செய்திகள் நாடும் நடப்பும்

சர்வதேச முதலீடுகளை கவரும் மாநிலமாக தமிழ்நாட்டை உறுதி செய்யும் ஸ்டாலினை தமிழகம் பாராட்டுகிறது


ஆர்.முத்துக்குமார்


ஐரோப்பிய நாடுகளின் பிரதான பொருளாதார முகவரிகளாக விளங்கும் ஸ்பெயின் மற்றும் தாவோஸ் – சுவிஸ் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

தமிழகம் வளர்ந்த மாநிலமாக உயர்ந்து வருவது நமக்கெல்லாம் பெருமையானது. சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாகவே வளர்ந்து வரும் பொருளாதாரம் தென் ஆசியப் பகுதியில் சிறப்பான அந்தஸ்தை பெற்று வருகிறது. குறிப்பாக ஐ.டி. துறையில் கண்டு வரும் வியப்புமிக்க வளர்ச்சி சர்வதேச அளவில் பாராட்டை பெற்று வருவதும் அறிந்ததே.

தமிழகம் பெருவாரியாக விவசாயத்தை சார்ந்த நிலப்பரப்பாகும். சமீபமாக ஐடி மற்றும் அதன் சேவை பிரிவுகளில் இளைஞர்களின் பார்வை இருந்து வந்ததால் ஐடி சார்ந்த துறைகளில் மட்டும் வளர்ச்சி என்று ஓரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

ஆனால் தமிழகம் பொறியியல் துறையிலும் சாதித்து வருவதை மறந்து விடக்கூடாது. அத்துறைகளில் சமீபமாக அதிகரித்து வரும் முதலீடுகளே அதற்கு நல்ல உதாரணமாகும்.

கடந்த வாரம் சென்னையில் 2 நாள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தை 2030–-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில் உலக முதலீட்டாளர் மாநாடு, ஜன.7 மற்றும் 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது.

2 நாள் மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றன‌. அதேபோல 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.

மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தபட்டது.

நான், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ரூ.17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்றோம். ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்திருக்கிறேன். இதன் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுஉள்ளது.

மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.

மொத்த முதலீடுகளில் உற்பத்தித் துறையில் அதாவது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி முதலீடுகள், எரிசக்தித் துறை சார்பாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி முதலீடுகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக ரூ.62 ஆயிரத்து 939 கோடி முதலீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக ரூ.22 ஆயிரத்து 130 கோடி முதலீடுகள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக ரூ.63 ஆயிரத்து 573 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதே வேகம் வரும் ஆண்டுகளில் தொடர முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளின் பிரதான பொருளாதார முகவரிகளாக விளங்கும் தாவோஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.

பிறகு இவ்வருட இறுதிக்குள் ஆஸ்திரேலியாவிற்கும் பயணிக்க ஆயுத்தமாகி விட்டார். ஆக அடுத்த சில ஆண்டுகளில் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயருவதுடன், மிக பரபரப்பாக இயங்கும் தொழில் மையமாகவே தமிழகம் உயர்ந்துவிடும்.

சர்வதேச முதலீடுகளை கவரும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி அதற்கான அடித்தளத்தை உறுதி செய்து வரும் ஸ்டாலினை தமிழகம் பாராட்டுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *