செய்திகள்

சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஆக. 8–-

சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் நடந்து வரும் மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கான (பிடே) புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தற்போதைய ‘பிடே’ தலைவர் அர்கடி துவார்கோவிச்சை (ரஷியா) எதிர்த்து உக்ரைன் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆன்ட்ரில் பேரிஷ்போலட்ஸ் போட்டியிட்டார். இதே பதவிக்கு குறி வைத்த பிரான்சின் பாச்சர் கோட்லி கடைசி நேரத்தில் விலகினார்.

நிர்வாகிகள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக துவார்கோவிச், 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 157 ஓட்டுகளும், பேரிஷ்போலட்சுக்கு 16 ஓட்டுகளும் கிடைத்தன.

‘பிடே’யின் புதிய துணைத்தலைவராக இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். சமீப காலமாக போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து ஆலோசகர் மற்றும் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தும் ஆனந்த், செஸ் கூட்டமைப்பில் இணைந்து இந்த விளையாட்டின் மேம்பாட்டுக்கு பணியாற்ற விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் துவார்கோவிச்சின் நிர்வாகத்தில் அவர் முதல்முறையாக கைகோர்த்துள்ளார். சென்னையில வசிக்கும் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘துவோர்கோவிச்சின் தொலைநோக்கு பார்வைக்கு வாழ்த்துகள். நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நம்புகிறோம். எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

‘பிடே’ துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல் மீண்டும் தலைவராக தேர்வாகியுள்ள துவார்கோவிச்சுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் ஆகும். கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்க்கடி துவார்கோவிச்க்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுமுகமாக நடத்துவதில் அவரது பங்கு இன்றியமையாதது. தலைவராக அவரது முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததைப்போல இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என நம்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.