180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
நியூயார்க், ஜூன் 22–-
சர்வதேச யோகா தினத்தையொட்டி ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மனிதனின் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தி வெற்றிகரமான வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது, யோகா. இந்த அருங்கொடையை உலகுக்கு வழங்கியது இந்தியா. மிகச்சிறந்த இந்த பயிற்சியை அங்கீகரித்து ஆண்டுதோறும் சர்வதேச அளவில் யோகா தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.
இந்தியாவின் இந்த மிகச்சிறந்த கொடையை ஐ.நா.வும் ஏற்றுக்கொண்டது. அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் 9-வது யோகா தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி உலக அளவில் பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டன. யோகாவை சிறந்த வாழும் கலையாக ஏற்றுக்கொண்ட ஐ.நா.வின் தலைமையகத்தில் இந்தியாவே தலைமையேற்று இந்த யோகா கொண்டாட்டங்களை நடத்தியது.
யோகா பயிற்சிகள்,
ஆசனங்கள்
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியை தலைமையேற்று வழிநடத்தினார். இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற டி-ஷர்ட், டிரவுசர் அணிந்து வந்திருந்த அவர் பல்வேறு யோகா பயிற்சிகள், ஆசனங்கள், பிரணாயாமாக்களை செய்து அசத்தினார்.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஐ.நா. அதிகாரிகள், பல்வேறு உறுப்பு நாடுகளின் தூதர்கள், பிரதிநிதிகள், சர்வதேச பிரபலங்கள், புலம்பெயர் இந்தியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். குறிப்பாக 180-க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இதற்காக நேற்று காலையில் இருந்தே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது. யோகா நிகழ்ச்சிக்காக ஐ.நா. அலுவலக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மஞ்சள் பாய்கள் விரிக்கப்பட்டு இருந்தன. அத்துடன் பிரமாண்டமான எல்.இ.டி. திரைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச பிரபலங்கள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டது இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் இருந்தது.
இந்த யோகா நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்சபையின் 77-வது அமர்வின் தலைவர் சபா கோரோசி, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமினா முகமது உள்பட பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
‘நமஸ்தே’ என்று கூறி
உரையை தொடங்கினார்
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
பிரதமர் மோடி தனது உரையை ‘நமஸ்தே’ என்று கூறி தொடங்கினார்.
ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு (ஐ.நா.) முன்மொழிந்த பெருமை எனக்கு கிடைத்தது. இந்த கருத்தை ஆதரிக்க முழு உலகமும் ஒன்றிணைவதை பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது. இதைப்போல 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக் கொண்டாடுவதற்கான இந்தியாவின் முன்மொழிதலை ஆதரிக்க கடந்த முழு உலகமும் ஒன்றிணைந்தது.
முழு மனித இனத்தின் சந்திப்பாக நாம் இங்கு கூடியுள்ளோம். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிறப்பு மிக்க நிகழ்வுக்கு வந்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. ஏறக்குறைய ஒவ்வொரு தேசிய இனமும் இன்று இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. யோகா என்றால் ஒன்றுபடுவது என்று அர்த்தம், எனவே நீங்கள் ஒன்றாக வந்திருப்பது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு.
யோகா இந்தியாவில் இருந்து வருகிறது. இது மிகவும் பழமையான பாரம்பரியம். காப்புரிமைகள் மற்றும் ராயல்டி போன்ற எதுவும் இல்லாமல் இலவசமாக யோகா வழங்கப்படுகிறது. உலகுக்கு இந்தியா அளித்த பரிசு யோகா. யோகா கையடக்கமானது மற்றும் நெகிழ்வுத்தன்மை நிறைந்தது. தனியாகவும், குழுவாகவும் செய்யலாம். அனைத்து இன, கலாசாரத்தையும் ஒன்றிணைக்கும் யோகா உண்மையிலேயே உலகளாவியது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ஐ.நா. பொதுச் செயலாளர்
முன்னதாக ஐ.நா. தலைமையக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கே குழுமியிருந்த ஏராளமான இந்தியர்கள், ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டனர்.
‘யோகா தினத்தில் ஒவ்வொருவரும் யோகா செய்வதை பார்க்கும்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது’ என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு கூறினார்.
முன்னதாக யோகா தினத்தையொட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வெளியிட்ட செய்தியில், ‘யோகா, உடல், மனம், மனிதநேயம் மற்றும் இயற்கையை ஒன்றிணைக்கிறது. உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வலிமை, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான ஆதாரமாக உள்ளது’ என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர், ‘ஆபத்தான மற்றும் பிளவுபட்ட உலகில், இந்த பண்டைய நடைமுறையின் நன்மைகள் விலைமதிப்பற்றவை. இது அமைதியின் புகலிடத்தை வழங்குகிறது. பதற்றத்தை குறைத்து மன நலனை மேம்படுத்தும். இது ஒழுக்கத்தையும் பொறுமையையும் வளர்க்க உதவுகிறது’ என்றும் கூறியிருந்தார்.