கோமதி சமைக்கும் சமையலின் வாசம், தங்கப்பன் நாசியில் நங்கூரமிட்டு உள்நாக்கில் போய் உட்கார்ந்து தொண்டை வழியாக அமிர்தமாய் இறங்கியது.
“எங்கிருந்துதான் இந்த சமையல உங்க அம்மா கத்துக்கிட்டாளாே தெரியல? சுடு தண்ணீ வச்சா கூட , அதுவும் சுவையா இருக்கு. ரசம் வச்சா ஒரு ரசவாதியா மயக்கிப் புடுறாா. சாம்பார் வச்சா சாமியாரப் போல விபூதி அடிச்சு நம்மள அங்கேயே உட்கார வச்சு விடுவார் ; அத்தனை சுவைகளையும் உள்ளங்கையில வச்சிட்டு இருக்கா போல? எத்தனை என்று அப்பா தங்கப்பன் கோமதியைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.
” சும்மா இருங்க . உடனே ஐஸ் வச்சுருவீங்களே ? ஏதோ எனக்கு தெரிஞ்சத செய்றேன்; நீங்க புகழ்ற அளவுக்கு எல்லாம் சுவை இருக்காதுன்னு நினைக்கிறேன். என்று கோமதி சொன்னாலும் தங்கப்பன் விடுவதில்லை.
“உன் சமையல்லதானே நான் மயங்கி இந்த வீட்டுக்குள்ளே கெடக்கேன்”என்று தங்கப்பன் சொல்ல ,
“ஆமாப்பா, நீங்க சொல்றது உண்மைதான். அம்மா செய்கிற சமையல் அவ்வளவு டேஸ்டா இருக்கும் ” என்று மகள் மஞ்சு கோமதிக்கு நற்சான்றிதழ் வழங்கினாள்.
” போதும் ..போதும் அப்பாவும் மகளும் இப்படிப் பேசிப் பேசியே என்னைய சமையல் அறையிலேயே சமையல்காரியா உட்கார வச்சிட்டீங்க “என்று சமையலறையில் இருந்து கோமதி கொஞ்சம் சத்தமிட்டாலும் அந்த குரலில் அன்பு தோய்ந்திருந்தது.
” அப்பா சொல்றது உண்மை தானம்மா ” என்று சொல்லிக் கொண்டே மகள் மஞ்சுவும் சமையலறைக்குள் நுழைந்தாள். மஞ்சு, திருமண வயதைத் தொட்டு நின்றாலும் இன்னும் வீட்டிற்குச் செல்லப் பிள்ளை தான். சமையல் செய்யும் அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கழுத்தோரம் அழுத்தமாக முத்தமிட்டாள்.
” உங்க அப்பாவுக்கும் உனக்கும் சமையல் செஞ்சே என் வாழ்நாள் எல்லாம் சமையல் அறையிலேயே போயிடுச்சு” என்று கோமதி சொல்ல
” நீ சமைக்க வேண்டாம். ஒரு வேலைக்காரி வச்சிக்கம்மான்னு சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கிற ? ” என்று மஞ்சு சொல்ல
“வேண்டாம் சாமி. சமையல்காரி சமைச்சு நாம சாப்பிடனுமா என்ன? நாம வீட்ல எதுக்கு இருக்கோம். அது கூட செய்யலன்னா வேற வேலை நமக்கு என்ன இருக்கு? என்று சொல்லிக் கொண்டே சமையல் வேலையில் மூழ்கினாள் கோமதி.
“அதனாலதான் எங்களுக்கு நீ அன்னபூரணி. நீ இல்லாம எங்க உலகம் இயங்காதம்மா. உன் சமையல சாப்பிட்டு தான் இந்த உயிரும் உடம்பும் வளர்ந்திருக்கு. இன்னைக்கு நான் இவ்வளவு பெரிய ஆளா இருக்கேன்னா நீ கொடுத்த பாலும் நீ செஞ்சு போட்ட சமையலும் தான் ” என்று அம்மாவின் கழுத்தைவிடாமல் கட்டிக்கொண்டுச் செல்லமாகப் பேசிக் கொண்டிருந்தாள் மஞ்சு
அடுப்படியைச் சுற்றி நிறைய டப்பாக்கள் இருந்தன. அந்த டப்பாக்களை எல்லாம் உற்றுப் பார்த்தாள் மஞ்சுளா
” என்னடி டப்பாக்கள இப்பிடி உத்து பாக்குற ?அதுல என்ன புதையலா இருக்கு? என்று கோமதி கேட்க
புதையல விட பெரிய பொக்கிஷமே அந்த டப்பாக்கள தானம்மா இருந்தது ” என்று மஞ்சு சொல்லும் போதே அவளின் கண்கள் .
