மும்பை, பிப். 20–
சரத் பவாரிடம் உத்தவ் தாக்கரே சரணடைந்து விட்டதாக, அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா புனேவில் நடக்கும் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்துவிட்டு, கோலாப்பூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:– முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே சரத் பவாரிடம் சரணடைந்து விட்டார். பிரதமர் மோடியின் மிகப்பெரிய கட்அவுட்டை வைத்து எங்களுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்துவிட்டு, தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சரத் பவார் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்.
தேர்தல் கமிஷனின் முடிவு வரவேற்கத்தக்கது. இனி உத்தவ் தாக்கரே தரப்பினர் பாடம் கற்றுக்கொள்வார்கள். வஞ்சகத்தால் சில நாள்களுக்கு நீங்கள் அதிகாரத்துக்கு வரலாம். ஆனால், தேர்தல் களத்தில் வெற்றி பெற தைரியம் வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் 2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் 48 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அடிமைகளிடம் சின்னம்
அமித் ஷா பேச்சு குறித்து உத்தவ் தாக்கரே மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, புனே வந்துள்ள அமித் ஷா, இன்றைய நாளை மிகவும் நல்ல நாள் என்று கூறியிருக்கிறார். அவர்களுடன் சென்ற அடிமைகளுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். எனது வீட்டிலிருந்து என்னை வெளியேற்றியிருக்கிறார்கள். திருடர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது.
முன்பெல்லாம் பொதுக்கூட்டங்களில் மோடியின் முகக்கவசத்தை மக்கள் அணிந்தனர். ஆனால், இப்போது பால் தாக்கரேவின் முகக்கவசத்தை மோடி அணிகிறார். திருடப்பட்ட வில் அம்புடன் என் முன்பு வாருங்கள். என்னிடம் ஒளிரும் தீபம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று தெரிவித்தார்.
சரத் பவாரிடம் சரணடைந்து விட்டதாக அமித் ஷா கூறியது குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, “கொள்கைகளை மறந்து ஜம்மு காஷ்மீரில் முஃப்தி முகமது சயத்துடன் கூட்டணி வைத்தது யார் என்று கேள்வி எழுப்பினார்.