ஆர். முத்துக்குமார்
பிரதமர் மோடி 3 வது முறையாக பதவி ஏற்று தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கடமையாற்றத் துவங்கி விட்டார்.
விவசாயத்திற்கு முன்னுரிமை, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, நாடெங்கும் அமைதியை நிலைநாட்டுவது பிரதமர் மோடி முன் நிற்கும் முக்கிய அம்சங்கள் ஆகும்.
தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியதவித் திட்டங்களுக்கு வழி வகுத்தார்.
இனி வேலைவாய்ப்புகளுக்கு தரப்போகும் முக்கியத்துவம் அரசு தரப்பு அலுவல்களிலும் கல்வி வளாகங்களிலும் மிகக் கூர்ந்து கவனிக்கப்பட்டு எதிர்பார்க்கப்படுவது புரிகிறது.
நல்ல உதாரணம் ரெயில்வே துறையில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் தொலைத்தொடர்பு சேவையான பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. மறைமுகமாக பிற தனியார் நிறுவன சேவைகளுக்கு வழி விடுகிறது.
இது பிஎஸ்என்எல் மூடு விழாவின் துவக்கமா? மிகப்பெரிய மத்திய அரசின் செயல்பாடான ரெயில்வே துறையின் தனியார் மயத் துவக்கமா?
இது பற்றிய முடிவுகள் வரும் பட்ஜெட் அறிவிப்புகளில் எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான ஜம்மு, சீன எல்லை அருகாமை மாநிலங்களான லாடக் , அருணாச்சலப்பிரதேசப் பகுதிகளில் இந்தியர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய பிரதமர் மோடி முக்கியத்துவம் தர வேண்டிய காலக்கட்டம் இது.
அமெரிக்காவின் கெடுபிடி அரசியல் காரணங்களால் இதர வல்லரசுகளான சீனாவும் ரஷ்யாவும் குடுமிபிடி சண்டையில் இருப்பதால் ஐரோப்பிய பகுதியிலும் வளைகுடா பகுதியிலும் உள்ள போர் பதட்டம் அறிந்ததே.
அதே பதட்டம் ஆசியாவிலும் வருமா? தைவான் மீது அமெரிக்காவின் அக்கறை ஏன்? சீனாவை சீண்டிப் பார்க்கிறதா? எனப் பற்பல கேள்விகள் எழ இந்தியாவும் தனது எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் நடக்காமல் பார்த்துக் கொள்ளத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக அருணாச்சலம், மணிப்பூர் பகுதிகளில் சீனாவின் ராணுவ வருகையைத் தடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அருணாச்சல பிரதேசத்தில் பல இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டி வரும் நிலையில் அந்நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திபெத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி வரும் சீனா அங்குள்ள பல இடங்களுக்கு தன்னிச்சையாக புதிய பெயரைச் சூட்டி வருகிறது.
சீனா முதன்முதலில் கடந்த 2017-ல் அருணாச்சல பிரதேசத்தின் 6 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது. இதையடுத்து 2021-ல் 15 இடங்களுக்கும் 2023-ல் 11 இடங்களுக்கும் புதிய பெயர்களை அறிவித்தது.சீனா கடைசியாக கடந்த மார்ச் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு நெடுகிலும் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஓர் ஏரி, ஒரு கணவாய் மற்றும் ஒரு நிலப் பகுதிக்கு புதிய பெயர்களை சூட்டியது.
சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அங்குள்ள இடங்களுக்கு மறுபெயர் சூட்டுவதால் யதார்த்த நிலை எந்த விதத்திலும் மாறி விடாது என்றும் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
விரிவான வரலாற்று ஆராய்ச்சி மற்றும் சீனப் பெயர்களை எதிர்க்கும் உள்ளூர் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் புதிய பெயர்கள் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
ராஜ்நாத் சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி தக்க வைத்துள்ள நிலையில் விரைவில் இந்தப் பெயர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 வது முறையாக ஒரே ஆட்சி தொடர்வதால் இப்படிப்பட்ட முயற்சிகள் உடனடியாக செயலுக்கு வந்து விடும். இப்படி அதிரடியாய் எடுக்கப்படும் முடிவுகள் சீனாவின் தடுப்பு முயற்சிகள் எடுபடாமல் போகும் என்று எதிர்பார்க்கலாம்.