” அப்பா எக்ஸாம் பீஸ் கட்டணும் பணம் இல்லன்னு சொல்லும்போதும் இன்னும் சில தேவைகளுக்கு அப்பா கிட்ட பணம் கேட்கும் போதும் அப்பா இல்லைன்னு சொன்னாலும் இந்த டப்பாக்கள்ல இருந்து தான எனக்கு நீ பணம் எடுத்துக் கொடுப்ப. அந்த சீரக டப்பா, இந்த உப்பு டப்பா, அந்தக் கடுகு உளுந்தம் பருப்பு டப்பா, இந்த துவரம் பருப்பு டப்பா இதில் இருந்து நீ எனக்கு பணத்தை எடுத்துக் கொடுத்தது எல்லாமே நினைவில் இருக்கும்மா.நீ சமையல் மட்டும் சுவையா செய்யல என்னையும் நல்லா வளத்த ” என்று மஞ்சு கண்கலங்கிய போது
” என்ன இன்னும் சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு இருக்க.உனக்கு நான் செய்யாம யாருக்குச் செய்யப் போறேன்? “என்று மஞ்சுவைத் தேற்றினாள் கோமதி.
” இல்லம்மா, நான் சின்ன வயசுல உன்கிட்ட எவ்வளவு காசு கேட்டு தொந்தரவு பண்ணி இருக்கேன். அப்ப எல்லாம் அப்பாவுக்கு தெரியாம இந்த டப்பாக்கள்ல இருந்து தானே எனக்கு காசு, பணம் எடுத்து கொடுப்ப .இந்த டப்பாக்கள பாக்கும்போது அந்த ஞாபகம் எனக்கு வந்துருச்சு” என்று மஞ்சு கண்கலங்கிச் சொல்ல
” சரி சரி அதெல்லாம் நினைச்சு வருத்தப்படாதே. இதெல்லாம் என்னோட கடமை. நீ கலங்கி நின்னா என்னால தாங்க முடியாது” என்று சமையல் செய்து கொண்டே மகள் மஞ்சுவை ஆற்றுப்படுத்தினாள் கோமதி.
சமையலறையில அம்மாவும் மகளும் என்ன பேசிட்டு இருக்கீங்க? என்று தங்கப்பன் குரல் கொடுக்க
“ஒன்னும் இல்லைங்க”சும்மா பேசிகிட்டு இருக்கோம் என்றாள் கோமதி
“மஞ்சு ,மஞ்சு என்கிட்ட நேத்து பணம் கேட்டையே இப்ப என்கிட்ட இல்லம்மா . உங்க அம்மா கிட்ட எதுவும் இருக்கான்னு கேளு; நான் வேணா உனக்கு அடுத்த மாசம் திருப்பி தரேன்” என்று பிரகாரத்தில் இருந்து குரல் கொடுத்தார் தங்கப்பன்.
“என்னடி உங்க அப்பா கிட்ட எதுவும் பணம் கேட்டையா? என்று கோமதி கேட்க
“ஆமாம்மா என்னுடைய பிரண்டுக்கு பர்த்டே டிரஸ் எடுத்து குடுக்கலாம்னு நினைச்சேன். அதான் அப்பாகிட்ட பணம் கேட்டேன்” என்று மஞ்சு சொல்ல
“அவர் நல்ல விஷயத்துக்கே பணம் கொடுக்க மாட்டாரு. .இந்த விஷயத்துக்கு பணம் கொடுப்பாரா என்ன? சரி போயி அந்த அந்த மிளகா டப்பாவை எடுத்திட்டு வா என்றாள் கோமதி
அப்போதே மஞ்சுவின் மனதுக்குள் மகிழ்ச்சி முகிழ்ந்தது.
மிளகாய் டப்பாவில் இருந்து கத்தகத்தையாகப் பணத்தை எடுத்த கோமதி
” இந்தா பணத்த வச்சு உன் பிரண்டுக்கு டிரஸ் எடுத்துக் கொடு’’ என்று மஞ்சுவின் கையில் பணத்தை திணித்தாள் கோமதி.
“ரொம்ப நன்றிம்மா” என்று அம்மாவைக் கட்டிக் கொண்டாள் மஞ்சு.
கோமதியின் சமையல் வாசனையும் அவள் மனதின் அன்பும் அந்த வீட்டையே நிறைத்தது.
#சிறுகதை