செய்திகள்

சரக்குப் போக்குவரத்தில் சாதிக்க வரும் டிரோன்கள்


ஆர்.முத்துக்குமார்


மாற்றமே நிரந்தரம்! இது அரசியல் நிலையை விவரிக்க நல்ல சொற்தொடர். அது சரக்கு போக்குவரத்திலும் எதிர்பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சமீபமாக யுத்த சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் பகுதிகளில் ‘டிரோன்’ பங்களிப்பு பிரதானமாக இருப்பதைப் பார்க்கிறோம். பெரிய கனரக வாகனங்கள் போர்களத்தில் எளிதில் எதிரிகளின் பார்வைக்கு தெரிந்துவிடும். அவற்றை எளிதில் தகர்த்து விடக்கூடிய இலக்காகவும் கூட இருக்கிறது.

ஆனால் டிரோன்கள் பறவைகள் போன்ற சிறு கருவிகளாக இருக்கிறது. தொலை தூரத்தில் இருந்து இயக்கி கண்காணிக்க உதவும் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உயர்ந்துவிட்டது.

ஆனால் சமீப ஆண்டுகளில் ஒவ்வொரு டிரோனும் பிரத்தியேக வெடிகுண்டாக மாறிவிட்டது. அதாவது டிரோன்கள் கனரக இயந்திர வரிசைப் பட்டியலில் நுழைந்துவிட்டது. அவை உடனடி டெலிவரிகளுக்கும் இடர்பாடுகளை கடந்து உறுதிபட சரக்குகளை கொண்டு சேர்க்கும் சாதனமாக மாறிவருகிறது.

டிரோன் கருவிகளின் உபயோகத்தை புரிந்து கொண்டு அதன் தொழில்நுட்ப மேம்பாடுகளில் பொறியியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

டிரோன்கள் அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவரும் இத்தருணத்தில் தமிழகமும் அதன் வளர்ச்சியில் பின்தங்கி நின்றுவிடக்கூடாது என நிபுணத்துவத்துடன் வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் முன்னணி டிரோன் தயாரிப்பு நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் விவசாயத்துக்கு பயன்படும் கிசான் டிரோன்கள், வீடியோ பதிவு செய்யும் ‘டிரோனி’ டிரோன்களை விற்கிறது. இதன் புதிய ஷோரூம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் தொடங்கப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்ஆர்.வேல்ராஜ் ஷோரூமை திறந்து வைத்தார். மேலும் புதிதாக தயாரிக்கப்பட்ட ‘டிரோனி’ டிரோன் விற்பனையையும் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் டிரோன்களை சுலபமாக நுகர்வோர் வாங்குவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக பிரத்தியேக ஷோரூமை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம்தொடங்கி உள்ளது. தொழில்துறை உற்பத்தி பொருட்களை ஷோரூமில் விற்பனை செய்தால் நிச்சயம் தொழில் துறைவளர்ச்சி பெருகும். விவசாயிகள் மத்தியில் இதுபோன்ற டிரோன்களை எடுத்து சென்றால்தான், விவசாயமும் வளர்ச்சி அடையும்.அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பில் டிரோன் டெக்னாலஜி என்ற படிப்பை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறோம். நிச்சயம் அடுத்த ஆண்டு பொறியியல் படிப்பில் டிரோன் டெக்னாலஜி இடம் பெறும் என்றும் அவர் கூறினார்.

அதேபோல் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் டிரோன் பாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இருபக்க சாலையின் நடுவில் டிரோன் பாதை வழங்கினால் 20 கிலோ எடையுள்ள பொருட்களை டிரோன் மூலம்சென்னையில் இருந்து பெங்களூரு எடுத்து செல்லலாம்.

இந்தத் தொலைவை 45 நிமிடங்களில் டிரோன் கடந்து விடும். இதைச் சென்னையில் இருந்தே இயக்கலாம். இதற்காக நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

வருங்கால புரட்சி தொழில்நுட்பங்கள் பல்முனை வளர்ச்சிகளுக்கு தயாராகி விட்டது, இன்றைய கனரக வாகனங்கள் செய்யும் சாலைவழிப் பணிகளை டிரோன்கள் செய்யத் துவங்கி விட்டால் பசுமைச் சூழல் பாதுகாப்புக்கும் நல்ல முன்உதாரணமாக மாறிவிடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *