செய்திகள் நாடும் நடப்பும்

சர்வதேச அரங்கில் 2024ல் நம்பிக்கை நட்சத்திரம் பாரதம்


ஆர். முத்துக்குமார்


விடைபெற்று சென்றுள்ள 2023ல் இரு பெரிய யுத்தங்கள் உலக வர்த்தகத்தை சீர்குலைத்தது. அவை அடுத்த சில மாதங்களில் இச்சிக்கல்கள் தீரும் அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. 2022 பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய உக்ரைன் தாக்குதல்கள் 3 ம் ஆண்டை நெருங்கி விட்டது.

முன்னாள் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து இந்த பொருளாதர சிக்கலை சந்தித்து வருவதால் 2024ல் அவர்களுக்கு பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து கூறி வருகிறார்கள்.

கடுமையான பொருளாதார தடைகளை சந்தித்து வரும் ரஷ்யா இதுவரை சமாளித்து விட்டது. சீனாவும் இந்தியாவும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால் இச்சிக்கல்களுக்கு அவர்களுக்கு தீர்வு கிடைத்திருக்கலாம்.

மொத்தத்தில் கொரோனா பெரும் தொற்று காலக்கட்டத்திற்கு பிறகு ஏற்றம் கண்டு வரும் பொருளாதாரம் இந்தியா என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

2023ல் ஜி20 உலக பணக்கார நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையில் இருந்த நாம் சர்வதேச விவாதங்கள் பலவற்றை சிறிய வளரும் நாடுகளும் பயன்பெற வசதியாக நடத்தினோம். குறிப்பாக அனைத்து நாடுகளும் பயன் பெறக்கூடிய மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்து ஏற்படுத்தி உறுதி ஏற்படுத்தினோம்.

ஆனால் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டு வரும் யுத்த காட்சிகள் அடுத்த சில மாதங்களுக்கு அப்படி ஒரு சரக்குப் போக்குவரத்துக்கான பேச்சு வார்த்தைகள் நடத்த முடியாது, ஆனால் விரைவில் அப்படி ஒரு வழித்தடம் ஏற்பட்டு சரக்குகள் சென்று வர வழி பிறந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு இத்தருணத்தில் மிக வசதியான திட்டமாக உயரும்.

டெல்லியில் கடந்த செப்டம்பர் 9-, 10 ந் தேதிகளில் நடைபெற்ற 18-வது ஜி20 உச்சி மாநாட்டில் ஐஎம்இசி திட்டம் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியா -– மத்திய – கிழக்கு – ஐரோப்பா இடையே போக்குவரத்து வழித்தடத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க முடியும். அதன் மூலம், சரக்கு போக்குவரத்தின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்பதுடன் போக்குவரத்து செலவுகளை குறைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல் ஆகிய எண்ணற்ற நன்மைகளை இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் பெற முடியும்.

ஐஎம்இசி என்பது கப்பல், ரெயில்வே மற்றும் சாலை வழிகள் என பல நெட்வொர்க்குகளை உள்ளடக்கிய மல்டி மாடல் பொருளாதர வழித்தட திட்டமாகும். மின்சார கேபிள், அதிவேக டேட்டா கேபிள் மற்றும் ஹைட்ரஜன் பைப்லைன் கட்டமைப்புகளை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த திட்டத்தில் கடல்வழியான போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு, முந்த்ரா (குஜராத்), கண்ட்லா (குஜராத்) துறைமுகங்களுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா, ஜெபல் அலி மற்றும் அபுதாபி உள்ளிட்ட மேற்கு ஆசிய துறைமுகங்களையும் சவுதி அரேபியாவின் தம்மாம், ராஸ் துறைமுகங்களையும் இணைக்க முடியும். இஸ்ரேலில் உள்ள ஹஃபா துறைமுகத்திற்கு இணைப்பை வழங்கும் வகையில் சிறப்பு ரெயில் சேவைப் பிரிவும் ஏற்படுத்தப்படும்.

சிங்கப்பூர், யுஏஇ, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய துறைமுகங்களின் செயல்பாடு சிறப்பான முன்னேற்றத்துடன் காணப்படுகிறது. அதன் காரணமாக, சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் 2014-ல் 44-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 22-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தெற்காசியா, மேற்கு ஆசியா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நம்பகமான திட்டமாக ஐஎம்இசி இருக்கும். இதனை உணர்ந்து, அதற்கு தேவையான நிதி ஆதாரம் மற்றும் கொள்கைகளை உருவாக்க இந்தியா தயாராக உள்ளது. இந்த பெருமை மிகு திட்டத்தை இந்தியா உருவாக்கி செயல்பட உரிய முயற்சியை எடுத்தவர் நமது பிரதமர் மோடி ஆவார்.

அப்படி ஒரு வசதி வாய்ப்புகள் கொண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இத்திட்டம் குறைந்த செலவில் அதிவிரைவில் சரக்குகளை அனுப்பி விட முடியும்.

இத்திட்டத்தின் முழு வடிவத்தையும் ஜி 20 நாடுகளின் தலைவர்களின் ஒப்புதல்களையும் வாங்கித் தந்த பெருமை பிரதமர் மோடிக்கு சொந்தமாகும்.

2024 ல் 74 நாடுகளில் தேர்தல் நடைபெற்று நல்ல ஆட்சியாளரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, ரஷ்யா மற்றும் நவம்பரில் அமெரிக்காவும் சந்திக்க இருக்கிறது.

பிரதமர் மோடியும் ரஷ்ய ஜனாதிபதி புதினும் மக்களின் முழு நம்பிக்கையை பெற்றிருப்பதை அறிவோம்.

ஆனால் அமெரிக்காவும் தற்போதைய ஜனாதிபதி பைடன் மீண்டும் போட்டியிட அவரது கட்சியினர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

மொத்தத்தில் சர்வதேச நிகழ்வுகளில் இந்தியாவின் பங்காற்றல் அதிகரித்து வருவதுடன் நிலையான ஆட்சியும் உறுதியாக இருப்பதால் பல நாடுகளின் ஆதரவும் வந்து கொண்டிருப்பதால் ஐநா சபையில் உயரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *