நாடும் நடப்பும்

சர்வதேச நடப்புகளில் அமெரிக்காவின் சர்வாதிகார நடவடிக்கைகள்

ரஷ்யா, சீனா எதிர்ப்பு அரசியலில் உச்சகட்ட காட்சிகள்


ஆர். முத்துக்குமார்


அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அதிபர் பிடன், உக்ரைனில் ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார். மேலும் தலைமுறைக்கும் ரஷ்யா இதற்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அமெரிக்க வான் பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடையையும் உறுதி செய்துள்ளார். இது ரஷ்யா மீதான மிகப் பெரிய பொருளாதார தடையாகும். மேலும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ரஷ்யாவுடனான எல்லா கூட்டு ஒப்பந்தங்களையும் முறித்துக் கொண்டதாக அறிவித்துவிட்டது.

அதன் காரணமாக ரஷ்ய விமான நிறுவனங்களுடனான தொழில்நுட்ப உதவிகள், பராமரிப்பு, விமான உதிரி பாகங்களை இனி போயிங் நிறுவனத்திடமிருந்து பெறவும் முடியாது. முன்பே கனடாவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து இருந்ததை அறிவோம்.

இதுபோன்ற கடினமான பொருளாதார தடையை ரஷ்யா எதிர்பார்த்து இருக்குமா? உண்மை என்னவென்றால் ரஷ்யா மீது அதுபோன்ற நடவடிக்கைகளை பல ஆண்டுகளாகவே அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் அறிவித்து நடைமுறையில் இருக்கிறது!

ரஷ்யா, சீன எதிர்ப்பு ஏன்?

ரஷ்யாவும், சீனாவும் எங்கள் எதிரிகள் என்று கூறுவது அமெரிக்க உள்ளூர் அரசியல் நிர்ப்பந்தம் ஆகும். அதாவது கம்யூனிசமும், முதலாளித்துவமும் என்ற பிரிவினைவாதத்தை வளர்த்து வருவதுடன், ஆட்சியைப் பிடித்தவர் பல்வேறு சர்வதேச குழப்பங்களை ஏற்படுத்தி, அது காட்டுத்தீயாய் பரவும்போது, அதில் எண்ணையை ஊற்றி மேலும் எரிய விட்டு அதில் குளிர் காய்வது வாடிக்கை!

அமெரிக்காவின் ரஷ்யா, சீனா எதிர்ப்பு பின்னணியில் ஐ.நா. சபையில் உள்ள 5 முக்கிய நாடுகளில் இதர இரண்டும் அதாவது பிரான்சும், இங்கிலாந்தும் தங்களது தலையாட்டி பொம்மைகளாக இருப்பதால் உலக நடப்புகளில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முடிகிறது.

ஆனால் பல முக்கிய முடிவுகளில் மெஜாரிட்டி அடிப்படையில் முடிவுகள் ஐ.நா.வில் எடுக்கப்படுவதில்லை. அதாவது யாராவது ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்து விட்டால் அந்த முயற்சி நடைமுறைக்கு வரவே முடியாது.

ஆக 5 நாடுகளும் எதையும் சரி என்று கூறி விடாது! அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து சீனா முற்றிலும் தப்பித்துக்கொள்ள, அதன் அபரீமிதமான பொருளாதார வளர்ச்சியே காரணமாக உள்ளது.

தொழில் புரட்சியில் அமெரிக்க நிறுவனங்கள் முன்னணியில் இருக்க, சீன தயாரிப்புகள் முக்கிய காரணமாகும். ஆகவே அமெரிக்கா, சீனா மீது பல அவதூறுகளை தூற்றி வருகிறது.

அவை பல நேரங்களில் உண்மையானதா? பொய்ப் பிரச்சாரமா? என்ற சந்தேகம் இருப்பதையும் அறிவோம். அதே வேகத்தில் ரஷ்யா மீது போர் தொடுத்து வருவதைப் புரிந்து கொண்டாக வேண்டும்.

அமெரிக்கா செய்தது சரியா?

வியட்நாமிலும், காங்கோவிலும் குண்டு வீசி அப்பாவி பொதுமக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த போது, அந்நாடுகள் கம்யூனிஸ சக்திகள் என்று குற்றம் கூறி ரஷ்யாவுடன் சதிக் கூட்டும் வைத்திருப்பதாக குறை கூறி வந்தனர்.

அன்று வியட்நாமில் செய்த வெறி தாக்குதலுக்கு ஆசிய பகுதியில் எந்த பெரிய தண்டனையையும் அமெரிக்கா மீது யாரும் திணிக்கவேயில்லை!

சதாம் உசேன் மீதும், கடாபி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு வளைகுடா பகுதியில் கடுமையான யுத்தத்தை நடத்தி அங்கு பல லட்சம் பேரை கொன்று குவித்தனர். ஆனால், எண்ணை வளைகுடா நாடுகள் எந்தவிதத்திலும் இதுவரை அமெரிக்காவை தண்டிக்கவேயில்லை.

ஈரானை வெறுத்தது. அமெரிக்கா, அந்நாட்டுப் போர்படை தளபதி ஜெனரல் கோமேனியையும் பட்டபகலில் தீர்த்துக் கட்டினர். அதை நாங்கள் தான் செய்தோம் என்று கொக்கரித்தனர். அது வேறு நாட்டு எல்லையில் நடத்தப்பட்ட ரத்தவெறி தாக்குதல், அதற்கு இதுவரை அமெரிக்கா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவேயில்லை!

அண்மையில் ஆப்கான் விவரத்தை சுட்டிக்காட்டி ஐ.நா. சபையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றுக்கு சீனா தான் காரணம் என்று குற்றம் சாட்டி அவர்கள் மீதும் பொருளாதார தடைகளை அறிவித்ததை மறக்கவா முடியும்?

சிறுமைப்படுத்தும் அமெரிக்கா

ஆனால் இதுவரை உப்புக்கல் அளவிற்கு கூட எந்த ஆதாரத்தையும் தந்து அவர்கள் புகாரை உறுதி செய்யாததை ஏன் சர்வதேச நாடுகள் கண்டித்து, அமெரிக்கா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை?

பயில்வானாக இருந்தால் அவன் சொன்னது தான் சரி! அந்த பயில்வான் பலசாலியாக உலகம் பார்க்க மற்ற பலசாலிகள் உருவாகாமல் இருக்கும்படி, கிள்ளி எறிந்து விடுவது போல், அமெரிக்கா ரஷ்யாவையும், சீனாவையும் சிறுமைப்படுத்தி வருவதை கண்டிக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் பிரேசில், சீனா, இந்தியா ரஷ்யா மீது களங்கம் சுமத்த கூடாது என்று கூறிவிட்டது. அமெரிக்கா கல்லை எறிவது வாடிக்கை, ஆனால் ரஷ்யாவோ உண்மையில் தங்களது நடவடிக்கை மீது நம்பிக்கையுடன் ‘நாம் செய்வது சரியே’ என்று உறுதியாக உக்ரைனில் களமிறங்கியுள்ளது.

பொருளாதார தடைகள் வரும் என்று தெரிந்து, ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகளின் பின்னணியில் அமெரிக்காவின் வீழ்ச்சி துவங்கும் என்று ஆருடம் கூறிவிட முடியாது என்றாலும், எறிந்த கல், கண்ணாடியை உடைத்தால், அது அவருக்கும் சேதம் ஏற்படுத்தும் அல்லவா? ஒருவேலை சேற்றில் எரிந்தாலும் சகதி எரிந்தவர் மீதும் சிதறி கறை ஏற்படுத்தி களங்கம் விளைவிக்கும் அல்லவா?


Leave a Reply

Your email address will not be published.