செய்திகள்

சர்க்கரை நோயாளிக்கு பார்வைக் குறைபாடு: 3 ஆண்டுகளில் 15 கோடியாக இரட்டிப்பாகும் அபாயம்

சென்னை, நவ.14–

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளிடையே பார்வைக் குறைபாடுகள் அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவைப் பொருத்தவரை 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7.2 கோடி பேருக்கு அத்தகைய பாதிப்பு இருந்தது. வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என அஞ்சப்படுகிறது.

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, மருத்துவப் பரிசோதனைகளை அவ்வப்போது மேற்கொள்வதன் மூலம் அத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நோயால் ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து, சென்னை சங்கர நேத்ராலயாவின் மருத்துவ சமூகவியலாளர் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது:–

‘உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது சர்வதேச அளவில் 34.6 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உடலில் ”கணையமானது தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாதபோதோ அல்லது உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாதபோதோ சர்க்கரை நோய் குறைபாடு ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயின்போது இருதயம், கண்கள், சிறுநீரகங்கள், பாதங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதிலும், குறிப்பாக பெரிதும் பாதிக்கப்படும் உறுப்பாக கண்கள் உள்ளன.

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலானோருக்கு இந்நோய் விழித்திரை பாதிப்பு (டயாபடிக் ரெட்டினோபதி) ஏற்படுகிறது. இதைத் தவிர, கண்புரை (கேட்டராக்ட்), கண் நீர் அழுத்த நோய் (க்ளகோமா) உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இவை அனைத்துமே விழித்திரையின் ரத்தநாளங்களை சிதைக்கக் கூடும்.

சர்க்கரை நோயாளிகளில் 10 பேரில் 2 பேர் டயாபடிக் ரெட்டினோபதியால் பாதிக்கப்படுகின்றனர். அலட்சியப்படுத்தினால், அது பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.

முறையான கண் பரிசோதனைகள், சிகிச்சைகளையும், குறிப்பாக லேசர் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் பார்வையிழப்பைத் தடுக்கலாம். இந்நோய் பாதிப்புள்ளவர்கள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *