போஸ்டர் செய்தி

‘சர்கார்’ பட தயாரிப்பாளர், நடிகர் விஜய், தியேட்டர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை

சென்னை , நவ.8-

அரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமான காட்சிகள் இருப்பதால், ‘சர்கார்’ திரைப்பட குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞருடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் மீறி தீபாவளியன்று வெளியானது. முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்வது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனிமனித ஓட்டுரிமையின் அவசியத்தையும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன. தமிழக அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக கூறி அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் எச்சரிக்கை

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறும்போது, சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்குப் பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனை தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சர்கார் பட விவகாரம் பற்றி முக்கிய ஆலோசனை நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தல் பணிக்கான பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று திருப்போரூர் எஸ்.எம். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். பிறகு, நிருபர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:–-

திருட்டு கதை

விஜய் நடித்து வெளிவந்த சர்கார் திரைப்படத்தில் 3 மணி நேரத்தில் முதல்வர் ஆவது போன்று காட்சி அமைத்துள்ளார்கள். யாருடைய கதையையோ திருடி படத்தை தயாரித்தவர்கள் அரசை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது. அரசை விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே வன்முறையை தூண்டும் செயலாக இது அமைந்துள்ளது. யாருடைய தூண்டுதலின் பேரிலோ இதுபோன்ற காட்சிகளை அமைத்துள்ளனர். சட்டத்துறை அமைச்சர் என்பதால் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மீதும், அதில் நடித்துள்ள நடிகர் விஜய் மீதும், திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடம்பூர் ராஜூ

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அது குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. அந்தக் காட்சிகளை படக்குழுவினர் அவர்களாகவே நீக்கி விடுவது நல்லது. அப்படி சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து நடவடிக்கை எடுப்போம். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வரிடம் விவாதிப்போம் என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்

இதுகுறித்து சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:–

ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது.கோழைகள் போல இப்போது செயல்படுகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா? சட்ட அமைச்சர் சண்முகம் சொன்னது போல, சர்க்கார் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர்., படங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தியது இல்லை. நடிகர் விஜய் தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆராக முடியாது. உங்களை முன்னிலைபடுத்தி கொள்ளுங்கள். அதற்காக யாரையும் புண்படுத்த கூடாது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அமைச்சர் உதயகுமார்

திருமங்கலம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–-

வியாபார நோக்கத்திற்காக இன்று ஜெயலலிதாவின் திட்டங்களையும் உழைப்பையும் கொச்சைப்படுத்தும் விதமாக சர்கார் படத்தில் சில காட்சிகள் வந்துள்ளது. இது ஒட்டுமொத்த உலக தமிழினத்தின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பது நமக்கெல்லாம் வேதனையாக உள்ளது. வியாபார நோக்கத்திற்காகவும் லாப நோக்கத்திற்காகவும் போட்ட முதலீட்டை எடுப்பதற்காக, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தக்க பதிலடி

வியாபார, அரசியல் நோக்கத்தோடு அந்த காட்சியை வடிவமைத்தார்கள் என்று சொன்னால் அதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது. இதனை உடனடியாக அவர்களே நீக்க வேண்டும். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் அதனை முதலில் கண்டிப்போம், எச்சரிப்போம். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பேரவை தொண்டர்கள் உயிரை கொடுத்தாவது ஜெயலலிதா புகழை காப்போம்.

ஜெயலலிதாவின் திட்டங்களைப் பற்றி விவாதிக்க தயாராக உள்ளோம். ஐக்கிய நாடு சபையில் பாராட்டுப்பெற்ற திட்டங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவது என்பது ஜெயலலிதா புகழை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே கொச்சைப்படுத்துவதாகும். இதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது. அந்தக் காட்சி நீக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஜெயலலிதா பேரவை சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

இதேபோல் அமைச்சர் கே.பி.அன்பழகனும் சர்கார் படக்குழுவுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்

இந்நிலையில், சர்கார் பட விவகாரம் தொடர்பாக அந்த படத்தின் இயக்குனர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்து உள்ளார். இலவசங்களை பெறும் மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும் சர்கார் படம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே கொடைக்கானலில் போலீசாரை தாக்கிய 4 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் தியேட்டர் முற்றுகை

விஜய் நடித்து வெளியாகி வந்துள்ள சர்கார் திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகவும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போலவும் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு அண்ணா தி.மு.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் சர்க்கார் திரைப்படம் வெளியாகி உள்ள அண்ணா நகர் சினிப்பிரியா திரையரங்கம் முன்பு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் ஏராளமான அண்ணா தி.மு.க.வினர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் படத்துக்கும் அதில் நடித்த நடிகர் விஜய்க்கும் அதன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *