ஐ.டி. தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு
சென்னை, அக்.2-
சமூக வலைதளங்களில் யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் இளைஞர்களை கவர வேண்டும் என அண்ணா தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில – மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடந்தது.
இதில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘அ.தி.மு.க.வுக்கு என தனி வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால் இப்போது அதில் 10 சதவீத வாக்குகளை இழந்திருக்கிறோம். இழந்த வாக்குகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கேற்ப நீங்கள் அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும். சரிவை, இனி சாதகமாக வேண்டும். அதற்கு இளைஞர் படையை நாம் கவர வேண்டும். இளைஞர்கள், புதிய தலைமுறை வாக்காளர்களிடம் சென்று நமது கட்சியின் செயல்பாடுகளை எடுத்துக்கூறுங்கள்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளைஞர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்ப கருத்துகளை பதிவிட வேண்டும். நமது கருத்துகளை யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் பதிவிட வேண்டும். இந்த முறை சமூக வலைதளங்களை நம் ஆயுதமாக்கி, நம் கட்சியின் சாதனைகள் குறித்து எடுத்து சொல்லி இளைஞர்களை கவர வேண்டும். அந்தவகையில் இளைஞர்களை அ.தி.மு.க.வில் அதிகளவில் இணைக்க வேண்டும்’ என்றும் கூறினார்.