தெஹ்ரான், ஏப். 15–
சரக்கு கப்பலில் சிக்கிய 17 மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எம்எஸ்சி ஏரீஸ் என்னும் சரக்கு கப்பல் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. போர்ச்சுகீசிய கொடியுடன் கூடிய அந்த கப்பலில், இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்தோனியா நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் இருந்துள்ளனர். இதில், இந்தியாவை சேர்ந்த 17 மாலுமிகளும் அடங்குவார்கள். இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள், அந்த கப்பலை சிறை பிடித்தனர்.
இந்த கப்பல் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியான் கூறும்போது, ஹார்முஜ் ஜலசந்தி பகுதி அருகே ஈரான் ராணுவம் சிறை பிடித்த சரக்கு கப்பலில் இருந்த 17 இந்திய மாலுமிகளை சந்திப்பதற்கு இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி அளிக்கும் என கூறியுள்ளார்.
இதுபற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வழியே அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கப்பலில் உள்ள இந்தியர்களை விடுவிக்கும்படி ஜெய்சங்கர் கேட்டு கொண்டார்.
இந்த சூழலில், ஈரான் சிறை பிடித்த சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திப்பதற்கு வேண்டிய அனுமதியை ஈரான் அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது. இதன்படி, இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. ஈரான், நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.