நாடும் நடப்பும்

சர்வதேச முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் ‘கிரிப்டோ’ பணம்

ரிஸ்க் அதிகம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை


ஆர். முத்துகுமார்


கிரிப்டோ கரென்சியை வாங்காதே என நேரடியாக உத்தரவிடாமல் அதன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் ரிஸ்குகள் அதிகம் என்று முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் கூறியுள்ளார். இதுபற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸே ‘‘ கிரிப்டோ கரென்சி ரிஸ்குகள் அதிகம் ’’ என்று கூறியுள்ளது பலருக்கு பல்வேறு எண்ணங்களைத் தோற்றுவிக்க ஆரம்பித்துவிட்டது.

இது தங்கத்தைப் போல் உலகெங்கும் மதிப்பு உள்ளதா? அன்னியச் செலவாணி மோசடி ஆசாமிகளுக்கு அதாவது குருவிகளுக்கு உபயோகமான முறையா? சாமனியனால் எப்படி முதலீடு செய்ய முடியும்? என பல்வேறு சந்தேகக் கேள்விகள் எழுந்து வரும் நிலையில் பிரபல தேசிய பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் எல்லோர் கண்ணிலும் தெரியும்படி முழுப்பக்க விளம்பரங்களும் வெளிவந்தது.

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுங்கள் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் அல்லவா? பணத்தை விட அதிகப்படியாக கையாளப்படுவது டிஜிட்டல் பரிவர்த்தனைகளே!

ஏடிஎம்களில் பணம் எடுப்பது 60 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது! ஆனாலும் பரிவர்த்தனை தொடரத்தான் செய்கிறது. அதாவது UPI, டிஜிட்டல் பணப்பை போன்ற முறைகளில் பரிவர்த்தனை கடந்த 20 மாதங்களில் மிக அதிகமாக உபயோகப்படுகிறது.

இவை எல்லாமே ரிசர்வ் வங்கியின் வரையறைகளுக்குள் நடத்தப்படும் பரிவர்த்தனைகளாகும். இதில் புதிதாக வந்திருக்கும் ‘கிரிப்டோ கரன்சி’ என்றால் என்ன?

1983–ல் அமெரிக்க ‘கிரிப்டோ கிராபர்’ அதாவது குறியாக்கவியல் நிபுணர் டேவிட் உருவாக்கியது தான் e cash என்ற எலெக்ட்ரானிக் பணம் ஆகும்.

இது கிட்டத்தட்ட ஒரு டோக்கனை போட்டால் பாட்டை கேட்கலாம்; அல்லது எடையை பார்க்கலாம்; அல்லது மெட்ரோ ரெயில் ஏற, பிளாட்பாரம் சென்றடைய உபயோகிக்கின்றோம் அல்லவா, அவற்றின் புது அவதாரமாக இருந்தது. 1995–ல் Digicash என்று அந்த மின்மய பண பரிவர்த்தனையை அழைத்தார். அதற்காக கணினி சாப்ட்வேர்களை உருவாக்கினார்.

இதிலிருந்த ஒரு வசதி எல்லா பரிவர்த்தனைகளையும் ஒரே கிளிக்கில் அறவே அழித்துவிட முடியும்! ஆக இது திருட்டுதனமாக பண மோசடிகள் செய்யும் கும்பலுக்கு மிக சாதகமானதாக முன்பு இருந்தது.

அன்று இருந்த கிட்டத்தட்ட ‘டோக்கன்’ முறை டிஜிட்டல் பரிமாற்றம் தான் தற்போது மத்திய நிதி அமைச்சகங்களில் அங்கீகாரம் பெற்று நடைபெறுகிறது.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் எல்லாமே நிகர்நிலையில் அதாவது virtual ஆக மட்டும் இருந்தால் அது போதாது என ஒரு சிலர் நினைத்து, ‘பிட்காயின்’ (Bit coin) முறையை சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தனர்.

நமது பண மதிப்பு தங்கத்தையும் பல்வேறு வளங்களையும் கொண்ட மதிப்பாகும். அதையே ரூபாய், டாலர், பவுண்ட் போன்ற பல்வேறு கரன்சிகளினால் உருவான வில்லைகளாக இருந்தால்?

அதாவது பிட்காயின் என்பது முதலீடு செய்பவர் கொடுக்கும் பல்வேறு பணங்களின் மதிப்பைப் பொறுத்துத்தான். அப்படி வாங்கப்படும் பிட்காயின்களில் மதிப்பை வெளியிட கையிருப்பு பணங்களின் மதிப்பையும் சார்ந்தே இருக்கும்.

ஆக ஆரம்பத்தில் 10 ஆயிரம் பிட்காயின்கள் வெளிவந்தால் அதற்கு இணையாக அந்த பிட்காயினை வெளியிட்டவரிடம் நிகராக பணங்கள் இருந்தாக வேண்டும்.

இவை எல்லாம் ஆரம்பத்தில் தனியார் நிறுவனங்களால் நடக்க ஆரம்பித்தது. சில நாடுகள் கியூபா உட்பட பலர் அதை வரவேற்று முழு அங்கீகாரம் தந்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் அமெரிக்கா பொருளாதாரத் தடை அறிவித்து எந்த டாலர் உதவியையும் தரவில்லை என்றாலும் இந்த பிட்காயின் பரிவர்த்தனையை வேறு நாடுகளால் தடுக்க முடியாது.

அப்படி உருவான பிட்காயின் என்ற கிரிப்டோ கரன்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை குறிப்பாக அமெரிக்காவின் சர்வாதிகார போக்கை எதிர்த்தே செயல்படுவது தான் உண்மை.

அமெரிக்க டாலரை வீழ்த்த முடியுமா? அந்த வல்லமை இப்படிப்பட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு உண்டா? பணபரிமாற்றம் செய்ய உதவும் பணம் எப்படி மதிப்பு பெறுகிறது. அதுபோன்ற கிரிப்டோ கரன்சிகளும் மதிப்பு பெற்று விட்டதால் அதன் உபயோகம் அதிகரித்து வருகிறது.

சீனாவின் மத்திய வங்கியும் விரைவில் இப்படிப்பட்ட ‘காயினை’ வெளியிட தான் போகிறது.

இந்த நிலையில்தான் கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்களில் நிறைய ஆபத்துகள் உள்ளன என்று முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி உறுதித்தன்மை பார்வையில் இருந்து பார்க்கும்போது கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்கள் தீவிர ஆபத்துகளைக் கொண்டதாக உள்ளன. வரலாற்று உச்சங்களை எட்டிய டிஜிட்டல் கரன்சிகள் தொடர்ந்து கடும் இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இப்போது பிட்காயின் 67,089 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. ஓராண்டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அரசு இன்னும் இயற்றவில்லை. அதற்கான முயற்சிகளில் துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில் அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.இனி வரும் நாட்களில் எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிடும் போது நிகர் நிலையில் பண்டைய உண்மை விவகாரங்கள் மறைந்து போகுமா? என்றால் உண்மையானவை கொண்டே நிகர்நிலை சமாச்சாரங்கள் புதிய அவதாரத்தில் நம்மிடம் பழக்கத்திற்கு வந்துவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *