செய்திகள்

சர்வதேச யோகா தினம்: உலகத்தை இணைத்துள்ளது யோகா: பிரதமர் மோடி

Makkal Kural Official

விசாகப்பட்டினம், ஜூன் 21–

யோகா முழு உலகத்தை இணைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா நாள் கடைபிடிக்கப்படும் என்று கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி ஐ.நா. அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு முதல் யோகா நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 11வது சர்வதேச யோகா நாள், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் (191 நாடுகள்) யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் இன்று நடைபெற்ற 11வது சர்வதேச யோகா நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகாசனம் செய்தார்.

இதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய ஆயுள் துறை மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சினிமா, வர்த்தக பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகள், யோக குருக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர்.

காலை சுமார் 6 மணி அளவில் இந்த யோகா பயிற்சிகள் தொடங்கின. மேலும் ஆந்திர மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களிலும் யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றின் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 5.5 லட்சம் பேர் வரை யோகா செய்து உலக சாதனை படைக்கப்பட்டது. இதை கின்னஸ் சாதனை படைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த விழாவில் யோகாசனம் செய்த பின்னர், 11வது யோக நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, யோகா முழு உலகத்தையும் இணைத்துள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் நாளாக சர்வதேச யோகா தினம் இருக்கட்டும். யோகா என்பது வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டுமல்லாமல், உலகளாவிய கூட்டாண்மை மற்றும் ஒற்றுமைக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் ஏற்கப்பட வேண்டும். யோகாவை கூட்டு நல்வாழ்வுக்கான பங்களிப்பாக ஒவ்வொரு தேசமும் ஏற்க வேண்டும்.

உடல் பருமன் என்பது இன்று சர்வதேச அளவில் பெரிய சவாலாக உள்ளது. யோகா மூலம் 10 சதவீத உடல் பருமனைக் குறைக்கலாம் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நான் சொல்லி இருந்தேன். இந்த சவாலை மக்கள் ஏற்க வேண்டுமென இந்நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஜூன் 21ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா நாளாகக் கொண்டாட இந்தியா முன்மொழிந்தபோது, ​​குறுகிய காலத்தில் 175 நாடுகள் அதை ஏற்றுக்கொண்டன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, யோகா இப்போது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. யோகா வாழ்க்கையின் ஒரு கலை. அது நம்மை எல்லோரையும் இணைக்கிறது என்றார்.

நம்முடைய மாற்றுத்திறனாளி நண்பர்களும் பிரெய்லி உதவியுடன் யோக சாஸ்திரங்களை படிக்கின்றனர் என தெரிந்ததும் நான் பெருமையடைந்தேன். விண்வெளியில் விஞ்ஞானிகளும், யோகா ஒலிம்பியாட்டின்போது கிராமங்களில் இளைய நண்பர்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிட்னி ஓபரா ஹவுஸ் அல்லது எவரெஸ்ட் மலை அல்லது கடலின் பரப்பளவு உள்பட யோகா அனைவருக்குமானது. நாம் தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் அல்ல, இயற்கையின் ஒரு பகுதி என்பதை நமக்கு கற்பிக்கிறது. உலகம் முழுவதும் சில பதட்டங்கள், அமைதியின்மை மற்றும் பல பகுதிகளில் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருவதாக கூறிய மோடி, “இந்த யோகாவை மனிதகுலத்திற்கான ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். யோகா அமைத்திக்கான வழியையும், மனதை ஆசுவாப்படுத்தவும், சமாதானப்படுத்தவும் உதவுகிறது. உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் ” என்று உலகிற்கு தனது வேண்டுகோளாக கூறினார்.

மேலும், யோகா முழு உலகத்தையும் இணைத்து ஒற்றுமையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. யோகா நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் அடைவதற்கு ஒரு நாகரீகம். யோகா என்பது எல்லைகள், பின்னணிகள், வயது அல்லது திறன்களுக்கு அப்பாற்பட்ட அனைவருக்கும் ஏற்றது.யோகா என்பது ஒரு சிறந்த தனிப்பட்ட ஒழுக்கம், மக்களை “நான் என்பதிலிருந்து நாம் ” என்று சொல்வதற்கு அழைத்துச் செல்லும் ஒரு அமைப்பு, மேலும் மனிதகுலம் மீண்டும் முழுமையடைய சுவாசிக்க, சமநிலைப்படுத்த தேவையான இடைநிறுத்த பொத்தான் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், மோடி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்தி, அதை உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக மாற்றியுள்ளார்.யோகா நாள் 175-க்கும் மேற்பட்ட நாடுகளில், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில், 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் கொண்டாடப்படுகிறது. “இந்தியாவில் மட்டுமல்ல (உலகம் முழுவதும்) யோகாவைப் பிரபலப்படுத்தியதற்காக நமது தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் சர்வதேச யோகா நாளை தொடங்கி, யோகாவை உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக மாற்றியவர் மோடி என்று நாயுடு கூறினார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் பலரும் ஒன்றாக இணைந்து யோகா செய்தனர். இதில் பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் யோகா பயிற்சி செய்தார். புதுச்சேரியில் கடற்கரை சாலையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் யோகா பயிற்சி நிகழ்வில் பங்கேற்றனர். இதேபோல உலக நாடுகளிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஜப்பான், ஜிம்பாப்வே உள்ளிட்ட உலக நாடுகளில் மக்கள் பலர் கூடி யோகா செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *