செய்திகள்

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்தது; பெட்ரோல் டீசல் விலையும் உயர்வு

சென்னையில் கியாஸ் ரூ.915.50; பெட்ரோல் ரூ.102.66

சென்னை, மார்ச் 22–

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாற்றப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலையும் இன்று உயர்ந்தது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும்; ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 2021 அக்டோபர் மாதம் வீட்டு சிலிண்டர் 915.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் விலை கடந்த நான்கு மாதங்களாக மாற்றப்படவில்லை.

சென்னையில் ரூ.915.50

இந்நிலையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன்மூலம் சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை 915.50 ரூபாயில் இருந்து ரூ.965.50 ஆக அதிகரித்துள்ளது.

புதிய விலையேற்றத்தின்படி டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்று ரூ.949.50க்கு,கொல்கத்தாவில் ரூ.976க்கும் விற்கப்படும். அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசத்தில் ரூ.987.50க்கு விற்கப்படும்.

137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன.

ஆனால் 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கடந்த நவம்பர் 2021க்குப் பின்னர் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், ரஷ்யா மீதான உக்ரைன் படையெடுப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் ரூ.119 ஆக உள்ளது. இந்நிலையில், 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலையேற்றம் சாமான்ய மக்களை வெகுவாகப் பாதிக்கும். விலை உயர்வு மேலும் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த விலையேற்றத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.