செய்திகள்

சரியான ஆவணங்கள் இல்லாமல் கனடா சென்ற 700 இந்திய மாணவர்கள்

வெளியேற்றும் முடிவு நிறுத்தி வைப்பு

ஒட்டாவா, ஜூன் 12–

சரியான ஆவணங்கள் இன்றி கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும் முடிவை, ஆம் ஆத்மி எம்.பி.யின் கோரிக்கையை அடுத்து, கனடா அரசு நிறுத்தி வைத்துள்ளதால் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, 700 இந்திய மாணவர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் கனடா சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஜலந்தரில் உள்ள ஏஜென்ட் பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர், கனடாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பெயரில் போலி மாணவர் சேர்க்கை கடிதங்களை வழங்கியுள்ளார்.

இதை வைத்து மாணவர்கள் கனடாவில் படிப்பதற்கான உரிமத்தை பெற்றுள்ளனர். இந்த போலிக் கடிதத்தை தூதரக அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. கனடா சென்ற பின், அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்திய மாணவர்கள் சென்றபோது தான், அவர்கள் வைத்திருந்தது போலி கடிதங்கள் என தெரிந்தது.

வெளியேற்ற நோட்டீஸ்

இது குறித்து ஏஜென்ட் பிரிஜேஷ் மிஸ்ராவை மாணவர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் மன்னிப்பு கேட்டு, வேறு கல்லூரிகளில் சேர ஏற்பாடு செய்வதாக கூறி அவர்களை சமாளித்துள்ளார். இந்த மோசடியை கனடா எல்லை சேவைகள் முகமை கண்டறிந்து, போலி ஆவணங்கள் மூலம் கனடா வந்த இந்திய மாணவர்கள் 700 பேர் வெளியேறும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து அந்த மாணவர்கள் கடந்த 5-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உலக பஞ்சாபி சங்கங்களின் சர்வதேச தலைவரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான விக்ரம்ஜித் சிங் சானே, கனடா அரசுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பினார். அதில், மாணவர்கள் மோசடி செய்யவில்லை என்றும், அவர்களுக்கு போலி கடிதங்களை கொடுத்து ஏஜென்ட் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என விளக்கினார்.

இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்களை சரிபார்க்காமல் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய மாணவர்கள் கனடாவுக்குள் நுழைய குடியுரிமைத்துறையும் அனுமதித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

விக்ரம்ஜித் சிங்கின் வேண்டுகோள் கடிதத்தை அடுத்து, இந்திய மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கனடா அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *