செய்திகள்

‘சர்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 சதவீதம் பாத புண்களே காரணம்’

Makkal Kural Official

இங்கிலாந்து நிபுணர் பிரான்சிஸ் கேம் தகவல்

சென்னை, மார்ச் 26–

‘சர்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளது என்று பிரிட்டன் மருத்துவ பேராசிரியர் டாக்டர் பிரான்சிஸ் கேம் தெரிவித்தார்.

பேராசிரியர் எம்.விஸ்வநாதன் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் 39-–வது தங்கப்பதக்க மருத்துவ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது, பிரிட்டன் டெர்பி மற்றும் பர்டன் யுனிவர்சிட்டி மருத்துவமனையின் ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குனர் பிரான்சிஸ் கேமுக்கு நிகழாண்டில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி, எம்.வி.சர்க்கரை நோய் மையத்தின் தலைவர் விஜய் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, டாக்டர் பிரான்சிஸ் கேம் பேசியதாவது:–

சர்க்கரை நோயால் ஏற்படும் பாத புண்கள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அத்தகைய பாதிப்புக்கு உள்ளாவோரின் அளவு கடந்த காலங்களில் 3 சதவீதமாக இருந்தது. தற்போது அது 5.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுக்குள்ளான கால்களை அகற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதற்கு பாத புண்கள்தான் 80 சதவீதம் காரணமாக அமைகின்றன.

5 முக்கிய அம்சங்களைக் கடைப்பிடித்தால் அந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். அதாவது, இடர் வாய்ப்பு உள்ள பாதங்களை முதலில் கண்டறிய வேண்டும். அத்தகைய நபர்களுக்கு தொடர் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு வழங்குதல் அவசியம். சர்க்கரை பாத புண் தொடர்பான புரிதலை நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், மருத்துவத் துறையினருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடிய காலணிகளை அணிய வேண்டும். புண்களுக்கு தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெறுவது முக்கியம். இந்த வழிமுறைகளை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் பாதங்களைக் காக்கலாம்.

கட்டுப்பாட்டில் நோய்…

அதேபோன்று, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் காலுறைகளோ அல்லது காலணிகளோ அணியாமல் நடக்கக் கூடாது. பாதங்களை கண்காணிக்க வேண்டும்: வறட்சியான பாதங்களைக் கொண்ட சர்க்கரை நோயாளிகள் ஈரப்பசையை தரும் கிரீம்களை பயன்படுத்தினால் வெடிப்புகள், காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கால்களை நன்கு கழுவி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தினந்தோறும் பாதங்களைக் கண்காணித்தல் மிக முக்கியம். அப்போதுதான் அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை உடனடியாக கண்டறிய முடியும்.

பாத புண்களுக்கான அறிகுறி தென்பட்டால் அலட்சியப்படுத்தாது தேர்ந்த மருத்துவ நிபுணர்களை அணுக வேண்டும். கட்டுப்பாட்டில் சர்க்கரை நோயை வைத்திருப்பதும், முறையாக சிகிச்சைகளை கடைப்பிடிப்பதும் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *