நாடும் நடப்பும்

சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதிக்கும் இந்திய இளைஞர்கள்!


ஆர். முத்துக்குமார்


அண்மை காலத்தில் தடகள விளையாட்டுகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் சாதித்து வருவதை காணும்போது பூரிப்பாகவே இருக்கிறது. இந்திய வீரர்கள் பதக்கங்கள் வென்றதை, நாடே பாராட்டியதையும் கண்டோம்.

ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து, காமன்வெல்த் போட்டிகளில் குத்துச் சண்டை, துப்பாக்கிச் சுடுதல், ஹாக்கி, பேட்மிட்டன் போட்டிகளில் மட்டுமின்றி ஓடுதல், தாண்டுதல், எரிதல், போன்ற தடகளப் போட்டிகளிலும் ஒய்யார குதிரை சவாரியிலும் பலருக்கு பரிச்சயமே இல்லாத ‘லான் பவுல்ஸ்’ (Lawn Bowls) போட்டியிலும் தங்கம் வென்றுள்ளோம்.

ஸ்குவாஷ் போட்டியில் 14 வயதே நிரம்பிய அனாஹத் சிங் முதல் சுற்றில் வென்ற போது, அதைப் பார்த்த இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்தது. 8 வயது முதலே இவரது திறமை, சர்வதேச அளவில் மிக பரபரப்பாக பேசப்பட்டது. 9 ஆம் வகுப்பு மாணவியான அவர் டெல்லியில் படிப்பு மற்றும் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சாம்பியனான இவரை ஸ்குவாஷ் அணியில் சீனியர்களுடன் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டு, ஓரளவு சாதித்தும் இருந்தார்.

வீரர்களின் சாதனை

அடுத்த சுற்றில் உலகின் 19 வது இடத்தில் இருக்கும் சீனியர் ஆட்டக்காரரிடம் தோல்வியடைந்தாலும் ஒவ்வொரு பாயின்டையும் ரசித்து விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. எதிர்த்து விளையாடிய வீரரின் அணியினருமே இச்சிறுமி பாயின்டை வென்றதை உற்சாகப்படுத்திய காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

காமன்வெல்த் போட்டிக்குச் சென்ற அணிக்கு மிகப்பெரிய சோகத்தைத் தந்த ஒரு செய்தி எனில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க முடியாமல் வெளியேறியதுதான்.

பயிற்சியின் போது அவரது தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓய்வு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் தான், அந்த ஒலிம்பிக் சாதனையாளரால் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.

தடகளப் போட்டிகளில் மட்டுமின்றி எல்லாத் தரப்பு போட்டிகளிலும் சர்வதேச அரங்கில் பங்கேற்பவர்கள் ஆண்டு முழுவதும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மன ரீதியாய், உடல் ரீதியாய் அவர்களுக்கு இருக்கும் சுமை சாமானியனுக்கும் புரியாது. சற்று வேகமாகவோ, கூடுதலாகவோ போட்டிருந்தால் பதக்கம் வென்று இருக்கலாமே? என்று மட்டுமே விவாதிப்பார்கள்.

பொதுமக்கள் மனம்

அந்த வீரரின் ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னணியில் ஒர் உயிர்ப் போராட்டமே நடப்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். ஈட்டி எறிதலில் ஒரு பதக்கம் உறுதி என்று நம்பிய தேசத்தை தனக்கு ஆசையின்றி நீரஜ் சோப்ரா ஓய்வை அறிவித்து இருப்பாரா?

வருவது வரட்டும் என்று ஓரளவு வீசி இருந்தால், அவர் மேலும் காயத்தை பெரிதாக்கிக்கொண்டு பெரும் சிக்கலில் அல்லவா சிக்கி இருப்பார்.

இப்படிப்பட்ட விளையாட்டு வீரர்களின் மனதில் உள்ள சுமைகளைக் கண்டறியும் திறன், உடன் இருப்பவர்களுக்கே தெரியும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பெற்றோர் மற்றும் நட்பு வட்டாரத்திற்கோ அணியினருக்கோ, பயிற்சியா ளருக்கோதான் ஒரு விளையாட்டு வீரரின் வலியோ, அசதியோ, ‘சோம்பேறித்தனமான’ செய்கையாகத் தெரியலாம்.

வாரியத்தின் கடமை

இனியும் தாமதிக்காமல் சர்வதேச அணிகளில் மட்டுமின்றி தேசிய அணிகளிலும் பயிற்சியாளருடன் மனநல மருத்துவருடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் பல்வேறு தவறுகளுக்குப் பின்னணியில் அவரது மனநிலையே காரணம் என்பதை உணர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

இனி வரும் காலத்தில் உடல் வலிமை, மன வலிமை இரண்டையும் உறுதி செய்து விளையாட்டு வீரர்களை தயார் செய்யும் அதிமுக்கிய கடமை விளையாட்டு வாரியங்களுக்கு இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published.