செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புபவர்கள் மீது நடவடிக்கை : டி.ஜி.பி.

சென்னை, ஜூலை.6-

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்புபவர்கள் மீது பாரபட்சமற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் சட்டம்–ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினரிடையே மோதல்களை தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம், காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் முதல் தற்போது வரை சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் எல்லை மீறிய வகையில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த 16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் பொது அமைதிக்கும், சட்டம்–ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் உரிய முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *