செய்திகள்

சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்: 40 நாட்களுக்கு மட்டுமே நீர்இருப்பு

மேட்டூர், ஜூலை 9–

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், இப்போதைய நிலையே நீடித்தால், இன்னும் 40 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டபோது 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 82.34 அடியாக குறைந்தது. கடந்த 27 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 21 அடி வரை குறைந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 104 கன அடியாக குறைந்தது.

44 டிஎம்சி தண்ணீர்

அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ள நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. அதேபோல, அணையின் நீர் இருப்பும் நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி குறைந்து வருகிறது.

இன்று மேட்டூர் அணையின் நீர் இருப்பு 44.32 டிஎம்சி மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையில் உள்ள மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் திட்டங்களுக்காகவும் அணையில் 9.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் நிலையில், இதேநிலை தொடர்ந்தால், இன்னும் சுமார் 40 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 20 நாட்களுக்குள் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கூட, பாசனத்திற்கு நீர் திறப்பதில் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *