செய்திகள் நாடும் நடப்பும்

சம்பிரதாய பேச்சுகளுடன் முடிந்து விட்ட ‘டாவோஸ்’ மாநாடு


ஆர். முத்துக்குமார்


உலகப் பணக்கார நாடுகளின் தலைவர்கள் மற்றும் வளரும் தொழில் அதிபர்கள் சங்கமித்து இந்த ‘டாவோஸ்’ மாநாட்டில் பல்வேறு பொருளாதார சமாச்சாரங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா பெரும் தொற்றின் பின்விளைவுகளை பற்றியும் அதை எப்படி சமாளிப்பது என்பதையும் விவரித்தனர்.

மொத்தத்தில் இனி வர்த்தகத் துறை வெறும் பணம் சம்பாதிக்கும் துறையாக இருப்பதுடன் நின்று விடாமல் நம் பூமியை பசுமையாய் வைத்திருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளது.

கட்டற்ற வணிகத்தைக் காட்டிலும் சுதந்திரம் முதன்மையானது. தொழில் லாபங்களைக் காட்டிலும் விழுமியங்கள் முக்கியமானவை என்று இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது. இம்மாநாட்டில் உலகெங்குமிருந்து தலைவர்கள், அரசப் பிரதிநிதிகள், பொருளாதார வல்லுநர்கள் என்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 450 அமர்வுகளாக உலகப் பொருளாதார நிலை குறித்து வெவ்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.

உலகளாவிய உணவுத் தட்டுப்பாடும் சுற்றுச்சூழல் நெருக்கடியும் இம்மாநாட்டின் முக்கிய விவாதப் பொருட்களாக அமைந்திருந்தன. போர்ச்சூழலின் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, வேதியுரங்களின் விலை உயர்வு, உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு நிலவும் தடைகள் ஆகியவை விரைவில் சரிசெய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுத்துள்ள, கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைக்கும் வாகனங்கள் உற்பத்திக்கான 8.5 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பெருந்திட்டத்தில் இந்தியாவும் ஒரு நாடாக இணைந்துள்ளது. 2030க்குள் 7 ஆயிரம் கோடி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க இருப்பதாகச் சீனாவின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மாசில்லாத எரிபொருட்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பில் இந்தியத் தொழில் நிறுவனங்களும் உறுதி அளித்துள்ளன. இப்படிப்பட்ட விவாதங்கள் எல்லாமே எதிர்பார்க்கப்பட்டது தான். உண்மையில் இது தான் பேசப்படும் என்றும் ஆருடம் சொல்ல பொருளாதார நிபுணத்துவம் தேவையில்லை.

ஏதோ ஒன்றைப் பேச வேண்டும் என்ற நிர்பந்தத்திற்காக பேசப்பட்டவை என்றும் தோன்றுகிறது.

அப்படி ஒரு சளிப்பு பார்வை ஏற்பட என்ன காரணம்? உதாரணத்திற்கு ஐரோப்பிய நாடுகள் இனி கரும்புகை வெளியிடும் பெட்ரோல், டீசலுக்கு மாற்று வேண்டுமென்று கேட்டபோது நமக்கு மனதில் தோன்றியது மாற்றாக வேறு நாட்டிடம் இருந்து வாங்குவதில் ஏற்பட்டு வரும் சிக்கல் நிறைந்த உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகள் ஏற்படுத்தி வரும் தலைவலியை தீர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் பெட்ரோல், டீசலுக்கே மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க நேரம் இருக்குமா?

உண்மையில் மொத்த மாநாட்டின் மையக் கருத்தும் உக்ரைனுக்கு உதவுவது உக்ரைனில் ரஷ்யாவின் தலையீடு தவறு; ரஷ்யா மீது பொருளாதாரத் தடை என்பன பிரதானமாகப் பேசப்பட்டது.

இப்படி பெரும் பணக்காரர்கள் சங்கமித்து இருந்த ஒரு அதிகாரப்பூர்வ கூட்டத்தில் உடனடி மருத்துவ சிகிச்சைக்கு முதல் உதவியை பற்றி மட்டும் பேசியிருக்கிறார்கள். அங்கு தொலைநோக்குப் பார்வையுடன் எந்த ஒரு கருத்தும் விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.