சென்னை, ஜூலை 17–
நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார்–2 படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்தார் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் 2ம் பாகம் உருவாகி வருகிறது. அதன்படி, ‘சர்தார்–2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 15ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இதில் கதாநாயகனாக நடிகர் கார்த்தி, இயக்குநராக பிஎஸ் மித்ரன் மேற்கொள்கிறார். ‘சர்தார்–2’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் நேற்று படப்பிடிப்பு நடந்து வந்தது. சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை என்ற சண்டை பயிற்சியாளர் தவறி விழுந்தார். அப்போது, அவர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியவில்லை எனக்கூறப்படுகிறது.
உடனடியாக அவர் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஏழுமலை உயிரிழந்துள்ளார். மேலே இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரல் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.