செய்திகள் நாடும் நடப்பும்

சரக்கு போக்குவரத்து செலவை குறைக்க மத்திய அரசு தீவிரம்


ஆர். முத்துக்குமார்


நாம் சமீபமாக கச்சா எண்ணையை ஓரளவு குறைந்த விலையில் வாங்கி வருவது அறிந்ததே. ஆனால் நம்நாட்டில் போக்குவரத்து செலவுகள் குறைந்து விடவில்லை. மாறாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சரக்கு போக்குவரத்து செலவு 13 சதவிகித அளவில் தற்சமயம் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஒத்துக்கொண்டிருக்கிறார்.

சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உச்சத்தில் இருப்பதால் அன்றாட உபயோகப் பொருட்களின் விலையும் புதிய உச்சத்தில் தானே இருக்கிறது.

இது நமது தயாரிப்பு துறைக்கு மிகப்பெரிய தலைவலியாகும்! இந்த சவாலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள நாடே மிகக் கூர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கும்.

கொரோனாப் பெருந்தொற்று, பல்வேறு பொருளாதார நெருக்கடி என பல்வேறு சவால்களை உலக நாடுகள் சந்தித்து வரும் வேளையில் இந்தியா எப்படி சமாளிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தயாராகவே காத்திருக்கிறது.

விலைவாசி கட்டுக்குள் வராமல் விஷமாய் அதிகரிக்கும்போது ஏழைத் தினக்கூலி தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமானதாகும்.

உணவுப்பொருட்களின் விலைகளில் பெரும் பங்காற்றுவது சரக்கு போக்குவரத்து செலவுகள் என்பதை மறந்து விடக்கூடாது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு போக்குவரத்துக்கான செலவினத்தை 7.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு போக்குவரத்துக்கான செலவினம் தற்போது 13 சதவீதம் என்ற அளவில்உள்ளது. இதர உலக நாடுகளின் சரக்கு போக்குவரத்து செலவினமான 8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். சரக்குகளை கையாள்வதில் ஏற்படும் அதிகசெலவினம் இந்திய ஏற்றுமதியானது உலக அளவில் போட்டியிடமுடியாத சூழலை ஏற்படுத்துகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்துக்கான செலவினங்களை குறைப்பதில் தொடர்ந்து மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதன் மூலம் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு போக்குவரத்திற்கான செலவினத்தை 7.5 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு நிச்சயம் எட்டப்படும்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல லட்சம் கோடியை செலவிட்டு வருகிறது. புதிய ரயில்வே லைன்கள் அமைப்பது, தற்போதுள்ள லைன்களை விரிவாக்கம் செய்வது, சரக்கு போக்குவரத்துக்கென தனிப் பாதை அமைப்பது உள்ளிட்டவற்றுக்காக ரூ.100 லட்சம் கோடி முதலீட்டை அரசு மேற்கொண்டுள்ளது.மத்திய அரசின் முடிவு சரக்கு போக்குவரத்து செலவை குறைப்பது மிக அவசியமானது. நாம் வங்கி சேவை துறையில் டிஜிட்டல் நவீனத்தை வரவேற்றது போல் லாஜிஸ்டிக்ஸ் அதாவது சரக்கு கையாளுமையிலும் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி வியூகம் அமைக்கப்பட வேண்டும்.

நமது சரக்கு போக்குவரத்து மிக அதிகமாக ரெயில் சேவைகளை நம்பியே இருக்கிறது. சரக்கு போக்குவரத்து உபயோகம் அதிகரித்து விட்டால் மறைமுகமாக பல எதிர்மறை விளைவுகளை நாடு சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். குறிப்பாக மாசு தூசு, கரும்புகை அதிகரித்து விடும்.

இதற்கான விடை நமது கடல் சார் பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை அதிகரித்தால் நல்லது என்பதை மறந்து விடக்கூடாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *