நாடும் நடப்பும்

சர்வதேச அரசியல், பொருளாதார சரிவுகளுக்கு தீர்வு பெற பாலியில் உலக தலைவர்கள்


ஆர். முத்துக்குமார்


உலக தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், நமது பிரதமர் மோடி, இத்தாலிய புது பிரதமர் மெல்லோனி, இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனாக் உட்பட பலரும் இந்தோனேசியா தலைநகர் பாலியில் நடைபெற இருக்கும் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் சங்கமிக்க ஆரம்பித்து விட்டனர்.

சீனா மெல்ல ‘ஜீரோ கோவிட்’ திட்டத்தில் தளர்வுகள் அறிவித்து வருகிறது. மேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமுல்படுத்த இருக்கும் திட்ட வரைவுகள் என்ன? என்பதையும் உலக தலைவர்களுக்கு சுட்டிக்காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனத் தலைவரை தேர்வு செய்வது அந்நாட்டு கம்யூனிசத் தலைவர்கள் ஆவர். தேர்வு செய்யும் முன் தங்களது திட்ட வரையறைகளை மிகத் தெளிவாக கூறி அதை அமுல்படுத்த தயாராக இருப்பவரை மட்டுமே அதிபராக அறிவிப்பார்கள்.

அவர்களது திட்டங்கள் மர்மமாகவே தான் இருக்கும். ஆனால் பொருளாதார நிலைப்பாடுகள் ஓரளவு தெரிய வரும்.

இந்தியாவுடனும் ரஷ்யாவுடனும் உறவுகள் எப்படி இருக்கும்? தெற்காசிய நாடுகளிடம் கெடுபிடியா? நேசக்கரம் நீட்டுமா? என்பன பற்றி ஓரளவு தெரிய வரும்.

அமெரிக்கத் தலைவர்களுக்கு சீனாவின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்படும்; குறிப்பாக தைவான் மீது போர் தொடுக்குமா? என்பன பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வமாகவே இருப்பார்கள்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சீனாவை உதாசீனம் செய்து தள்ளி வைப்பது இனி எடுபடாது! சீனாவின் உற்பத்தி திறன், சுற்றுலா சிறப்புகள் எல்லாமே அவர்களுக்கு பிடித்தவை.

கடந்த வார இறுதியில் சீன அதிபர் சர்வதேச விமான சர்வீஸ்கள் தொடர தளர்வுகள் அறிவித்து இருப்பதால் உலகப் பொருளாதாரம் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று பரவல் ஓரளவு தணிந்து விட்டாலும் மழை நின்றும் தூவானம் தொடர்வது போல் பல சிறுசிறு சிக்கல்கள் இருப்பதைக் காண முடிகிறது.

உக்ரைனில் போர் பதட்டம் தொடர முக்கிய காரணம் ஐரோப்பிய அணு ஆயுத நாடுகள் தங்களது வடிவமைப்புகளை சோதிக்க தயாராகுகிறதா? என்ற அச்சம் இருப்பதை அறிவோம்.

அந்நாட்டு தலைவர்கள் பாலி உச்சி மாநாட்டில் ஏதேனும் போர் பதட்டத் தணிப்பு அறிவிப்புகள் செய்வார்களா? என உலக நாடுகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ரஷ்ய அதிபர் புதின் வரமாட்டார் என்ற அறிவிப்பு ஏன்? என்று புரிகிறது. அவர் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான செர்ஜி லாவ்ரோவ்வை அனுப்பி உள்ளார்.

2014–ல் கிரிமியா விவாகரத்திற்கு ரஷ்யாவை ஜி20 புறக்கணித்தது. இம்முறை புதின் புறக்கணிக்கிறாரோ?

இப்படி பல உள்கட்ட அரசியல் குழப்பங்களும் சச்சரவுகளும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கையில் இதே ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா அடுத்த மாதம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்தியா தரப்பில் பங்கேற்கச் சென்றுள்ள அதிகாரிகள் பரபரப்பான உலக அரசியல் ‘சதுரங்க’ ஆட்டத்துக்கு இடையே தெளிவான முடிவுகள் எடுக்க எப்படி அணுக வேண்டும் என்ற அனுபவப் பாடத்தை பெற்றுத் தெளிவுடன் திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

வடகொரியா, தைவான் பிரச்சினைகளுக்கு இடையே உக்ரைன் சேரும் நாட்டோ அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தை அமெரிக்காவும் ஐரோப்பிய தலைவர்களும் எந்த புது முடிவையும் எடுக்க வழியில்லை என்று தான் தெரிகிறது.

பொருளாதார மீட்சிக்கு குரல் கொடுக்க இந்தியா தயாராக இருக்கவேண்டும். அது மட்டுமின்றி அமெரிக்கா ஆசிய பகுதியில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டால் அதில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்தால் புதுப்புது சிக்கல்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்!


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *