ஆர்.முத்துக்குமார்
கடந்த இரு வாரங்களாக இந்திய ரஷ்ய உறவுகள் மேம்பட்டு இருப்பதை காண முடிந்தது. ரஷ்ய பிரதமர் புதின் தனி நபரை பாராட்டுவதில் கவனமாகவே இருப்பார், ஆனால் கடந்த மாத இறுதியில் நடந்த ஒரு நேரடி விவாத மேடையில் பிரதமர் மோடியை மனம் திறந்து பாராட்டி, தான் மதிக்கும் ஓரு நல்ல தலைவர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய வளர்ச்சிகள் தனக்கு ஆச்சரியத்தை தருவதாகவும் ரஷ்யா – இந்தியாவுடனான உறவுகளை பெருமையுடன் மதிப்பதாகவும் மேலும் உறுதிபெற நடவடிக்கைகள் எடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த பத்து நாட்களில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக சென்று இருந்தபோது நம்முடனான நெருக்கத்தின் பயன்களை உணர்ந்து இருந்தார்.
இது நமக்கு மிகப்பெரிய பக்கபலம். காரணம் அவர்களுடனான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவுடனான உறவுகளின் பலனாக நாம் விண்வெளி துறையில் பல சாதனைகள் செய்து வருகிறோம்.
அணுமின் நிலையத்தை கூடங்குளத்தில் வெற்றிகரமாகவே நிர்மாணித்து பசுமைமய மின் உற்பத்தியில் உலக நாடுகளுக்கே கலங்கரை விளக்காக இருக்கிறோம்.
மேலும் ராணுவ தளவாடங்கள் வாங்குவதுடன் அவற்றை நாமே தயாரித்துக் கொள்ள தொழில்நுட்ப சமாச்சாரங்களையும் நமக்கு தந்தும் விடுகிறார்கள்.
ஆவடியில் பீரங்கி தொழிற்சாலை முதல் ‘பிரம்மோஸ்’ மின்னல் வேக ஏவுகணைகள் வரை இந்தியாவில் தயாரிக்கப்பட, ரஷ்யா தந்த தொழில்நுட்பங்கள் அதிநவீனங்கள் ஆகும்.
‘பிரமோஸ்’ ஏவுகணைகள் ஆசிய பகுதியில் உள்ள பல சிறு நாடுகள் தங்களது பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள நம்மிடம் வாங்க ஒப்பந்தங்களும் செய்து கொள்ள முன் வந்திருப்பது நமது பொருளாதாரத்துக்கும் வலு சேர்க்கிறது.
எந்த பலனையும் எதிர்பார்க்காது பல்வேறு தொழில்நுட்பங்களை தந்து இந்தியாவை வளரும் வல்லரசாக மாற்றிய பெருமையில் ரஷ்யாவின் பங்கும் மிக அதிகமாகவே இருப்பதை மறந்து விடக்கூடாது.
ரஷ்யாவை ஒதுக்கி வைக்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா கட்டளை பிறப்பித்தாலும் பொருளாதார தடைகள் அறிவித்தாலும் அதை மீறி ரஷ்யாவுடனான உறவுகளுக்கு மதிப்பு தந்து வருகிறது இந்தியா.
ஐ.நா. பொதுச் சபையில் நாஜி கொள்கைக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. 106 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. சபையில் சர்வதேச பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக, கலாச்சார, மனித உரிமைகள், அரசியல், நிர்வாகம், நீதி என 6 குழுக்கள் உள்ளன. இதில் சமூக – கலாச்சார – மனித உரிமைகள் குழுவின் கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பரில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் உறுப்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்படி ரஷ்யா சார்பில் நாஜி, நவீன நாஜி, இனவாத ஒழிப்பு தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாகிஸ்தான், வடகொரியா, சிரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவுடன் இணைந்து இந்த தீர்மானத்தை தயார் செய்தன. இதன் மீது விரிவான விவாதம் நடத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பங்கேற்றார். பின்னர், இந்தியா உள்ளிட்ட 106 நாடுகள் ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. பெரும்பான்மை வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா உட்பட 52 நாடுகள் எதிராக வாக்களித்தன. 15 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இப்படி உலக நடப்புகளில் நாம் எடுக்கும் உறுதியான தன்னிச்சை நடவடிக்கைகள் பல சிறு நாடுகளுக்கு ஆச்சர்யத்தை தந்து நம்மை நல்ல உதாரணமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
அடுத்த மாதம் நாம் ஜி20 அமைப்பின் தலைமையை ஏற்க இருக்கிறோம். உலக நாடுகள் நம் தலைமையில் எடுக்க இருக்கும் செயல் திட்டங்களை மிக கூர்மையாக கவனித்து விமர்சிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் இருக்கிறார்கள்.