அரசு சாராத ஒரு அமைப்பில் அடிக்கடி கூட்டம் நடக்கும். அந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் முதல் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என்று அத்தனை பேரும் கலந்து கொள்வார்கள்.
அந்த அமைப்பில் சுமார் 5000 பேருக்கு மேல் இருப்பார்கள். ஒருவர் முகம் பார்ப்பது பேசிக் கொள்வது என்பது கூட அபூர்வம். ஒரு சில நண்பர்கள் ஒரு சில வட்டத்திற்கு மட்டும் தான் இருப்பார்கள்.
5000 பேரும் அறிந்தவர்களா என்பது சந்தேகமே? இந்த ஐயாயிரம் பேர்களில் 50 நண்பர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பார்கள் .
அதில் செயற்குழு உறுப்பினர் சின்னாவும் இருந்தான். அவன் தன்னை அந்த நிறுவனத்தின் பெரிய நிர்வாகி போலவும் இந்த உறுப்பினர்களை எல்லாம் தாங்கும் பூமி போலவும் அவனுடைய பேச்சு வார்த்தைகள் அமையும் .
எந்த உறுப்பினர்களுக்கு எது வேண்டுமென்று தனக்கு எல்லாம் தெரியும் .உறுப்பினர்களுக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்வேன் என்று வாயில் மத்தளம் கொட்டியபடியே இருப்பான் சின்னா.
ஆனால் அவன் பேசுவதெல்லாம் தண்ணீரில் எழுதும் எழுத்துக்களாக இருக்கும் என்பது 5000 உறுப்பினர்களுக்கு அறியாது. பேச்சில் தேன். வார்த்தைகளில் நெய் சேரும் அளவிற்கு பேசுவான்.
எந்தக் காரியத்தைச் சொன்னாலும் அதைச் செய்து முடிப்பதாக வாக்குறுதி அளிப்பான்.
ஆனால் அந்தக் காரியத்தை சொன்னவன் பல வருடங்கள் நடந்து பார்த்தாலும் அப்போதும் நம்பிக்கை கூறிய வார்த்தைகளை தான் சொல்வானே ஒழிய நடக்காது என்று சொல்ல மாட்டான்.
காரியத்தை முடிக்கச் சொன்னவன் அவனாக ஓடும் அளவிற்கு நாட்களை தள்ளிக் கொண்டே போவான் சின்னா.
அவன் ஒரு போலி கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது அங்கு இருக்கும் உறுப்பினர்களுக்கு தெரியாது.
ஆனால் தன்னை ஒரு பிரபலமான மனிதனாகவும் அவன் பேசுவது அத்தனையும் செயல்படுத்துவதாகவும் பேசி அத்தை அத்தனை பேரையும் மயக்கி வைத்திருப்பான்.
யாராவது அவனைக் குறை சொன்னால் அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு என்று ஒரு கூட்டத்தையும் சேர்த்து வைத்திருப்பான் சின்னா.
சின்னாவை ஒரு முறை மீட்டிங்கில் ஒருவன் எதிர்த்துப் பேச எதிர்த்துப் பேசியவனை எதிர் கொண்டு பேசினார்கள் சின்னாவின் ஆட்கள்.
நீ எப்படி சின்னாவைப் பேசலாம் அவர் பத்தரை மாத்து தங்கம். நம் அமைப்புக்காக தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் செலவழித்துக் கொண்டிருக்கும் நபர்; அவரை சொல்வதற்கு உனக்கு வாய்ப்பு இல்லையா? என்று கேள்வி கேட்டவனையே எதிர் கேள்வி கேட்டு அப்படியே அமுக்கி விடுவார்கள் சின்னாவின் ஆட்கள்.
அதனால் தைரியமாக சில வாக்குறுதிகளை அள்ளி விட்டு அதைச் செயல்படுத்த முடியாமல் போனால் கூட கேள்வி கேட்க முடியாத அளவிற்கு தன்னை தயார்படுத்தி வைத்துக் கொள்வான் சின்னா.
இது அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு தெரிந்தாலும் யாரும் கேள்வி கேட்க முன்வர மாட்டார்கள்.
ஆனால் ஒருவருக்கு ஒருவர் சின்னாவின் செயல்பாடுகள் தெரியும் . அதை நேரடியாகவோ எழுத்து மூலமாகவோ புகார் தெரிவிக்க யாருக்கும் திராணி இல்லாமல் இருந்தது.
வழக்கம் போல அந்த நிறுவனத்தின் கூட்டம் நடந்து முடிந்தது.
அப்போது ஐந்து பிரியாணிப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு ஒருவன் ஓடி வந்தான்.
அங்கிருக்கும் நபர்கள் யாரும் சாப்பிடக் கூட வராத அந்த நேரத்தில் ஐந்து பிரியாணி பொட்டலங்கள் எங்கு போகின்றன? யாருக்காக போகின்றன? என்று வெளியில் வந்த சில நபர்கள் கவனித்தார்கள்.
நேராக ஓடி வந்த நபர் சின்னாவின் காரில் வைத்தான். இதைப் பார்த்த மற்ற நபர்கள் வாயடைத்துப் போனார்கள். இதுதான் சின்னாவின் சமூக சேவை என்று சொல்லி ஒருவருக்கு ஒரு சிரித்துக் கொண்டார்கள்.
பிரியாணி பொட்டலத்தைக் காரில் வைத்தவன் விழா நடக்கும் அரங்கத்திற்குள் சென்றான். பிரியாணிப் பாெட்டலத்தைப் பார்த்த நபர்களும் விழா நடக்கும் அரங்கிற்குள் சென்றார்கள்.
அப்போது இந்த அமைப்புக்காக தன் உடல் பொருள், ஆவி அத்தனையும் செலவழித்து இந்த அமைப்பு முன்னேறுவதற்கு முழு உதாரணமாக இருக்கும் சின்னாவை பாராட்டி இந்த மாலையை அணிவிக்கிறோம் என்று சின்னாவின் தாேளில் போட்டார்கள்.
சிரித்த முகத்தோடு மாலையைத் வாங்கினான் சின்னா.
மேடையில் இருந்தாலும் கூட அவனின் பார்வை, சைகை எல்லாம் ஐந்து பொட்டலம் பிரியாணியைக் காரில் சரியாக வைத்தானா? என்று அந்த டிரைவரை உற்று நோக்கினான் சின்னா.
அந்த டிரைவர் ஐந்து பாெட்டலம் பிரியாணியும் பாதுகாப்பாக இருக்கிறது என்று தன் கண் சாடையில் சொல்ல அப்போதுதான் திருப்தி அடைந்த சின்னா உறுப்பினர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டான்.
சமூக சேவை செய்யவே பிறந்த சின்னாவை வாழ்த்துவோம் .வணங்குவோம் என்ற கோஷம் அதிர்ந்து கொண்டிருந்தது .
அதில் பிரியாணிப் பொட்டலத்தை பார்த்த நபர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு சின்னாவை வாழ்த்த வேண்டும் என்ற கோஷம் வாயில் வரவில்லை .
மாறாக சிரிப்புதான் வந்தது.