்லாம் பார்த்த பெரியசாமிக்கு பரிதாபமாகப் போனது.
ஏன் இப்படி நபர்கள் எல்லாம் சர்வ வேலைக்கு வச்சு இருக்காங்க என்று பால்பாண்டி கேட்டபோது நல்ல மனநிலையில் இருக்கிற ஆட்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கணும் . நிறையக் கேள்வி கேட்பாங்க . இந்த மாதிரி இருக்கிற ஆளுக வேலைக்கு வச்சிக்கிட்டா அவங்க எவ்வளவு கொடுத்தாலும் கேட்க மாட்டாங்க. எவ்வளவு நேரம் வேணாலும் வேலை வாங்கலாம். அப்படிங்கற ஒரு இருமாப்பு தான் கடைக்காரங்களுக்கு அதுதான் இந்த மாதிரி ஆட்களை வேலைக்கு வச்சு இருக்காங்க என்று பால்பாண்டி சொன்னபோது
எஸ் நீங்க சொல்றது உண்மைதான். இவருக்கு எந்த விவரமும் தெரியல என்று பெரியசாமி சொன்னான். சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவரின் பக்கத்திலும் இருந்த சாம்பார் எடுத்துக்கவா? என்று கேட்டார் அந்த நபர்.
ஏன் இப்படி கேட்கிறார்? என்று பால்பாண்டி நினைக்க
அதில் பாதி சாம்பார் இருந்தது. இது போதுமா எடுத்துக்கலாமா ? என்றார் அந்த சர்வர்.
சரிதான் இவருக்கு முழுமையாக மனநலம் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை இருவரும் உணர்ந்து கொண்டார்கள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சாம்பாரை கேட்கிறாரே? அவருக்கு மனநிலை இருக்க வேண்டும்? என்று இருவரும் நினைத்தபோது அவர் அரைக் கப் இருந்த சாம்பாரை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அதை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை.
அடிக்கடி வந்து ஏதாவது வேணுமா? வேணுமா? என்று கேட்டார் .அதற்கு அவர்கள் போதும் என்று சொன்னார்கள்.
சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சர்வரை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சாப்பிட்டு முடித்து கை கழுவி, டிபனுக்கான பில் தொகையைக் கொடுத்துவிட்டு அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சர்வரைக் கூப்பிட்டு கணிசமான ஒரு தொகையை கையில் கொடுத்தான் பால்பாண்டி.
அதை வாங்கிய அந்த சர்வருக்கு ஏக சந்தோசம் . இன்னதென்று புரியாத புன்சிரிப்பு. அவர் மனதிற்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை சிறகடித்தது போன்ற ஓர் உணர்வு அவர் முகத்தில் மலர்ந்தது. அதைப் பார்த்த பால்பாண்டிக்கும் சந்தோசம்.
வேறொரு நபர் சாப்பிடும்போது இப்படிக் கேட்டிருந்தால் நடக்கிற கதையே வேறு? இவர் மனநிலை சரியில்லை என்று பரிதாபப்பட்டதோடு அவருக்குப் பணமும் கொடுத்து விட்டு வந்தான் பால்பாண்டி .
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கடை முதலாளி பெண் தன் கணவரிடம் சொல்லி ஏதோ சிரித்தாள். இதைப் பால்பாண்டி கவனித்தான்.
எதற்கு இந்த பெண் சிரிக்கிறாள். நாம் கொடுத்தது அந்த மனநிலை சரியில்லாத மனிதருக்கு தானே? அவர்கள் ஏன் இது குறித்துச் சிரிக்க வேண்டும் ? ஒருவேளை இதை ஏளனமாக நினைத்து இருப்பார்களோ ? இல்லை இவனுக்கெல்லாம் இவ்வளவு பணம் கொடுத்துச் செல்கிறார்களே என்று நம்மை பைத்தியம் என்று நினைத்து இருப்பார்களோ? என்று பால்பாண்டியும் பெரியசாமியும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
அந்த உணவகத்திற்கு இனிமேல் செல்லக்கூடாது என்று இருவரும் நினைத்தார்கள்.
காரணம் அங்கு சாப்பிட்ட உணவின் ருசிக்காக அல்ல.
மனநிலை பாதிக்கப்பட்ட இது போன்ற மனிதர்களை இன்னொரு முறை நாம் சந்திக்கக் கூடாது. இதனால் நம் மனம் பாதிக்கப்படுகிறது என்று நினைத்தபடியே வீடு நாேக்கி நடந்தார்கள்.