செய்திகள்

சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?: முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

தர்மபுரி, மார்ச் 30–-

சமூக நீதி பேசும் டாக்டர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பாரதீய ஜனதாவுடன் கை கோர்த்தது ஏன்? என்று தர்மபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தர்மபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-–

நடக்க இருப்பது, இந்திய வரலாற்றிலேயே மிகமிக முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், இளைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அளிக்கும் வாக்கு. இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும் என்றால் முதலில் பாரதீய ஜனதா ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

பாரதீய ஜனதா என்பது சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி. சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி. நம்முடைய நாட்டை மத, இன, சாதி, மொழி அடிப்படையில் பிளவுபடுத்திக் குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பாரதீய ஜனதா. அப்படிப்பட்ட, பாரதீய ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு.

ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் டாக்டர் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். சமூகநீதிக்கு எதிரான பாரதீய ஜனதாவுடன்,சமூகநீதி பேசும் டாக்டர் ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை ரகசியமெல்லாம் கிடையாது. இந்த தர்மபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஏன் மனதில்லாமல் அங்குச் சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும். இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை.

ராமசாமி படையாச்சியாருக்கு, சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று வாழப்பாடி ராமமூர்த்தியும், வன்னிய அடிகளாரும், சி.என்.ராமமூர்த்தியும் கருணாநிதியை சந்தித்துக் கோரிக்கை வைத்தபோது, சென்னை ஹால்டா சந்திப்பில் சிலை அமைத்தவர் கருணாநிதி. அந்த நிகழ்ச்சியில், கருணாநிதியுடன் சென்னை மேயராக இந்த அடியேனும் கலந்து கொண்டேன். எந்தச் சமூகமாக இருந்தாலும் அந்தச் சமூகத்தின் மேன்மைக்காகத் திட்டங்களைத் தீட்டித் தரும் சமூகநீதி இயக்கம்தான் தி.மு.க.

ஆனால் சமூகநீதி பேசும் டாக்டர் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பாரதீய ஜனதாவுடன் கை கோர்த்த மர்மம் என்ன? பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பாரதீய ஜனதா. இது, மூத்த தலைவரான டாக்டர் ராமதாசுக்கு தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பாரதீய ஜனதா. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சியையே பாரதீய ஜனதா கவிழ்த்ததே. இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட பட்டியலின பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பாரதீய ஜனதா செய்திருக்கிறது. அதை மறந்துவிட்டாரா?

பா.ம.க.வின் சார்பில், இப்போது தேர்தல் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் என்ன சொல்லி இருக்கிறார்? 2021-ல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியிலே நடக்கிறது. அப்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த பா.ம.க. பாடுபடும் என்று சொல்கிறார்கள்.

நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது இந்த கோரிக்கையைப் பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி இப்போது கேரண்டி, கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே? சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா? மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? டாக்டர் ராமதாஸ், மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தைப் பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பாரதீயஜனதா

பிரதமர் மோடி எஜமானர் அல்ல. மக்கள்தான் மோடிக்கு எஜமானர்கள். அதை மறந்துவிடாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்னமும் மக்களிடம் நீங்கள் வாக்கு கேட்டு வருகிறீர்கள். நீங்கள் எப்படிப்பட்ட தோல்வி பயத்தில் இருக்கிறீர்கள் என்று, சிலிண்டர் விலையைக் குறைக்கும்போதே தெரிந்துவிட்டதே.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது. அரசு புதியதாக எதையும் அறிவிக்கக் கூடாது. ஆனாலும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் மேல் ஏன் இந்த திடீர் கரிசனம்? பாசம்? இரக்கம்?

திரும்பவும் நாங்கள் உறுதியோடு சொல்கிறோம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், வேலைவாய்ப்பு நாட்களை, 150 நாட்களாக உயர்த்தி, ஊதியத்தையும் 400 ரூபாயாக உயர்த்துவோம். தமிழ்நாட்டு மக்கள் 2019 தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலிலும் பாரதீய ஜனதாவை ஒதுக்கத்தான் போகிறார்கள். பாரதீய ஜனதாவுடன் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்திருப்பவர்களும், கள்ளக் கூட்டணியாகத் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டமும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

பாரதீய ஜனதாவையே விமர்சிக்காமல் பாரதீய ஜனதாவுக்கு எதிரான கூட்டணி என்று வசனம் பேசுகிறார் அவர். பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார். 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தார். அதுமட்டுமல்ல, ”எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்” என்று உழவர்களின் துயரத்தைப் பார்த்து ஏகடியம் செய்து, பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி.

மக்கள் சிரிக்கிறார்கள்

இப்போது புதிதாகத் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம். இதைக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள். பாரதீய ஜனதாவிடம் இருந்து சிறுபான்மை மக்களைக் காக்கப் போகிறாராம். இதைக் கேட்டுச் சிறுபான்மை மக்களும் சிரிக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அண்ணா தி.மு.க. -தமிழ்நாட்டை வஞ்சித்த பாரதீய ஜனதா அதனுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ள பா.ம.க. என்று இந்த மக்கள் விரோதக் கூட்டத்தை தோற்கடிக்க வேண்டும்.

அதற்கு, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெற வையுங்கள். உங்கள் வாக்கு, இந்தியாவைக் காப்பாற்றும் வாக்காக அமையட்டும். தமிழ்நாட்டைக் காக்கும் வாக்காக அமையட்டும். ஜனநாயகத்தைக் காக்கும் வாக்காக அமையட்டும். பாசிசத்தை வீழ்த்த ஜனநாயகத்தைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே!

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி (தர்மபுரி கிழக்கு), பி.பழனியப்பன் (தர்மபுரி மேற்கு), டி.மதியழகன் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி மேற்கு), செந்தில்குமார் எம்.பி., தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கிருஷ்ணகிரி பார் இளங்கோவன், தர்மபுரி டாக்டர் தருண் உள்பட கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கூடடணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *